1. தலைப்பு
பிறவிக்குடருக்குப் பார்வை: இறைமகிமைக்கான இறைமைந்தரின் அற்புதம்
2. திருமறை பகுதி
யோவான் 9:1-12
3. இடம் & பின்னணி
நற்செய்தியாளர் யோவான் பதிவுசெய்துள்ள 7 அற்புதங்களில், 6வது அற்புதம், பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறும் புதுமை. சிலோவாம் என்ற பகுதியில் இந்த அற்புதம் நடைபெற்றதாக நம்பப்படுகிறது.
4. விளக்கவுரை
பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் இந்தப் புதுமை, 9 ஆம் அதிகாரத்தின் முதல் ஏழு இறைவாக்கியங்களில் நிறைவடைகிறது. ஆனால், அப்புதுமையைத் தொடர்ந்து 34 இறைவாக்கியங்கள் வழியாக, நற்செய்தியாளர் யோவான், உடலிலும், உள்ளத்திலும், பார்வை பெறுவது, அல்லது, இழப்பது என்பன குறித்து ஓர் இறையியல் பாடமே நடத்துகிறார்.
இயேசுவும் சீடர்களும் நடந்து செல்லும்போது, பார்வையற்ற அந்த மனிதரைப் பார்க்கின்றனர். சீடர்களிடமிருந்து கேள்விகள் எழுகின்றன. யாருடைய பாவமோ, இவர் இந்த நிலைக்கு வந்துவிட்டார் என்ற கேள்வியைச் சீடர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். ஆனால் இயேசுவோ அந்த மனிதனை குற்றப்படுத்த விரும்பாமல் விடுதலை கொடுக்க விரும்பினார். இந்தக் குருடனைக் குணமாக்கும்போது, அவர் தரையிலே துப்பி, சேறுண்டாக்கி, அவனுடைய கண்களில் பூசினார். பின்பு சீலோவாம் குளம் சென்று கழுவ சொன்னார். அந்தக் குருடன் கிறிஸ்துவின் அன்பின் மீது நம்பிக்கையுள்ளவனாக கிறிஸ்துவின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டான். அவன் உடனடியாகக் கீழ்ப்படிந்தான். சிலோவாம் என்பதற்கு 'அனுப்பப்பட்டவர்' என்பது பொருள்" (யோவான் 9:7) என்று நற்செய்தியாளரே விளக்கம் அளித்துள்ளார். மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த 'மெசியா' அதாவது, 'அனுப்பப்பட்டவர்' இயேசுவே என்பதை நினைவுறுத்த, நற்செய்தியாளர் யோவான் 'சிலோவாம்' குளத்தைப்பற்றி இப்புதுமையில் குறிப்பிடுகிறார். விடுதலை அடைந்த அவன் கடவுளையும் கண்டு கொண்டான். அவர்கள் கண்டறிந்திருந்த அதே குருடன்தான் இன்று காண்கிறான் என்பதற்கு அவனே சாட்சியாகக் காணப்பட்டான்.
5. கருத்துரை
அந்த வாலிபனுடைய அங்கவீனத்திற்கான காரணத்தை இயேசு குறிப்பிடவில்லை. அவனோ அல்லது அவனுடைய பெற்றோரோ குற்றமற்றவர்கள் என்றும் அவர் கூறவில்லை. ஆனால் அந்த மனிதனுடைய துன்பம் இறைவனுடைய செயல்பாட்டிற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதை மட்டும் அவர் குறிப்பிட்டார். அந்தக் குருடனை நியாயம் தீர்க்கவோ, அவனுடைய குருட்டுத் தன்மைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கவோ அவர் தன்னுடைய சீடர்களை அனுமதிக்கவில்லை. “நான் என்னுடைய நாமத்தினாலோ, என்னுடைய சுய பெலத்தினாலோ செயல்படுவதில்லை. மாறாக நான் என்னுடைய பிதாவின் செயல்களை, அவருடைய நாமத்தினாலே, அவருடைய விருப்பப்படி நிறைவேற்றுகிறேன்.” தன்னுடைய செயல்களை இறைவனுடைய செயல்கள் என்று அவர் அழைத்தார். தன்னுடைய காலம் குறுகிறது என்றும் தன்னுடைய மரணம் நெருங்கிவிட்டது என்றும் அவருக்குத் தெரியும். இருப்பினும் அந்தக் குருடனைச் சுகப்படுத்தும்படி தன்னுடைய நேரத்தைச் செலவிட்டார். அந்தக் குருடனுக்கு ஜீவ ஒளியைக் கொடுத்து அவனை ஒளிர்விக்க விரும்பிய உலகத்தின் ஒளி அவரே.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments