1. தலைப்பு
அசுத்தாவியிலிருந்து விடுதலை: விசுவாசத்தைப் பெலப்படுத்தும் இறைமைந்தர்
2. திருமறை பகுதி
மத்தேயு 17:14-20
மாற்கு 9:14-29
லூக்கா 9:37-43
3. இடம் & பின்னணி
மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா என மூவரும் இந்த அற்புதத்தைப் பாதிவிட்டுள்ளனர். இயேசுவின் மறுரூப மலை அனுபவத்திற்கு மறுநாள் இந்த அற்புதம் நடைபெற்றது.
4. விளக்கவுரை
சந்திரரோகத்தினால் கொடிய வேதனைக்குள்ளாக இருக்கும் தன் மகனின் விடுதலைக்காக தன்னுடைய மகனை குணமாக்க இயேசுவின் சீஷர்களிடம் கூட்டிச்சென்றான். ஆனால் அந்த சீஷர்களுக்கு அந்த நோயைக் குணமாக்க முடியாமல் போயிற்று. இவருடைய மகன் மனநிலை சரியில்லாதவனாய், வலிப்பு நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அசுத்த ஆவியின் செயலும் அவனுக்குள் இருந்தது. இந்த மனிதன் இயேசுவும் சீடர்களும் ஜனங்களிடம் வந்தபோது ஒரு மனுஷன் இயேசுவிடம் வந்தான். அந்த மனிதன் மிகவும் தாழ்மையுடன் இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வேண்டினார். இயேசு சீஷர்களைப் பார்த்து “விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே” என்று கோபப்பட்டதைப் பார்க்கிறோம். ஏனெனில் இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பிசாசுகளைத் துரத்தும் அதிகாரத்தை ஏற்கனவே கொடுத்திருந்தார்.
அந்தத் தகப்பன் இயேசுவிடம் “எங்களுக்காக மனமிரங்கி ஏதாவது செய்யக்கூடுமானால் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினான். நீ விசுவாசிக்க கூடுமானால் ஆகும் என்று இயேசு கூறியதிலிருந்து அந்த தகப்பன் விசுவாசத்தில் குறைந்திருப்பதை அவர் அறிந்திருந்ததைப் பார்க்கிறோம். உடனே அந்த தகப்பன் நான் விசுவாசிக்கிறேன் என்று கூறிவிட்டு, தன்னுடைய அவிசுவாசம் நீங்கும் படி வேண்டினான். ஜனங்கள் கூட்டமாய்ப் பார்ப்பதற்காகக் கூடினர். இயேசு அசுத்த ஆவியை நோக்கி ஊமையும் செவிடுமான ஆவியே என்றழைத்து, இவனை விட்டுப் போ என்றும், இனி அவனுக்குள் போகக்கூடாது என்றும் கட்டளையிட்டதைப் பார்க்கிறோம். அப்பொழுது அந்தப் பிசாசு இயேசுவின் கட்டளைக்குக் கீழ்படிந்து மிகுந்த சத்தத்துடன் அவனை அலைக்களித்து அவனை விட்டு வெளியேறியது.
இயேசு செத்தவன் போல் படுத்திருந்த அந்த மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் எழுந்தான். லூக்கா 9 :42 ல் அவனை அவனுடைய தகப்பனிடத்தில் ஒப்படைத்ததைப் பார்க்கிறோம். அவருடைய சீஷர்கள் எங்களால் ஏன் அதை துரத்த முடியவில்லை என்று தனித்து போய் இயேசுவிடம் கேட்டனர். அதற்குப் பதிலாக “உங்கள் அவிசுவாசத்தினால் தான்” என்று கூறினார். கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் மலையைப் பார்த்து அப்புறம் போ என்று கூறினாலும் அது போகும் என்றார்.
5. கருத்துரை
தன்னிடம் இல்லாததை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏங்குவதும், பெற்றுக் கொள்ள துடிப்பதும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இயற்கையான குணம். தன்னிடம் குறைவாய் உள்ளதை நிறைவு செய்துகொள்ள விரும்புவதும், குறைவிற்கான காரணம் கண்டுதெளிதலும், அதை நிறைக்க முயல்தலும் பாராட்டப்படக்கூடிய பண்பாகும். சீடர்களின் உள்ளத்தில் எழுந்த, “ஏன் நம்மால் அந்த தீய ஆவியை ஓட்டமுடியவில்லை?” என்ற சந்தேகக் கேள்வியும், அவர்களை ஆட்கொண்ட அச்சமும் எதார்த்தமான ஒன்றுதான். ஏனென்று சொன்னால், இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்திருந்தார் என்று ஒத்தமை நற்செய்தியாளர்களின் நற்செய்தி பதிவுகள் நமக்கு சான்றுபகர்கின்றன.வல்லசெயல்கள் செய்த சீடர்கள், இதற்கு முன்பு பெரும்பாலும் வெற்றியை மட்டுமே பெற்றிருந்ததால், இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கு தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர்கள் நம்பியிருக்கலாம். இப்படிப்பட்ட தருணத்தில், ஒரு சிறு தோல்வி அவர்களுடைய நம்பிக்கையை ஆட்டம்காண செய்கிறது. தாங்கள் பயணித்துக் கொண்டிருந்த நம்பிக்கைப் படகு சந்தேக அலையால் தாக்கப்பட்டு நிலைகுலையும்போது சீடர்கள் செய்த செயல் நம்முடைய வாழ்விற்கும் ஒரு வழிகாட்டியாய் அமைகிறது. சீடர்கள் இயேசுவை அணுகி தங்களுடைய இயலாமைக்கு காரணம் கேட்கின்றனர்.
சீடர்களின் கேள்விக்கு இயேசு தரும் பதில் இரண்டு விதமாக ஒத்தமை நற்செய்தியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் காணமுடிகிறது. மத்தேயு நற்செய்தியாளர் சீடர்களின் தோல்விக்கு அவர்களின் நம்பிக்கை குறைவுதான் காரணம் என்று இயேசு கூறுவதாக பதிவுசெய்துள்ளார் (மத்தேயு 17:20), ஆனால் மாற்கு நற்செய்தியாளர் இறைவேண்டலின் குறைவுதான் காரணம் என்பதை சுட்டிக்காட்டுவது போன்ற அர்த்தத்தில் பதிவுசெய்துள்ளார் (மாற்கு 9:29). சீடர்களின் கேள்விக்கு இயேசு தரும் பதில் இரண்டு விதமாக ஒத்தமை நற்செய்தியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் காணமுடிகிறது. மத்தேயு நற்செய்தியாளர் சீடர்களின் தோல்விக்கு அவர்களின் நம்பிக்கை குறைவுதான் காரணம் என்று இயேசு கூறுவதாக பதிவுசெய்துள்ளார் (மத்தேயு 17:20), ஆனால் மாற்கு நற்செய்தியாளர் இறைவேண்டலின் குறைவுதான் காரணம் என்பதை சுட்டிக்காட்டுவது போன்ற அர்த்தத்தில் பதிவுசெய்துள்ளார் (மாற்கு 9:29). இந்த அற்புதம் வாயிலாக, அந்த சிறுவனின் தந்தையும், சீடர்களும் இறைநம்பிக்கையில் பெலப்பட்டனர். இறை நம்பிக்கையோடு, இறைவேண்டலில் நிலைத்திருந்து நம்பிக்கையில் நாளுக்குநாள் மிகுந்து ஆண்டவரின் அற்புதங்களையும் அதிசயங்களையும் அவனியில் அனுபவிப்போம்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments