1. தலைப்பு
கானானிய பெண்ணின் மகளுக்கு விடுதலை: புறக்கணிக்கப்பட்டோர் மீது இறைமைந்தரின் கரிசனை
2. திருமறை பகுதி
மத்தேயு 15:21-28
மாற்கு 7:24-30
3. இடம் & பின்னணி
தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்கு இயேசு செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மாற்கு நற்செய்தியாளர் அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இந்த அற்புதம் நடைபெற்றதாக எழுதியுள்ளார். இயேசு தீரு சீதோன் பட்டணங்கள் இருந்த திசையில் சென்றதாகவே மத்தேயு குறிப்பிட்டுள்ளார். (மத். 15:21) இயேசு தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளுக்குப் போனதாகக் கூறும் மாற்கு (7:24) இச்சம்பவத்தின் பின், அப்பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டாகவே அறியத்தருகின்றார். (மாற். 7:31) இதிலிருந்து இயேசு தீரு சீதோன் பகுதியில் யூதேய எல்லை வரையிலுமே சென்றுள்ளார் என்பதும் “கானானியப் பெண் இயேசுவை யூத மண்ணிலேயே சந்தித்துள்ளாள் என்பதும் தெளிவாகின்றது.
4. விளக்கவுரை
தன் மகளின் நலம் வேண்டி, இயேசுவைத் தேடிவந்த தாய், சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த ஒரு கிரேக்கப்பெண் என்று நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிட்டிருக்க (மாற்கு 7:26), நற்செய்தியாளர் மத்தேயுவோ, அவரை, ஒரு கானானியப் பெண் (மத். 15:22) என்று குறிப்பிட்டுள்ளார். இது தெளிவாக இந்த பெண் யூதப் பெண் இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. விவிலியத்தில், பயன்படுத்தப்பட்டுள்ள 'கானான்' என்ற சொல், இருவேறு பொருள்களை உணர்த்துகிறது. ‘வாக்களிக்கப்பட்ட நாடு’, மற்றும், ‘சபிக்கப்பட்ட இனம்’ என்ற, எதிரும் புதிருமான எண்ணங்களைக் குறிக்க, 'கானான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சபிக்கப்பட்டவர்கள், பாவிகள் என்று இஸ்ரயேல் மக்களால் முத்திரை குத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட 'கானான்' இனத்தைச் சேர்ந்த ஒரு தாய், தீய ஆவி பிடித்த தன் மகளைக் குணமாக்கும்படி இயேசுவைத் தேடிவந்தார். அப்பெண், 'தம் மகளிடமிருந்து பேயை ஒட்டிவிடுமாறு தாவீதின் மகன் என்று சொல்லி இயேசுவை வேண்டினார்' இதில் அந்தப் பெண்ணின் நம்பிக்கையில் உள்ள உரிமை வெளிப்படுகிறது.
இயேசு அந்தப் பெண்ணோடும் சீடரோடும் உரையாடுகின்றார். அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார். “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள். பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார். பின்பு அந்தப் பெண் வீட்டுக்குப் போய் தன் குழந்தை விடுதலைப் பெற்று படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள்.
5. கருத்துரை
நூற்றுவர் தலைவரின் பணியாளை இயேசு குணமாக்கியது (மத். 8:5-13; லூக். 7:1-10; யோவா. 4:43-54), அன்னியரான ஒருவர் உட்பட, பத்து தொழுநோயாளரை இயேசு குணமாக்கியது (லூக். 17:11-19), மற்றும், கடந்த சில வாரங்களாக, நாம் சிந்தித்துவரும் கானானியப் பெண்ணின் மகளை இயேசு குணமாக்கியது (மத். 15:21-28; மாற். 7:24-30) ஆகிய இம்மூன்று மட்டுமே, புறவினத்தாருக்காக இயேசு ஆற்றிய புதுமைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. இங்கு இயேசு சொன்ன மறுமொழி "காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல" என்பதை வைத்து, இயேசு புறஜாதியாருக்கு உதவி செய்ய மனமற்றவராக இருந்துள்ளதாகப் பலர் கருதுகின்றனர. இது தவறு. கடவுளின் இரட்சிப்பின் திட்டத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்ப்பட்டுள்ள போதிலும். அதில் புறஜாதியினருக்கு இடமில்லை எனக் கருதலாகாது. மேலும் மூலமொழியில் 7:6 இல் நாயைக் குறிக்க உபயோகிக்கப்பட்ட பதம் இவ்விடத்தில் உபயோகிக்கப்படவில்லை. இதனால் நாம் தமிழ் மொழிபெயர்ப்பிலும் “நாய்கள்” என்றல்ல “நாய்க்குட்டிகள்” என்றே இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இறை அரசின் சுவிஷேசம் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதையே இயேசு பிள்ளைகளின் அப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, இயேசு யூதரல்லாத மக்களை புறக்கணிக்கவில்லை. அப்படி அவர் உண்மையாக புறக்கணித்து இருந்தால், இந்த அற்புதம் நடைபெற்றிக்ருக்காது. அந்த பெண்ணின் விசுவாசமும் பாரட்டப் பெற்றிருக்காது. இயேசு எல்லா மக்கள் மீதும் கரிசனை உள்ளவர் என்பது உண்மை. தங்கள் முற்சார்பு எண்ணங்களாலும், மூடப்பட்ட மனநிலையாலும் இயேசுவில் தங்கள் மீட்பரைக் காண இயலாமல், இஸ்ரயேல் மக்களும் அவர்களின் மதத்தலைவர்களும் தடுமாறிய வேளையில், இயேசுவை, மீட்பர் என்று அறிக்கையிடும் கருவிகளாக, பார்வையற்ற மனிதர்கள், மற்றும், புறவினத்தைச் சேர்ந்த பெண் ஆகியோரை, நற்செய்தியாளர் மத்தேயு பயன்படுத்தியிருப்பது, நாம் இயேசுவைக் காணும் நம்பிக்கைக் கண்ணோட்டத்தை ஆய்வு செய்ய அழைப்பு விடுக்கிறது.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments