Ad Code

இயேசு கடலின்மேல் நடத்தல்: அவரே இறைமைந்தர் Miracles of Jesus

1. தலைப்பு
இயேசு கடலின்மேல் நடத்தல்: அவரே இறைமைந்தர் 

2. திருமறை பகுதி
மத்தேயு 14:22-33 
மாற்கு 6:45-52 
யோவான் 6:16-21

3. இடம் & பின்னணி
இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலில், கப்பர்நகூமுக்கு படகில் போகும் போது, இந்த அற்புதம் நடைபெற்றது. மத்தேயு பேதுருவும் கடலில் நடந்ததாக குறிப்பிட்டு உள்ளார். மாற்கு சுருக்கமாக எழுதியுள்ளார். யோவான் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அற்புதங்களில் இரண்டு அற்புதங்கள் தண்ணீருடன் தொடர்புடையன. அதில் கடலின் மீது நடந்தது ஒன்று. இவைகள் இயற்கைக்கு மாறாகச் செய்யப்பட்ட அற்புதங்கள்.

4. விளக்கவுரை
சீஷர்கள் படகில் போய்க்கொண்டிருந்தபோது பெருங்காற்றினால் கடல் கொந்தளித்தது. காற்று படகுக்கு எதிராக வீசியது. சீஷர்களோ தாங்கள் சரியாகப் போவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் உண்மையான நிலையை இயேசு கண்டார். யோவான் 6 :18 “பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.” மலையின்மேல் இருந்தாலும், சீஷர்களின் நிலைமையை அறிந்து, இரவின் நாலாம் ஜாமத்தில் கடலில் நீந்தி வராமல்,நீரின் மேல் நடந்து அவர்களிடத்தில் வந்தார். இருளின் மத்தியில் சீஷர்கள் பயந்த சூழ்நிலையில் இருந்ததால் இயேசு நடந்து வருகிறதைப் பார்த்து ஆவேசம் என்று சத்தமிட்டனர். 

சீஷர்கள் எல்லோரும் மிகவும் கலக்கம் அடைந்தனர். அதனால் இயேசு அவர்களோடே பேசி தான்தான் என்று அவர்களைத் திடன் கொள்ளச் செய்தார். பயப்படாதிருங்கள் என்று கூறினார். அவர்கள் இருந்த படகில் இயேசு ஏறினார். உடன் காற்று அமர்ந்தது அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். படகில் உள்ள அத்தனை பேருக்கும் இல்லாத ஒரு ஆசையும், வாஞ்சையும் பேதுருவுக்கு வந்தது. அந்த வாஞ்சையினால் இயேசுவிடம் தானும் இயேசுவைப்போல் கடலில் மேலே நடக்க வேண்டும் என்று கேட்டான். இயேசு வா என்று கூறினார். பேதுரு படகை விட்டிறங்கி ஜலத்தின் மேல் நடந்தான்.

காற்று பலமாக வீசியதால் அதுவரை இயேசுவையே பார்த்துக் கொண்டிருந்தவன் காற்றைப் பார்த்தவுடன் அமிழ்ந்து போகிறான். பேதுரு திறமையான மீனவன். அவன் எந்த ஆழத்தில் சென்றாலும் நீந்தி வெளியே வர அவனுக்குத் தெரியும். நடந்து இயேசுவிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பயந்தான். பேதுரு அந்த நேரத்தில் ஒரு சின்ன ஜெபத்தை ஏறெடுக்கிறான். “ஆண்டவரே இரட்சியும்” என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி “அற்பவிசுவாசியே” என்று கோபப்பட்டுத் தூக்கினார். அவர்கள் படகில் ஏறினவுடன் காற்று அமர்ந்தது. ஜலத்தின்மேல் நடப்பதற்குப் பயப்படாத பேதுரு, அதற்குச் சம்பந்தம் இல்லாத காற்றைப் பார்த்துப் பயப்பட்டது நமக்கு வியப்பை அளிக்கிறது. 

5. கருத்துரை
யோவான் 6:20 இல் இயேசு தம் சீடர்களை நோக்கி: "நான்தான், பயப்படாதிருங்கள்" என்றார். காற்றும் புயலும் அமர்ந்தது. அப்பொழுது படகில் உள்ளவர்கள் இயேசுவையும் அவரது வல்லமையையும் கண்டும் புரிந்தும் கொண்டனர். இந்த அற்புதத்தைச் செய்ததற்குக் காரணம், இயேசுவைத் தேவனுடைய குமாரன் என்று சீஷர்கள் அறிந்து, அவரைப் பணிந்து கொள்ளும்படி செய்யத்தான். இயேசுவுக்குக் கிரியை செய்ய முடியாத எந்த சூழலும் உருவானதுமில்லை, உருவாகப் போவதுமில்லை. அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments