Ad Code

இறைமைந்தரின் அற்புதங்களைப் படித்தல்: நோக்கம் மற்றும் பயன் • The Purpose of Studying the Miracles of God's Son

1. தலைப்பு
இறைமைந்தரின் அற்புதங்களைப் படித்தல்: நோக்கம் மற்றும் பயன் 

2. திருமறை பகுதி
யோவான் 20:31

3. இடம் & பின்னணி
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தோமா உட்பட சீடர்களுக்கு தரிசனம் கொடுத்த சம்பவத்தை குறிப்பிட்ட பின்பு, அற்புதங்கள் தம் நூலில் பதிவு செய்யப்பட்டதின் நோக்கம் குறித்து யோவான் நற்செய்தியாளர் எழுதியுள்ளார். 

4. விளக்கவுரை
யோவான் 20:31 சொல்லுகிறது: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன." 

திருமறையில், குறிப்பாக நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசு கிறிஸ்து செய்த நேரடியாக செய்த 35 தனிப்பட்ட அற்புதங்களும், 2 குழு அற்புதங்களும் (பலரை சுகமாக்குதல்) பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பதிவு செய்யப்படாத அற்புதங்களும் உண்டு (யோவான் 20:30).  

மக்களை மகிழ்விப்பதற்காக செய்யப்பட்ட மாயவித்தைகளாகவோ மாயத்தோற்றங்களாகவோ இயேசுவின் அற்புதங்களை வேதத்தில் வர்ணிப்பதில்லை. எல்லா அற்புதங்களும் தனித்துவம் பெற்றவை. இயேசு நடப்பித்த அற்புதங்கள் அவருடைய செய்தியுடன் பின்னிப்பிணைந்திருந்தன. இயேசுவின் செய்திக்கும் அவருடைய அற்புதங்களில் ஒன்றுக்கும் மக்கள் எப்படி பிரதிபலித்தனர் என்பதை மாற்கு 1:21-27 வெளிப்படுத்துகிறது. தாம் கடவுளுடைய குமாரன், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை இயேசு நிரூபிப்பதற்கு இத்தகைய அற்புதமான செயல்கள் அவசியமாக இருந்தன. கடவுளுடைய வல்லமையால்தான் இயேசு அற்புதங்கள் செய்தார் என்பதை வேதவசனங்களும் உறுதிப்படுத்துகின்றன.  

யோவான் 20.31 இல் ஏன் இந்த அற்புதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று யோவான் நற்செய்தியாளர் தெளிவு படுத்துகிறார். "இயேசுவை நம்பி நித்திய வாழ்வு பெறுதல் " இது தான் இயேசுவின் அற்புதங்கள் மற்றும் ஊழியத்தின் பிரதான நோக்கம் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். 


5. கருத்துரை
இயேசுவின் அற்புதங்களில், கடவுளின் கிரியையை நாம் தெளிவாக காண்கிறோம். இயேசுவின் குணமளிக்கும் அற்புதம் முழுமையானது மற்றும் சந்தேகத்திற்கு இடம் இல்லாதது. ஆனால், ஆண்டவர், அற்புதங்கள் செய்கிறவராக மட்டும் தம்மைக் காண்பிக்கவோ, அதன் மூலம் தம்மைப் பிரசித்தப்படுத்தவோ விரும்பவில்லை. கடவுளின் ராஜ்யத்தின் செய்திகளை மக்கள் தவறவிட்டு விடக்கூடாது, அலட்சியமாய் இருந்துவிடக் கூடாது என்பதுவே இயேசுவின் விருப்பமும், முக்கிய நோக்கமுமாயிருந்தது. அந்த நோக்கம் இன்றும் நம்மிடத்தில் இருக்க வேண்டும். 
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments