திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள கிறித்தவ வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் டோனாவூர்.
இவ்வூர் ஜெர்மன் நாட்டு கிறித்தவ மிஷனெரியான சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் ( 1790_ 1838) என்பவரால் உருவாக்கப்பட்டது.
இவர் 1814 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் கிறித்தவ சமயப் பணிக்கென்று வந்து, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐந்து ஆண்டுகள் சமயப்பணிகளோடு சமூகப்பணிகளும் செய்தார்.
அதன் பின்னர் 1820 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்டு பாளையங்கோட்டையை வந்தடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலுமுள்ள கிராமங்களில் கால்நடையாகவும் குதிரைகளிலும் சென்று சமயப்பணியைச் செய்திருக்கிறார்.
அவ்வாறே 1826 ஆம் ஆண்டு புலியூர்குறிச்சி என்ற ஊரிலும் சமயப்பணியைச் செய்தார்.இதன் விளைவாக, அங்குள்ள நாடார் சமூகத்தினரில் ஒருசிலர் அவரது கருத்துக்களுக்குச் செவிமடுத்து கிறித்தவத்தை ஏற்க முன்வந்தனர்.
அக்காலகட்டத்தில் உயர்சாதியினராகத் தங்களைக் கருதிக் கொண்ட ஆதிக்கவாதிகளுக்கு அடிமைகளாகவே அங்கு வாழ்ந்து வந்த மற்ற சாதியினர் இருந்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் ரேனியசின் சமத்துவத்தை முன்னிருத்தி அளிக்கப்பட்ட கிறித்தவச் சமயக்கோட்பாடுகள் அப்பகுதியின் மக்களை ஈர்த்தன.
இதனை விரும்பாத ஆதிக்கசாதியினரால் கிருத்தவத்தை ஏற்ற மக்கள் பெரும் தொல்லைக்குட்பட்டனர். அப்புதிய கிறித்தவர்களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; கொள்ளையடிக்கப்பட்டன.
இதனையறிந்த ரேனியஸ், புலியூர்குறிச்சியில் நாடார் இனமக்கள் வாழ்ந்த வடக்குப் பகுதிக்கு அருகிலிருந்த 12 ஏக்கர் நிலப்பகுதியை விலைக்கு வாங்கினார்.
அந்த நிலத்தை வாங்க அவரது நண்பரான ஜெர்மனி நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக விளங்கிய ப்ரஷ்யாவைச் சார்ந்த ஷ்லோடின் என்ற பகுதியின் ஆளுநரும் உரிமையாளருமான கௌன்ட் டோனா என்பவர் அவருக்குப் பணம் அனுப்பினார். அந்தப் பணத்தில் வாங்கப்பட்ட அப்பகுதியை, டோனா பிரபுவின் பெயரால் அக்குடியேற்றத்திற்கு டோனாவூர் என்றே பெயரிட்டார், ரேனியஸ்( Rhenius Jr.( ed), Memoir of Rev C.T.E Rhenious).
1827 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி அவ்வூர் ஏற்படுத்தப்பட்டது.
அதில் முதலாவது ஏழு குடும்பங்கள் குடியேற்றுவிக்கப்பட்டன.
இது போன்ற 30 ஊர்களை அன்றைய திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ரேனியஸ் ஏற்படுத்தியிருக்கிறார்.
இவ்வாறு ஊர்கள் ஏற்படுத்தப்படுவதை குறித்து விவிலியத்தில், "திட்டமிடாத தற்செயலாகக் கொலை செய்தவனை ஏற்று அடைக்கலம் அளிக்க நியமிக்கப்பட்ட இடங்கள் தப்பியோடுபவர்களுக்கு, நிபந்தனையற்ற பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்பட்டிருந்தன.குற்றமற்றவர்களும், குற்றவாளிகளும் , தப்பியோடும் அடிமைகள், கடன்பட்டவர்கள்,அரசியல் அகதிகள் இப்படிப்பட்ட இடங்களை அடைந்து அந்த இடத்தில் கடவுளின் பாதுகாப்பைக் கோரினால் ,அவர்கள் பழிவாங்கப்படுவதிலிருந்தும் ,
நீதித் தீர்ப்பிலிருந்தும் தப்பினர்"( I.விவிலியக்களஞ்சியம் , ப _ 77). என்று விவிலியக் களஞ்சியம் இத்தகைய ஊர்களை அடைக்கலப் பட்டணங்கள் என்று விளக்கமளிக்கிறது.
விவிலியத்தில் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் அடைக்கலப்பட்டணங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இதன் அடிப்படையில் தான் அன்றைய கிறித்தவ மிஷனெரிகள் தாங்கள் பணியாற்றியப் பகுதிகளில் கிறித்தவத்தை ஏற்றதால் மக்கள்அடைந்த துன்பங்களிலிருந்து அவர்களைத் தப்புவிக்க இத்தகைய ஊர்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
இத்தகைய ஊர்கள் ஐரோப்பியர்களான மிஷனெரிகளின் நேரடி பாதுகாப்பில் இருந்தமையால் சமூகத் தீங்கிழைப்போர்களிடமிருந்து தப்பித்துப் பாதுகாப்புடன் வளர்ச்சியடைந்தன.
டோனாவூர் உருவாக்கப்பட்ட அன்றே ஊரின் வடக்குப் பகுதியில் பனையோலைகளால் கூரை வேயப்பட்ட ஓர் ஆலயமும் கட்டபட்டது. ஓராண்டிற்குள் அவ்வூரில் மக்கள் அதிக அளவில் குடியேறி சபை நிரம்பி வழிந்தது. எனவே ரேனியஸ் அவ்வாலயத்தை 1828 ஆம் ஆண்டு பெரிதாக்கி கட்டத் தொடங்கி 1829 ல் கட்டி முடித்தார்.
1829 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமுள்ள சபைகளை மூன்று சேகரங்களுக்குள்ளாக்கி நிர்வகிக்க பிரிக்கப்பட்டன.
அவை , பாளையங்கோட்டை,
சாத்தான்குளம், டோனாவூர் என்று மூன்று வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டன.
சாத்தான்குளம் வட்டாரத்தை ஷ்மிட் ஐயரும், டோனாவூரை வின்க்ளர் ஐயரும் , பாளையங்கோட்டையை ரேனியஸ் ஐயரும் பொருப்பேற்று நடத்தினர்.
அவ்வாண்டு டோனாவூர் சேகரத்தைச் சேர்ந்த சபைகள் 44. அவற்றில் 1060 உறுப்பினர்களை உடைய 310 குடும்பங்கள் இருந்தன. தேவாலயங்கள் 5, சிற்றாலயங்கள் 10, பள்ளிக்கூடங்கள் 77, உபதேசிமார்10 இருந்தன.( டி கிறிஸ்துதாஸ்,அருள் தொண்டர் ரேனியஸ், ப_ 181)
இவ்வாறு ஊர் உருவாகி மூன்றே ஆண்டில் தனி சேகரமாக உருவாகிய டோனவூர் சேகரம் இன்று பல்வேறு சேகரங்களாகப் பிரிந்து, தாய் சேகரமான டோனாவூரைச் சூழ்ந்து ஒலிவமரக் கன்றுகளாய் செழித்து நிற்பதைக் காணமுடிகிறது.
டோனாவூர் உருவாக பணம் அனுப்பி உதவிய டோனா பிரபு இன்றும் வாழ்கிறார்,தான் உருவாக்கி தனது நண்பனின் பெயரைச் சூட்டிய ரேனியசின் தன்னலமற்ற சேவையினால்..!!
_ Dr ஜான்சிபால்ராஜ்
டோனாவூர்,திருநெல்வேலி.
0 Comments