தொடக்கத்தில் மாதத்தின் கடைசி வெள்ளி மாலை 6 மணிக்கு தொடங்கி சனி அதிகாலை 6 மணி வரை நடைபெற்றது.
ஆரம்ப காலத்தில் முழு இரவு ஜெபங்களில் கூட்டம் அலைமோதியது.....
வெள்ளி இரவு முழுவதும் கண்விழித்து விட்டு,
சனிக்கிழமை வேலைக்குச் செல்ல முடியாமல் முடியாமல் பலர் அவதிப்பட்டனர்....
இரவு முழுவதும் ஜெபம் செய்து விட்டு, சனிக்கிழமை காலையில் ஐ ஆம் சபரிங் பிரம் பீவர் என பொய்யான(!) விடுமுறை விண்ணப்பத்தை அளித்து பலர் ஓய்வு எடுத்துக் கொண்டனர்....
தூக்கமின்மையோடு வேலைக்குச் சென்ற பலர் முதலாளிகளிடம் திட்டு வாங்கினர்.....
சனிக்கிழமை கல்லூரி, பள்ளிக்குச் சென்றவர்கள் அங்கேயே தூங்கி விழுந்தனர்....
விளைவு....
முழு இரவு ஜெபத்தை சனிக்கிழமை இரவுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது...
உடனடியாக பாதிரியார்கள் ஆலோசனை செய்தனர்....
சனிக்கிழமை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்...
காரணம்.....
சனிக்கிழமை முழுவதும் கண் விழித்து விட்டால்,
மறுநாள் காலை ஞாயிறு காலை ஆராதனைக்கு கோவிலுக்கு ஒருத்தரும் வர மாட்டார்கள்....
காணிக்கை குறைந்து விடுமே என பாதிரியார்கள் அஞ்சினர்.....
சனிக்கிழமை நடத்தினால் சபையின் எந்த இடத்தையும் தர மாட்டோம்....
அதையும் மீறி நடத்தினால் முழு இரவு ஜெபத்தையே தடை செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டது....
வீர கிறிஸ்தவர்கள் வேறு வழியில்லாமல், ஒரு சில மாதத்திலேலேய முழு இரவு ஜெபம் வெள்ளி இரவு 9 மணிக்கு தொடங்கி, சனி காலை 5 மணி வரை என மாற்றி அமைத்தனர்.....
ஆரம்பத்தில் கூடிய கூட்டம் வர வர சிறுத்துப் போனது...
கூட்டத்தை அதிகப்படுத்த இரவு 12 மணி ஆனதும் கடுங்காப்பியும், முறுக்கு, மிக்சர், காரச்சேவு என நொறுக்குத் தீனிகள் வழங்கப்பட்டன....
நாசரேத்தில் கடுங்காப்பி போட வாங்கிய கருப்பட்டியில் ஊழல் நடந்து விட்டதாக பெரும் பிரச்சனையே எழுந்தது..
முழு இரவு ஜெப பொறுப்பாளராக இருந்த ஐயாத்துரை அவர்கள் மாற்றப்பட்டார்.....
பையை நீட்டி எடுக்கும் காணிக்கையில் பெரும் தொகை கடுங்காப்பி மற்றும் ஸ்நாக்ஸ்க்கு செலவு ஆவதாக பொருளாளர் வைத்த குற்றச்சாட்டை முன்னிட்டு, ஸ்நாக்ஸ் வழங்க ஸ்பான்சர்களை தேடி ஒவ்வொரு வாரமும் அலைந்தனர் பொறுப்பாளர்கள்....
அண்ணாச்சி, நீங்க 10 கிலோ கருப்பட்டி தாங்க....
ஐயா, நீங்க 5 கிலோ முறுக்க வாங்கி தாங்க....
சார், நீங்க 5 கிலோ காராச்சேவு வாங்கி குடுத்துருங்க....
அநேகர் காப்பி குடித்து, முறுக்கு தின்று விட்டு, பைபிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தனர்.
காப்பி குடித்து, முறுக்கு தின்று விட்டு கிளம்பும் கூட்டம் வர வர அதிகமாகிப் போனது....
இருக்கும் மீதிப்பேர் அங்கேயே தூங்க ஆரம்பித்தனர்....
1 மணிக்கு மேல் அல்லேலூயா போட ஆள் இல்லை.....
முழு இரவு ஜெபத்திற்கு போகிறேன் என வீட்டில் சொல்லி விட்டு, இளைஞர்கள் பலர் செகண்ட் ஷோ சினிமாவுக்கு செல்லவும் இது வசதியாக அமைந்தது.....
வாலிபப் பிள்ளைகள் யார், யார் வருகிறார்கள் என நோட்டம் விட வரும் இளைஞர் படையால் ஒருபக்கம் சில தொந்தரவுகள் வேறு முளைத்தன....
அந்த இளைஞர் படையை கண்காணித்து, கவனிக்க என்னைப் போன்ற நல்ல பையன்களுக்கு பணி வழங்கப்பட்டது....
ஆனாலும், வர வர கூட்டம் டல்லடித்தது....
கூட்டத்தை அதிகப்படுத்த, இனி மாதந்தோறும் சிறப்பு செய்தியாளர் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து, யார் பிரசங்கம் செய்ய வருகிறார் என நோட்டீஸ் அச்சடிக்க முடிவானது....
மாதம் ஒருமுறை 1000 நோட்டீசும் அச்சடித்து தர ராஜன் பிரஸ் உரிமையாளர் ஒப்புக்கொண்டார்....
ஆனாலும் கூட்டம் குறைந்து கொண்டே போனது.....
காணிக்கை பணம் கொஞ்சம் செழிப்பாக சேர்ந்ததும், முழு இரவு ஜெபம் ஆண்டு விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது.
சிறப்பு செய்தியாளர்களாக வேதநாயகம் சாஸ்திரியார், சாம் ஜெபத்துரை போன்றோர் வரவழைக்கப்பட்டு 6 நாட்கள் கன்வென்சன் கூட்டம் அமர்க்களமாக நடைபெற்றது...
அதற்கு முன் எந்த கன்வென்சன் கூட்டமும் சபையில் 3 நாட்களுக்கு மேல் நடைபெற்றதில்லை....
இப்படியே பல வருடங்களாக நடைபெற்ற முழு இரவு ஜெபம் பின்னாளில் இரவு 9 மணிக்கு தொடங்கி, மூன்றே மணி நேரம் மட்டும் நடத்தி 12 மணிக்கு முடிக்கப்பட்டது....
இதற்கு பெயர் முழு இரவு ஜெபமா? என கேள்வி எழுப்பப்பட்டது...
எனவே முழு இரவு ஜெபம்.... முன் இரவு ஜெபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது....
அதற்கும் கூட்டம் வரவில்லை...
இனி என்ன செய்யலாம்? என்ற தீவிர ஆலோசனைக்குப் பிறகு, வருகிறவர்கள் பெயர்கள் ஒரு தனித்தனி தாளில் எழுதி, குலுக்கல் முறையில் குக்கர் அல்லது சில்வர் பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது.....
குக்கர் பரிசு என்றதும் வீட்டில் தூங்குவதை அங்கே போய் தூங்கினால் ஒருவேளை குக்கர் கிடைத்தால் லாபம்தானே என கூட்டம் சும்மா அள்ளியது.....
குக்கர் வாங்கித்தரும் ஸ்பான்சர் சரிவர மாதம்தோறும் கிடைக்கவில்லை....
காணிக்கை காசில் வாங்கலாமா? என்றால், காணிக்கை காசில் குக்கர் வாங்கி, அது யாருக்கு விழுகிறதோ அவரு(ளு)க்கு வேண்டாதவன் கண்டிப்பாக ஒருவன் இருப்பான்.
அவரா(ளா)ல் பெரும் கலவரமே எழும் என்ற சூழ்நிலை நிலவியதால் குக்கர் திட்டம் கைவிடப்பட்டது....
இறுதியில் முழு இரவு ஜெபம் என்றால்,
அதை நடத்துபவர், மைக்செட்காரர், பாடல் பாடுபவர்,
கீ போர்டு வாசிப்பவர் ஆகமொத்தம் 4 பேர் என்ற நிலையில் போய் நின்றது....
எனவே இப்போது பெரும்பாலான இடங்களில் முழு இரவு ஜெபத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது.....
இப்போது ஒருசில இடங்களில் அது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற நிலைக்கும் சென்று விட்டது....
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போன முழு இரவு ஜெபம் மீண்டும் புத்துயிர் பெற இனி என்ன செய்யலாம்? என்ற தீவிர சிந்தனையில் இப்போது அதன் பொறுப்பாளர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கினறனர்...
உங்களுக்கு ஏதாவது ஐடியா தோன்றினால் சொல்லுங்கள்...
நல்ல ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.....
0 Comments