இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள். இந்த ஆண்டு ஒவ்வொரு மாதப்பிறப்பிலும் "இறையதிகாரம்" (Divine Sovereignty) என்ற தலையங்கத்தின் கீழ் தியானிக்கிறோம். அதில் இந்த மாதம், முடித்துக்காட்டும் இறையதிகாரம் என்ற கருப்பொருளை வைத்து சிந்திப்போம். அதற்கு ஆதாரமாக, யோபு 42.2
"தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்."
1. நினைத்ததை முடித்துக்காட்டும் இறையதிகாரம்
கடவுள் நினைத்த காரியம் நடந்தே தீரும். மனிதர்கள் நாம் நினைத்த, எண்ணிய அல்லது திட்டமிட்ட காரியங்கள் நடைபெறாமல் போகலாம். ஆனால், கடவுள் செய்ய நினைத்த எதுவும் நடக்கும். யோபு 23:13 சொல்லுகிறது: அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார். அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
2. தடைகளைத் தாண்டி முடித்துக்காட்டும் இறையதிகாரம்
கடவுள் தடைகளை தாண்டி செயல்படக் கூடியவர். தடைகள் வரும் போது, மனிதர்கள் நாம் சோர்ந்து போகின்றோம்; ஆரம்பித்த காரியங்களை இடையில் கூட விட்டுவிடுகின்றோம். ஆனால் கடவுள் தாம் செய்ய ஆரம்பித்தவற்றை செய்து முடித்துக் காட்டும் அதிகாரம் உள்ளவர். கடவுளின் திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. ஏசாயா 14:27 சொல்லுகிறது: சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?
3. அனைத்தையும் முடித்துக்காட்டும் இறையதிகாரம்
இந்த உலகில் ஒவ்வொரு துறையில் அதிகாரம் படைத்தவர்களுக்கும் அவரவர் துறையில் மட்டுமே காரியங்களை நடப்பிக்க அதிகாரம் உண்டு. மேலும் அவற்றை முழுமையாக பயன்படுத்துவதும் கடினம். ஆனால், கடவுளின் அதிகாரத்துக்கு எல்லை இல்லை; முடிவு இல்லை. அவர் அனைத்தையும் செய்து முடிக்க அதிகாரம் கொண்டவர். "கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை" (லூக்கா 1.37)
நிறைவாக...
நீங்களும் நானும் எல்லாம் வல்ல அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறோம். அதை உணர்ந்து கொண்ட யோபு பக்தன் அறிக்கை செய்யும் வாக்கியம் தான் யோபு 42. 2. கடவுள் யோபுவின் வாழ்வில் செய்ய நினைத்ததை செய்து முடித்தார்; பிசாசின் தடைகளை தாண்டி செய்து முடித்தார்; அனைத்தையும் இரட்டிப்பாய் கொடுத்தார். அவரிடம் நாமும் யோபு போல் நம்மைத் தாழ்த்தி சரணடைவோம்; இறையாசீர் பெறுவோம்...
0 Comments