தெரசா கொல்கொத்தா சென்றிருந்த புதிதில், ஒரு நாள் மாலை வேளையில் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார்.
அப்போது இல்லத்தில் இருந்த சகோதரிகள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தெரசாவிற்கு அவர்களோடு அமர்ந்து பேசலாமா? வேண்டாமா? என்று சிறிது தயக்கம் ஏற்பட்டது. அவரது தயக்கத்தை உணர்ந்த இல்லத் தலைமை அருள் சகோதரி அவரை தன்னிடம் வரவழைத்தார். பின்னர் அவர் தெரசாவிற்கு அங்கிருந்த அருள் சகோதரிகள் அனைவரையும் அறிமுகப் படுத்தினார். இதைத் தொடர்ந்து தெரசா அவர்களோடு இயல்பாகப் பேசத் தொடங்கினார்.
கொல்கொத்தாவில் லொரேட்டோ அருள் சகோதரிகள் கல்விப் பணியைப் பிரதானப் பணியாகச் செய்து வந்தார்கள். மேலும் அங்கு அவர்கள் நடத்தி வந்த புனித மரியன்னை பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் பாடம் நடத்துவதற்குச் சரியான ஆசிரியர் இல்லை என்பது தெரசாவிற்கு தெரிந்திருந்தது.
தனக்கு வரலாறு மற்றும் புவியியல் பாடங்களை நன்றாக நடத்த வரும் என்பதால் தெரசா தலைமை அருள் சகோதரியிடம் தனக்கு அந்தப் பணியிடத்தைக் கேட்கலாம் என்று நினைத்தார். ஆனாலும் அவருக்குள் ஒரு சிறு தயக்கம் இருந்தது. முடிவில், தெரசா தலைமை அருள் சகோதரியிடம், "பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களை நடத்துவற்குச் சரியான ஆசிரியர் இல்லை என்று கேள்விப்பட்டேன். நான் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களை நன்றாக நடத்துவேன். அதனால் எனக்கு நீங்கள் அந்தப் பணியிடத்தைத் தந்தால், அதை நான் திறம்படச் செய்வேன்" என்றார்.
தெரசா இவ்வாறு சொன்னதைக் கேட்டதும் தலைமை அருள் சகோதரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. "நாளைய நாளில் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடம் நடத்து. அதை நீ நன்றாக நடத்தினால் உன்னையே நான் அந்தப் பணியிடத்தில் அமர்த்துகிறேன்" என்றார் அவர். தெரசாவும் அதற்குச் சரியென்று கேட்டுக் கொண்டார்.
மறுநாள் காலையில் தெரசா மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடத்தை நடத்திய விதத்தைக் பார்த்து வியர்ந்து போன தலைமை அருள் சகோதரி அவரையே வரலாற்று ஆசிரியராக நியமித்தார்.
பேரறிஞர் பிளேட்டோ இவ்வாறு கூறுவார்: "ஒளிரும் தீப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதுபோல் ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்."
தெரசாவும் ஒளிரும் தீப்பந்தமாய்த் தான் கற்றதை மற்றவருக்குக்குக் கற்றுத்தரும் நல் ஆசிரியராகத் தன்னை அர்ப்பணித்தார். நாமும் தெரசாவைப் போன்று மக்களுக்கு நல்லவற்றைக் கற்றுத் தந்து இறையாசியைப் பெறுவோம்.
0 Comments