1. ஞாயிறு குறிப்புகள்ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் பத்தாம் ஞாயிறு
தேதி: 13/8/2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
தீத்து 3. 3 - 8
யோவான் 3. 1-8
சங்கீதம்: 32
2. திருவசனம் & தலைப்பு
திருமுழுக்கு - கொலோசெயர் 2:12
(பவர் திருப்புதல்) 12 ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
(திருவிவிலியம்) நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்.
3. ஆசிரியர் & அவையோர்
திருத்தூதர் பவுல் கொலோசே பட்டணத்திலுள்ள கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும், கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற சகோதரர்களுக்கு எழுதுகிறார். (கொலோசெயர் 1:1;4:18). இந்த கடிதத்தை எழுதும் பொழுது அவரோடு இணைந்து ஊழியம் செய்த உத்தம குமாரனாகிய திமோத்தேயுவை அங்கிகரிக்கும் வண்ணமாக அவருடைய பெயரையும் சேர்த்து எழுதுகிறார். மேலும் இந்த கடிதம் கொலோசெ பட்டணத்தில் உள்ள விசுவாசிகளிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா திருச்சபையில் வாசிக்கப்பட வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார். (கொலோசெயர் 2: 1; 4:16).
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
பவுல் தன்னுடைய சிறையிருப்பின் காலத்தில் நன்கு கடிதங்களை எழுதினார் என்று சொல்லப்படுகிறது அவை எபேசியர், பிலிப்பியர், பிலமோன், மற்றும் கொலோசெயர் ஆகிய கடிதங்கள் ஆகும். இவையாவும் “The Pauline prison Epistles” என்று அழைக்கப்படுகிறது. வேத வல்லுநர்கள் இந்த கொலோசெயர் கடிதம் ஆனது பவுலின் சிறையிருப்பின் காலத்தில் அதாவது கிபி 61 Or 62-ம் ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். (Act 28:30-31, Col 4:10,18).
கொலோசெ பட்டணம் ஆனது சின்ன ஆசியாவில் உள்ள ஒரு வளர்ந்து வந்த ஒரு பட்டணமாகும், இப்போது இந்த பட்டணம் துருக்கி நாட்டில் இருக்கிறது. பவுல் எபேசுவிலே மூன்று ஆண்டுகள் (Act 20:31) தங்கி ஊழியம் செய்த பொழுது எப்பாப்பிரா பவுலின் நற்செய்தியினால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர் ஆனார் என்றும் அவர் முலமாக கொலோசெ பட்டணத்தில் திருச்சபை தோன்றியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ( Col 1:7-8; 4:12 Act 19:10). மற்றும் எப்பாப்பிரா அல்லது பவுலின் மூலம் மனம் திருந்தியவர்கள் சிதறி போய் லவோதிக்கேயா மற்றும் எராப்போலியாவிலும் திருச்சபையை நிறுவிய இருக்கலாம் என்று வேத வல்லுநர்கள் சொல்கிறார்கள்.(Col 4:13)
இந்த கொலோசே திருச்சபையானது புறஜாதி மக்கள் அதிகமாகவும், யூத மக்கள் குறைவாகவும் கொண்ட ஒரு திருச்சபை ஆகும். இந்த கடிதத்தை பவுல் எழுதுவதற்கான நோக்கம் கொலோசெ திருச்சபையில் குழப்பத்தை உண்டாக்க கூடியதாக காணப்பட்ட மாறுபட்ட உபதேசங்களான ஞானவாத தத்துவ கொள்கை மற்றும் யூத கொள்கைகள் ஆகும். இதற்கு தீர்வு காண இக்கடிதம் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
5. திருவசன விளக்கவுரை
இந்த நிருபம் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்தவ மக்கள் இடையே பலவித குழப்பங்களும், உலகத்தோடு ஒத்த வாழ்வும் காணப்பட்டது. இதைக் களைய தான் கையால் செய்யப்படாத விருத்தசேதனமாகிய (கொலோ 2.11) திருமுழுக்கு என்னும் உடன்படிக்கையின் சாரம்சத்தை பவுல் விளக்கிக் கூறுகின்றார்.
திருமுழுக்கு என்பது அடக்கம் மற்றும் எழுதல் இரண்டையும் உள்ளடக்கியது. இந்த செயல்கள் மனித ஞானத்தால், பெலத்தால் கூடாதவை. இது கடவுளின் செயல் என்று பவுல் கூறுகிறார். மேலும் அந்த இறை செயல் மீதுள்ள விசுவாசம் தான் கிறிஸ்தவ வாழ்வை தொடர வழிவகுக்கிறது என்று சொல்லுகிறார். ஆகவே தான், கிறிஸ்துவோடு அடக்கம், மற்றும் கிறிஸ்துவோடு எழுதல் கிறிஸ்துவோடு வாழ அடித்தளம் என்று கருதப்படுகிறது. அடக்கம் என்பது பாவத்திற்கு செத்து போவது, அதாவது பாவ வாழ்வை விட்டு விடுவது. எழுதல் என்பது புதிய வாழ்வை தொடங்குவது, அதாவது பரிசுத்தமாய் வாழ்வது எனலாம்.
கிறிஸ்துவை அறிந்து, அவரை நம்பி, அவரை பின்பற்ற ஆரம்பித்த பிறகுள்ள வாழ்விற்கும், அதற்கு முன்னுள்ள வாழ்விற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இவ்விரு வாழ்விற்கும் இடையில் வாழ்க்கையின் மாற்றத்திற்கான திருப்பு முனையில், அந்த மாற்றத்தை பெற்றமைக்கான நம்பிக்கையை தருவதும், அதை வெளிப்படுத்த வழிவகுப்பதும்தூய திருமுழுக்கே.
6. இறையியல் & வாழ்வியல்
திருமுழுக்கு சிறுபிள்ளைகள் பெறுவது நம் திருச்பையின் மரபு. பிள்ளைகள் வளரும் போதே, அவர்கள் கிறிஸ்துவுக்குள் வளர வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இதில் பெற்றோர், ஞானப் பெற்றோர் தங்கள் கடமைகளை ஆற்ற தவறும் போது, திருமுழுக்கின் சாராம்சம் இல்லாமல் போய்விடுகிறது. ஆகவே, கிறிஸ்தவ பற்றுறுதியில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். மேலும் பருவங்கடந்த திருமுழுக்கு பெறுவோரும், தாங்கள் எடுத்த உறுதிகளில் நிலைத்திருந்து சாட்சியாக வாழ்வதில் தான் திருமுழுக்கின் மேன்மை உள்ளது.
இன்றைக்கு திருமுழுக்கு என்பது சபை உறுப்பினர் அந்தஸ்து பெற, சபை மாற, திருமணம் முடிக்க, மற்றும் கல்லறை தோட்டத்தில் இடம் பெற என மக்கள் தவறாக எடுத்துக் கொண்டு செயல்படும் அளவிற்கு பல இடங்களில் அர்த்தமற்ற ஒன்றாக மாறி வருகிறது. திருச்சபை திருமுழுக்கின் முக்கியத்துவம் குறித்து போதிப்பதோடு நின்றுவிடாமல், அதை செயல்படுத்துவதில் மிகுந்த கிராமமாக முனைப்புடன் வழிவகுக்க, ஆலோசனை கொடுக்கப்பட வேண்டும்.
7. அருளுரை குறிப்புகள்
திருமுழுக்கு • Holy Baptism
1. விசுவாசத்தின் மறை பொருள்
2. உள்ளான மாற்றத்தின் அடையாளம்
3. இறை செயலின் வெளிப்பாடு
எழுதியவர்
திரு. மே.யே.கோல்டன் ரதிஸ்
சபை ஊழியர்
இராமையன்பட்டி.
0 Comments