1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்.திரு.பின்.25 ம் ஞாயிறு
தேதி: 19.11.2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: 2 இரா: 5:1-4, மாற்கு:5:21-24,35-41, அப்:12:11-17 & சங்:127
2. திருவசனம் & தலைப்பு
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்தல்
சங்கீதம்:127:3 (பவர் திருப்புதல்)
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம்:127:3 (திருவிவிலியம்)
பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.
3. ஆசிரியர் & அவையோர்
சங்கீத புஸ்தகம், வேதாகம பாடல்கள், விண்ணப்பங்கள், ஜெபங்கள் ஆகியவை அடங்கிய மற்றும் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட தொகுப்பாகும். இந்த 127 - ஆம் சங்கீதம் தாவீதின் குமாரனும், வாரிசுமான சாலமோன் ராஜாவால் எழுதப்பட்டது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்த சங்கீத புஸ்தகங்கள் பலநூற்றாண்டு காலப்பகுதியை கொண்டுள்ளவைகள். சுமார் கி.மு 586 முதல் கி.மு 538 -க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என வேத ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றன. இந்த 127 - வது சங்கீதம் முழுமையும் ஆண்டவரின் முழுமையான ஆசீர்வாத்தை நமக்கு உணர்துவதாய் அமைந்துள்ளது.
5. திருவசன விளக்கவுரை
சங்கீதம் 127 என்பது ஏறுதல்களின் பாடலாகும், அதாவது எருசலேமுக்கு ஜனங்கள் மேல்நோக்கிப் பயணம் செய்யும் போது பாடக்கூடிய பாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அதிகாரத்தினுடைய ஆசிரியர், ஒரு சந்ததி மனிதனால் உருவாக்கப்படுவதில்லை, அது கர்த்தரின் கரத்திலிருந்து கிடைக்கும் பரிசு. அவர் குறிப்பிடும் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் அவைகள் முதன்மையானவை. மேலும் கர்ப்பத்தின் கனி அவருடைய வெகுமதியாகும் என குறிப்பிடுகிறார். இஸ்ரவேலரைப் பொறுத்தவரை, பல பிள்ளைகளை கொண்ட குடும்பம் தெய்வீக தயவின் மிகப் பெரிய நிரூபணமாக இருந்தது. 1 நாளாகமம் 26:4-5 -ல்
ஓபேத்ஏதோமுக்கு எட்டு பிள்ளைகள், தேவன் அவனை ஆசீர்வதித்தார் என பார்க்கிறோம்.
ஆதி: 4:1- ல் ஏவாள் தன் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, கர்த்தரிடமிருந்து குழந்தை பெற்றாள் என்பதை உணர்ந்தாள்.
ஆதி: 30: 20 - ல் லேயாள் தன் ஆறாவது மகனைப் பெற்றெடுத்தபோது, தேவன் எனக்கு ஒரு நல்ல ஈவை கொடுத்தார் என்று அறிக்கையிடுவதை பார்க்கலாம்.
மத்தேயு 19:14 - ல் இயேசு கிறிஸ்து குழந்தைகளை தேவனுடைய ராஜ்யத்திற்குரியவர்களாகவே நடத்தினார். அவர் அவர்களை ஆசீர்வதித்து, சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வரட்டும், அவர்களைத் தடுக்காதீர்கள், ஏனென்றால் பரலோகராஜ்யம் அத்தகையவர்களுக்கு உரியது என்றுரைத்தார்.
6. இறையியல் & வாழ்வியல்
ஒரு யூத குலத்தவன் காலையில் எழுந்ததும் தான் ஒரு பெண்ணாக பிறவாததற்கு உமக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி ஜெபிப்பார் என குறிப்பிடப்படுகிறது.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் இரண்டாம் நிலையில் வைத்து பார்க்கப்படுகின்றன. இந்த பழக்கம் கிழக்கத்திய நாடுகள் அனைத்து சமூகத்திலும் காணப்படுகிறது. வீட்டில் பயன்படுத்தும் ஒரு பொருளைப் போல பெண்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் அநேக பெண்களின் சிறப்புமிக்க குணநலன்கள் & திறமைகளை பார்க்கிறோம்.
முன்பு, பெண் சிசு பிறந்தது என்றால் அதை கொல்ல துணிந்த பெற்றோர் அனேகர். இன்று வீதிகளில் வித்தியாசம் பாராமல் வீசப்படுகிற குழந்தைகள் எத்தனை? அவர்களின் நிலை என்ன? ( https://www.maalaimalar.com/tags/குழந்தை-கொலை )
வேதம் நமக்கு கற்றுகொடுக்கிறது, இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் என்று.
இன்றைக்கு எல்லா தேசங்களிலேயும் சிறந்த மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும், எல்லா துறைகளிலும் சாதனைகளை புரிகின்ற பெண்களின் நிலை உயரவும், திருச்சபையாக, குடும்பமாக,
எல்லா பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக அதிகமாய் ஜெபிப்போம்.
Written by
Mr. D. Joel Raja Singh
Catechist, KTC Nagar Pastorate
CSI Diocese of Tirunelveli
0 Comments