SMC Lenten Meditation 2024
தியானம்: 9 / 40 - தெரிந்துகொண்ட தாசன்
எழுதியவர்: செல்வன். ம. ஜெய பிரகாஷ்
தலைப்பு:
தெரிந்துக் கொண்ட தாசன்
மத்தேயு 12:18 இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன்...
வசன இருப்பிடம்:
மத்தேயு 12:18 ஏசாயா 42:1
தலைப்பின் அர்த்தம்:
தாசன் என்பதன் தமிழ் அர்த்தங்கள் அடியவன், அடிமை, பின்பற்றுபவன், பக்தன் ,சீடன், பணியாள் என்பனவாகும். ஊழியன் என்ற பதமும் பயன்படுத்தப்படும். தாசன் என்ற சொல்லின் வரையறையானது, இறை வழிபாட்டில் தீவிர ஈடுபாடு உடையவர் என்பனவாகும்.
விளக்கவுரை:
ஏசாயா 42:1 இல் ஏசாயா தீர்க்கதரிசியினால் விளம்பின வார்த்தை மத்தேயு 12:8 இல் நிறைவேறின. வார்த்தையானது, "இதோ, நான் தெரிந்து கொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்கு பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர் மேல் ஊற்றுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்" (மத்தேயு 12:8)
"வார்த்தையாம் கடவுள், அருளிய வார்த்தை, வார்த்தையான கடவுளை பற்றி தொனித்தது"
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் ஏசாயாவின் மூலமாக தீர்க்கதரிசனமாக உரைத்த இவ்வார்த்தையானது, மூவராகிய ஏக கடவுள், தாமே மனுவுரு எடுத்து, குமாரனாய் (இயேசுவாய்) இவ்வுலகத்திற்கு வந்து ஆவியினாலும், உண்மையினாலும், மெய்யான தேவனை குறித்தும், அவருடைய இராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை குறித்தும் கடவுளை அறியா புறஜாதியார்களிடத்தில் "நியாயத்தை" அதாவது கடவுள் யார் என்னும் உண்மை அவரின் மகத்துவம் ஆகிய நற்செய்தியினை விளங்க செய்ய பிதாவானவர், தன் ஒரே குமாரனை இவ்வுலகத்தில் அனுப்பினார் என்பதை மற்றவர்கள் அறியும் பொருட்டாக "நான் தெரிந்து கொண்ட என்னுடைய தாசன்" இவர் தான் என்று உரைக்கிறார்.
முடிவுரை:
இதை போன்று தான் நம்மையும் பார்த்து
கடவுள் கூறுகிறார்: நீ, நான் தெரிந்து கொண்ட என்னுடைய தாசன் என்று, கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இவ்வுலகில் நம்மைவிட பல நல்லவர்கள் இருப்பினும், நம்மை தெரிந்து கொண்டுள்ளார் என்றால் நம்மை அவர் எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும். நாமும் இயேசுவைப் போன்று பல்வேறு வகையில் தெரிந்து கொள்ளப்பட்ட தாசர்களாய் இருப்பதினால் அவரைப் போன்று நமக்கு அருளப்பட்டிருக்கிற, நம்மோடு இருக்கிற தூய ஆவியானவரைக் கொன்டு நாமும் கடவுளின் நியாயத்தை, கடவுளை அறியா பிறருக்கு அறிவிக்க வேண்டும். "அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்" (மத்தேயு 22:14) எனும் வார்த்தைபடி தெரிந்துகொள்ளப்பட்ட நாம் அவரின் சித்தத்தை செய்திட ஆவியானவர் நம்மை நடத்துவாராக, ஆமென்.
0 Comments