SMC Lenten Meditation 2024
தியானம்: 8 / 40 - தச்சன் / யோசேப்பின் / மரியாளின் குமாரன்
எழுதியவர்: செல்வன். ரா. அருண் பாலசிங்
தலைப்பு :
தச்சன் / யோசேப்பின் / மரியாளின் குமாரன்
மாற்கு 6.3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி,அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.
வசன இருப்பிடங்கள்:
மத்தேயு 13.55
லூக்கா 4.22
தலைப்பின் அர்த்தம்:
இயேசுவைக் குறித்து சொல்லப்பட்ட இந்த தலைப்புகள் இயேசுவின் குடும்ப பின்னணியை பற்றியது ஆகும். இயேசு தச்சன் என்றும், தச்சனின் குமாரன் என்றும் யோசேப்பு & மரியாளின் குமாரன் என்றும், மற்றும் யாக்கோபு, யோசே, & சீமோன் என்பவர்களின் சகோதரர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டார்.
விளக்கவுரை:
யோசேப்பு தாவீது ராஜாவின் வம்சம் எனினும், தேவ சித்தம் கிறிஸ்து எளிமையான குடும்பத்தில் பிறப்பதற்காக சூழ்நிலைகளை காலப் போக்கில் மாற்றியது. யோசேப்பு தன் வாழ்வை நீதியாக வாழ்ந்தான். இயேசுவும் தான் பிறந்த எளிய குடும்பம் குறித்து வருந்தவில்லை; குறை கூறவில்லை. பிதாவும் சித்தம் நிறைவேற தன்னை அர்ப்பணித்தார். அவர் மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் தம்முடைய பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தார். தம்முடைய பெற்றோர் செய்யும் வேலையில் தம்மையும் இணைத்துக்கொண்டு உதவிகள் செய்தார். விண்ணுலக கடமைகளையும் செய்து முடித்தார் மண்ணுலக கடமைகளையும் செய்து முடித்தார்
தேவ குமாரன் என்று அழைக்க மறுத்த கூட்டம் அவரை ஏளனம் செய்வதாக எண்ணி அவரின் பின்னணி குறித்து பேசினர். தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர் உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? என்று எண்ணி, புகழ்வதற்கு பதிலாக, எள்ளி நகையாட முற்பட்டனர். ஆனால் இயேசு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யோசேப்பு குறித்து அவன் சகோதரர்கள் குறைவாக மதிப்பிட்டனர். ஆனால் கடவுளின் பார்வை வித்தியாசமாக, உயர்ந்ததாக இருந்தது. தன் சகோதரர்கள் மத்தியில் தேவன் அவனை மேன்மப்படுத்தினார்.
முடிவுரை:
இன்றைக்கு நாம் நம்மைக் குறித்தும் பிறரை குறித்தும் உலக ரீதியாக பார்த்து மதிப்பீடுகின்றோமா?. ஒருவரின் கடந்த கால வாழ்க்கை, குடும்ப பின்னணி, சமூக பின்னணி, படிப்பு, வேலை, பொருளாதாரம் மற்றும் அந்தஸ்து போன்றவற்றை வைத்து அளவிடுவது தவறான செயல். தேவன் இதை விரும்புவதில்லை. ஆகவே, தேவன் பார்க்கும் வண்ணம் நம்மைக் குறித்தும் பிறரை குறித்தும் பார்ப்போம். பிலிப்பியர் 2. 3 சொல்லுகிறது: "மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்."
0 Comments