Ad Code

ஒரே பேறான குமாரன் • Only Begotten Son • SMC Lenten Meditation 2024

SMC Lenten Meditation 2024

தியானம்: 4/ 40 - ஒரே பேறான குமாரன்

எழுதியவர்: செல்வன். இ. கரண்சிங்

தலைப்பு:ஒரே பேறான குமாரன்
யோவான் 3:16 “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”

வசன இருப்பிடங்கள்:
யோவான் 3:16;மத்தேயு 1.25 லூக்கா 2.7;23

தலைப்பின் அர்த்தம்:
ஒரே பேறான மகன் எனும் வார்த்தை இயேசு ஒரே ஒரு மகன் என்பதைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் தனித்துவத்தையும் ஒப்பற்ற தன்மையையும் (monogene - only begotten/ unique) சுட்டிக் காட்டுகிறது.

விளக்கவுரை:
வேதாகமத்தில் “ஒரேபேறான குமாரன்“ என்ற சொல் “ஒருவன் பெற்றெடுத்த பிள்ளை“ எனும் அர்த்தத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்படவில்லை. அதுபோலவே "குமரன்" என்பது மக்களால் "ஒருவரால் பிறந்த குழந்தை" என்ற பொருளுடன் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. உண்மையில், இதை அறியாதவர்கள் இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்றும் அதனால் அவர் கடவுளை விட தாழ்ந்தவர் என்றும் தவறான எண்ணம் கொண்டுள்ளனர். வேதாகமத்தில் ஒருவருக்கு பிறக்காதவர்களும் அவருடைய பிள்ளையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். இதனால்தான் சாமுவேலை ஏலி “என் மகனே“ என்று கூப்பிட்டார் (1 சாமு 3:16). ஆசிரியர் தன் மாணவரை “என் மகனே“ என அழைப்பதை நீதிமொழிகளில் நாம் அவதானிக்கலாம். (நீதி. 7:1) எனவே வேதாகமத்தில் “குமாரன்“ “மகன்“ எனும் பதங்கள் ஒருவனுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது என்று கூறமுடியாது. 

இயேசு கிறிஸ்துவும் “தாவீதின் குமாரன்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் தாவீதுக்குப் பிறந்தவர் என்பது இதனது அர்த்தமல்ல (மத். 1:1). ஒரேபேறான என்ற பதம் கிறிஸ்து உலகத்திற்கு உரிய முறையில் பிறக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. மத்தேயு 1:25 இல் "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து அவருக்கு இயேசு என்று பேரிட்டான்" என்ற வசனத்தில், "அவள்" என்ற வார்த்தை மிக முக்கியமானது. மரியாளுக்கு இயேசு ஒரேபேறான ஆனால் யோசேப்பு என்பவருக்கு அல்ல என்பது தெளிவாகும். வேதாகமம் குமாரன் எனும் பதத்தை உருவகமாக உபயோகித்துள்ளதையும் நாம் அவதானிக்கலாம்.

முடிவுரை: 
முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது. இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு மானிடனாய் வந்தது. மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய் சிலுவை வரை சென்றது. அல்லேலுயா! தேவன் தம்முடைய ஒரே குமாரனை நமக்காக அனுப்பிய மகா பெரிய அன்பு. இதன் ஒரே பரிசு அவர் நமக்களித்த அவருடைய ஒரே பேறான குமாரன் தான். பிதா தம் ஒரேபேறான குமாரனை கொடுத்தார் என்பது தம்மையே தத்தம் செய்தார் எனலாம். இந்த அன்புக்கு நாம் எம்மாத்திரம்? இதன் ஒரே விளைவு நாம் பிழைத்திருப்பது தான். இதைப் பெற ஒரே நிபந்தனை அவரை விசுவாசிப்பதுதான். இந்த விசுவாசத்தின் ஒரேபரிசு நித்திய ஜீவன். இந்த தேவன் நமக்களித்த இந்த அன்பின் பரிசை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுகொள்வீர்களா? சிந்தித்து, விசுவாசித்து ஏற்றுக்கொள்வோம்.

Post a Comment

0 Comments