தியானம்: 3 / 40 - இறைமைந்தர்
எழுதியவர்: செல்வன். பா. மனோஜ் கிஷோர்
தலைப்பு : தேவனுடைய குமாரன் (இறைமைந்தர்) The Son of God
மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
வசன இருப்பிடம்:
மத்தேயு 16:16 மாற்கு 1:1
லூக்கா 1:35 யோவான் 1:34
தலைப்பின் அர்த்தம்:
கிறிஸ்து இயேசு கடவுளின் குமாரனாக தான் இந்த பூமியில் வாழ்ந்தார். குமாரன் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இளமையும் அழகும் நிறைந்தவன் என்பது பொருளாகும்.
விளக்கவுரை :
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்று குறிப்பிடப்படும் திரித்துவத்தில் இரண்டாவது வருபவர் குமாரனாம் இயேசு கிறிஸ்து. அவர் உலகங்கள் உண்டாகும் முன்னரே இருப்பவர் இயேசு. குமாரனாகிய அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல. தேவ குமாரன் என்று இயேசு அழைக்கபடுவதை யூதர்கள் விரும்பவில்லை; அந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால் பேதுரு மிக தெளிவாக தைரியமாக அறிக்கை செய்தார் (மத்தேயு 16.16).
1. தேவனோடு இருந்தவர்
யோவான் 1 ஆம் அதிகாரத்தில் வாசிக்கும் போது, ஆதியிலே வார்த்தை [குமாரனாகிய தேவன்] இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் [குமாரனாகிய தேவன்] ஆதியிலே தேவனோடிருந்தார்...... அப்படிப்பட்ட தம் மகிமையான நிலை விட்டு பூமிக்கு வந்தவர் தான் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து.
2. தந்தையை வெளிப்படுத்துபவர்
தன் அப்பாவை போலவே இருக்கிறான் என்று சொல்வதைக் கேட்டிருப்போம். அவ்விதமாகவே யோவானும் (1.14) இயேசுவைக் குறித்து சொல்கிறார்: அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்" (யோவான் 10:30).
முடிவுரை :
கடவுளை தம் தந்தை/ பிதா என்று அழைப்பதையே வழக்கமாக வைத்திருந்தவர் இயேசு. பிதாவின் சித்தமே தம் சித்தம் என்று குறிக்கோளாக கொண்டு பிதாவையே வெளிப்படுத்தி வாழ்ந்தவர் இயேசு. இன்றைக்கு நாம் கிறிஸ்து இயேசுவின் மூலமாய், கடவுளை பிதா என்று அழைக்கும் உரிமைப்பேறு பெற்ற தேவ குமாரர்களாக, குமாரத்திகளாக இருக்கிறோம். நம் பிதாவாம் தேவனோடு நம் உறவு எப்படி இருக்கிறது? சிந்திப்போம். தந்தை - மகன்/ள் உறவில் வலுப்பெறுவோம். ஆமென்.
0 Comments