தியானம்: 2/ 40 - இம்மானுவேல்
எழுதியவர்: செல்வன். பா. ஸ்டீபன் ரிஜோ
தலைப்பு: இம்மானுவேல் - Immanuel
(மத்தேயு 1:23) அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
வசன இருப்பிடங்கள்:
ஏசாயா 7.14; ஏசாயா 8.8; மத்தேயு 1:23
தலைப்பின் அர்த்தம்:
இம்மானுவேல் என்பதற்கு “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தம்
விளக்கவுரை:
இம்மானுவேல் என்னும் பெயர் பழைய ஏற்பாட்டுக் காலத்தைச் சேர்ந்தது. எசாயா இறைவாக்கினர் தான் இப்பெயரை அறிமுகப்படுத்துகிறார். சீரியாவும் இஸ்ரவேலும் யூதாவிற்கு எதிராக போர் செய்ய முயன்ற காலத்தில் இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. சீரிய தேசமும் இஸ்ரவேலும் அசீரியாவிற்கு எதிராக போர் செய்ய முயலும் போது, யூதாவையும் தங்களுடன் சேருமாறு கேட்ட போது, ஆனால் இதற்கு மறுத்த யூதாவின் அரசன் ஆகாஸ் அசீரியாவிடமே தஞ்சம் அடைந்தான். இதனை எதிர்த்த இறைவாக்கினர் ஏசாயா ஆகாஸ் ராஜாவை கடவுளிடம் தஞ்சமடையக் கேட்கிறார். இதற்காக கடவுளிடம் ஒரு அடையாளத்தையும் கேட்க சொல்லியும், ஆகாஸ் ராஜா மறுத்துவிடுகிறான். அப்போது சொல்லப்பட்ட வார்த்தை தான் ஏசாயா 7.14. கடவுள் இருக்கிறார் என்பதை உணர்த்தவே இந்த அடையாளம் கொடுக்கப்பட்டது.
இந்த இம்மானுவேல் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் யோசேப்புக்கு தூதன் வாயிலாக அறிவிக்கப்பட்டதாக மத்தேயு நற்செய்தியில் வருகிறது. இந்த பதம் இயேசுவைக் குறிக்கிறது. இம்மானுவேல் என்ற பதம் கடவுள் மனிதனாக வெளிப்படும் போது அவருக்கு வழங்கும் பெயராக சொல்லப்படவில்லை. மாறாக, கடவுள் மனிதர்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையை கொடுக்கும் வார்த்தையாக இருக்கிறது.
ஆகவே, நம் கடவுள்.....
1. மனிதர்களோடு இருப்பதை விரும்புகிறார்
விண்ணையும் மண்ணையும் படைத்தவர், விண்ணுலகில் தூதரின் துதியில் வசிப்பவர், மண்ணான மனிதராம் நம்மோடு இருப்பதை தான் விரும்புகிறார்.
சங்கீதம் 46.7 சொல்லுகிறது: "சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்."
2. நிலையான உடனிருப்பைக் கொடுக்கிறார்
இயேசு கிறிஸ்து இப்பூமியில் மனிதராக இல்லாவிட்டாலும், அவர் தம் ஆவியானவரை நமக்காக தந்துள்ளார்.
"அவர் (சத்திய ஆவியானவர்) உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான் 14.17).
முடிவுரை:
கடவுள் நம்மோடு இருப்பதை விரும்புகிறார். நாம் அவரோடு இருக்க விரும்புகிறோமா? கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார். ஆனால், நாம் எப்பொழுதும் அவரோடு இருக்கிறோமா? அல்லது விழுந்து விழுந்து போகிற நிலையில் தான் இன்னும் உள்ளோமா? இந்த ஆண்டு லெந்து காலத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து, அவரோடு நேரத்தை பயனுள்ளதாக்கி உறவில் வலுப்பெறுவோம். ஆமென்.
0 Comments