தியானம்: 1/ 40 - இயேசு யார்?
எழுதியவர்: செல்வன். பா. டேவிட் ஆன்றோ
தலைப்பு: மேசியா/கிறிஸ்து • Messiah / Christ
(யோவான் 1:41)அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
வசன இருப்பிடங்கள்:
யோவான் 1:41
மத்தேயு 16:16 & 20
லூக்கா 9:20
மாற்கு 8:29
தலைப்பின் அர்த்தம்:
மேசியா என்பது எபிரேய வார்த்தை.
கிரேக்க மொழியில் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறது.
மேசியா/கிறிஸ்து என்பதற்கு அபிஷேகிக்கப்பட்டவர் (Anointed for the specific purpose) என்று அர்த்தம்.
விளக்கவுரை
எபிரேய திருமறையில் "மெசியா" அல்லது "மஷியா" (mashiach) என்று வரும் சொல் எண்ணெயால் திருப்பொழிவு (அபிசேகம்) செய்யப்பெறுகின்ற அரசன், பெரிய குரு போன்றோரைக் குறிக்கும். (1 சாமுவேல் 16:13). அவ்விதமாக, ஆனால் அதற்கும் மேலாக, இயேசு அபிஷேகிக்கப்பட்டவர் என்பது உண்மை. நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார் (அப்போஸ்தலர் 10:38)
1. மீட்பின் பணியில் மேசியா...
மேசியா பாடுபடும் தாசனாக வந்து சிலுவையில் அறையுண்டு, மரித்து, உயிர்த்து உலகின் பாவ பிடியிலுள்ள மனுகுலத்தை மீட்டு இரட்சிப்பதற்காவே நம்முடைய மீட்பின் தேவ ஆட்டுக்குட்டியாக அவர் தெரிந்தெடுக்கப்பட்டார். "இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்"
அப்போஸ்தலர் 5:31).
2. நற்பணியில் மேசியா....
இயேசு கிறிஸ்து ஆவியானவரால் அபிஷேகிக்கப்பட்டு பிதாவின் வார்த்தையை பிரசங்கிக்கும்படியாகவும் அநேகரை குணமாக்கவும், விடுதலையாக்கவும், அவரின் சித்தத்தை நிறைவேற்றும்படியாகவும் தெரிந்தெடுக்கப்பட்டார் (லூக்கா 4:18,19).
3. நித்திய ராஜாவாக மேசியா.....
ஆண்டவருடைய பரலோக இராஜ்யத்தின் நம்முடைய ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டவர் இயேசு. மீட்கும் பொருளாக நமக்கு நித்திய ஜீவனை கொடுக்கும் படியாக மனுஷகுமாரனாக இவ்வுலகிற்கு ஜீவபலியாக வந்த
அவரை அறிந்து கொள்வதே நித்திய ஜீவன் (யோவான் 17:3).
முடிவுரை:
"கிறிஸ்தவர்கள்" என்றால் அபிஷேகிக்கப்பட்டவர்கள் என்று பொருள் கொள்ள முடியும். ஆகவே கிறிஸ்துவை பின்பற்றும் நாமும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. பிதாவின் சித்தத்தை மேசியாவாக இயேசு கிறிஸ்து நிறைவேற்றியது போல கிறிஸ்துவர்களாக தெரிந்தெடுக்கப்பட்ட நாம் நமக்கான கடவுளின் சித்தத்தை நேர்த்தியாக செய்யவும், அவர் கற்பித்த நீதியின்படி நடந்து ஆண்டவருடைய இராஜ்யத்தை கட்டுவதற்கும் இந்த தவக் காலத்தில் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ளவோம். ஆமென்.
0 Comments