முகவுரை தியானம்
தலைப்பு:
முகவுரை: இயேசு யார்?
Preface: Who is Jesus?
எழுதியவர்: திரு. யே. கோல்டன் ரதிஸ்
இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். தவக்காலம் என்னும் லெந்து காலம் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்கின்றது. நாம் அதை எப்படி பிரயோஜனப்படுத்திக் கொள்கிறோம் என்பது நமது தனிப்பட்ட வாழ்வைப் பொருத்தது. நாம் வாழும் அவசர உலகில், வேகத்தடையைப் போன்று இந்த நாற்பது நாள்கள் நம்மை நிதானித்து அறியும் நாள்கள். இந்த நாட்கள் கிறிஸ்துவின் பாடுமரணத்தை மையப்படுத்தி நம்மை இன்னும் பெலப்படுத்தும் நாள்கள். கிறிஸ்துவைக் குறித்து தியானிப்பது என்பது இந்த நாட்களில் மிக முக்கியமானது. சிறப்பாக இந்த 2024 ஆம் ஆண்டில், சி.எஸ்.ஐ. தூய மேரி ஆலயம், இராமையன்பட்டி வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பாக நாற்பது தியானங்களை தியானிக்க இருக்கிறோம். அதன் தலையங்கம் - இயேசு யார்? நற்செய்தி நூல்களில் நாற்பது தலைப்புகள் (Who is Jesus? Forty Titles in the Gospels).
இயேசு என்று கேள்விப்படாத பல மக்கள் இருக்கும் இந்த உலக சூழலில், இயேசு யார்? என்ற கேள்விக்கு நமக்குப் பல பதில்கள் தெரிந்திருக்கலாம். பல்வேறு வகையான கருத்துக்கள் நம் மனதில் எழலாம். குறிப்பாக, திருமறையில் பல்வேறு தலைப்புகளை (பெயர்களை) கிறிஸ்து இயேசுவை குறிக்கும் வண்ணம் வருகிறது. சிறப்பாக, இயேசுவைக் குறித்து அதிகம் பேசப்படும் நற்செய்தி நூல்களில் கிறிஸ்துவின் நற்குணங்கள், நற்செயல்கள், நல்வாக்குகள் அநேகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நற்செய்தி நூல்களை ஆராயும் போது, இயேசுவைக் குறிப்பிடும் சிறப்பு தலைப்புகள் அவர் யார் என்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தருகின்றன என்றால் மிகையாகாது.
மத்தேயு 21.10 இல் "அவர் (இயேசு) எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்." எருசேலம் வெற்றி பவனி தினத்தன்று அந்த மக்கள் எந்த நோக்கத்தில் இந்த கேள்வியை கேட்டனர் என்பது தெளிவாக இல்லாவிட்டாலும், இயேசுவைக் குறித்து அறியும் ஆர்வமும், விசாரிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருந்தது புலப்படுகிறது. இன்றைக்கு நாமும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்தவர்கள் என்றாலும், நம் அறிதலும் புரிதலும் கையளவே.
இயேசுவைக் குறித்து இன்னும் அறிதல் என்பது
1. நெருக்கத்தை தருகிறது (Closeness)
அறிய அறிய நெருக்கம் அதிகரிக்கும்.
2. நம்பிக்கையை தருகிறது (Confidence)
அறிதல் அதிகரிக்கும் போது புரிதலோடு நம்பிக்கை பெருகும்.
3. நல்வாழ்வைத் தருகிறது (Goodness)
அறிந்ததை செயல்படுத்தும் போது நல்வாழ்வு உண்டாகும்.
ஆகவே, சகேயு போல், காட்டத்தி மரம் என்னும் இந்த தவக்கால தியானத்தில் ஏறி, இயேசுவுவை பார்ப்போம்; இயேசுவைக் கண்டும் மனமுணர்வோம்; இயேசுவிடம் நம்மை அர்ப்பணிப்போம். அகவிருள் அகற்றி அறிவொளி வீசும் தியானமாய் இத்தியானங்கள் அமைந்திட, ஆண்டவர் உதவி செய்வாராக. இறையாசி
உங்களோடிருப்பதாக... ஆமென்.
0 Comments