தியானம்: 29 / 40 - மணவாளன்
எழுதியவர்: செல்வன். ம. ஜெய பிரகாஷ்
தலைப்பு: மணவாளன்
வசன இருப்பிடம்:
ஏசாயா62:5
மத்தேயு 9:15; 25:5,6, 10
மாற்கு 2:20
யோவான் 3:29
தலைப்பின் அர்த்தம்: மணமகன், மாப்பிள்ளை, தலைவன் (master or lord).
பொருள்&வரையறை:
மணம்+ஆள்+அன்= மணவாளன்.
திருமணம் செய்யக்கூடிய நபர்॥ மனம் முடிப்பவர்.
விளக்கவுரை:
ஆண்டவராகிய கடவுள், தன்னை மணவாளனாகவும், சபையாகிய உலக மக்களை மணவாட்டியாகவும் உருவக படுத்தியுள்ளார். கடவுளின் இரண்டாம் வருகையில் தன்னுடன் கூட்டி செல்லும் மக்களுக்கு பரலோகில் ஆட்டுக்குட்டியானவரின் கலியான விருந்தினை பிதா ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். மணவாளனாக இயேசுவும் மணவாட்டியாக அவரின் பிள்ளைகளாகிய நாமும் அவரோடு ஒப்புரவாக திட்டமிட்டுள்ளார். அதற்கு ஆதாரமாக வேதத்தில் மணவாளனை குறித்து கூறிய 3 பகுதிகளை காணலாம்.
1. யோவான் கூறிய மணவாளன்:
(யோவான் 3:29) மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. என்ற வார்த்தையின் விளக்கமானது, பரிசுத்த யோவான் என்பவர் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் கொடுக்கிறார் அது எப்படி என்று தன்னுடைய சீடர்கள் கேட்டமைக்கு கூறியதாவது, யோவான் கடவுளை மணவாளனாகவும், நம்மை (சபையை) மணவாட்டியாகவும், தன்னை மணவாளனின் தோழனாகவும் பாவிக்கிறார். அதில் கூறுகிறார், மணவாளனுடைய தோழன் அருகே நின்று அவர் பேசும் சொல்லைக் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைகிறேன் என்றும், இந்த சந்தோஷம் எனக்கு இப்போது சம்பூரணமாய் இருக்கிறது என்றும், யோவான் மணவாளனின் தோழனாக தன்னை கூறி மகிழ்வு கொள்கிறார்.
2. ஏசாயா கூறிய மணவாளன்:
வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுவது போல, உன் மக்கள் உன்னை விவாகம் பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாய் இருப்பது போல உன் தேவன் உன் மேல் மகிழ்ச்சியாயிருப்பார்
(ஏசாயா62:5) என்ற ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தையைப் போல தேவன் மணவாளனாக; சபையாகிய மனவாட்டியை விவாகம் செய்ய ஆயத்தமாயிருக்கிறார்.
3. இயேசுவே கூறிய மணவாளன்: (மத்தேயு 9: 15) அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயர படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
இந்த வார்த்தையில், இயேசுவானவர் தன்னை மணவாளன் என்று மறைமுகமாக குறிப்பு மூலம் கூறியுள்ளதை காணலாம். மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனையுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? என்று இயேசு யோவானுடைய சீஷர்களுக்கு கூறியதை இவ்வார்த்தை நமக்கு தெரியப்படுத்துகிறது. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும் என்பது இயேசுவின் மரணத்தை குறித்தது. இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையுண்டு பிதாவினால் எடுத்துக் கொள்ளப்படுவார் என்ற மறைபொருள் இவை ஆகும். இயேசு தன்னை மணவாளன் என்று வெளிப்படுத்தினார்.
முடிவுரை:
ஆம், நாமும் ஆண்டவரின் தோழர்களாக இருக்கிறோம். மணவாளனாகிய இயேசுவை நாமும் அண்டிக் கொண்டால் அவருடனே கூட பரலோகில் கல்யாண விருந்தில் அவருடன் பந்தியிருப்போம். என்றுமுள்ள நித்திய வாழ்வை அவருடனாக அனுபவிப்போம். "என் மணவாளன் இயேசு ராஜாவை காணவே வாஞ்சிக்கிறேன்"என்ற பாடல் போல நாமும் ஆண்டவராகிய கடவுளாம் மணவாளனை காண வாஞ்சை கொள்ளுவோம் அவரோடு கூட நித்திய இராஜ்யத்தில் அரசாள்வோம். மணவாளனுடைய தோழர்களாக அவர் அருகில் வாசம் பண்ணுவோம். மணவாளன் தாமே நம்மை ஆள்வாராக. ஆண்டவராகிய கடவுளை தந்தையாக, இராஜாவாக, பாதுகாவலராக மட்டும் நினைத்து வாழாமல் ஆண்டவரை தோழனாகவும் பாவிக்க வேண்டும். மேலும், நம்மை மணவாட்டியாகவும், கடவுளை நம்மை ஆளும் மணவாளனாகவும் நினைத்து வாழ வேண்டும். அப்போது, அவரோடு மிகுதொடர்பு கொள்வோம். மணவாளனின் அழைப்பு உங்களுக்கும் உரியதாவதாக. ஆமென்!
0 Comments