Ad Code

ஜெபக்கூட்ட பாடல்கள் அல்லது கைப்பதி பாடல்கள்

தென் தமிழக திருச்சபையில் கிறிஸ்தவ ஆராதனைகளில் பாடுவதற்காக, ஜெர்மன் லுத்தரன் சபைக் கீதங்கள், ஆங்கில திருச்சபைக் கீதங்கள், டென்மார்க் தேசத்துத் திருச்சபைக் கீதங்கள் முதலியவற்றினின்று தெரிந்தெடுக்கப்பட்டுத், தமிழில் மொழிபெயர்ப்பாகி, "ஜெர்மன் கீதங்கள்,'' "தரங்கம் பாடிக் கீதங்கள்,'' "நாகர்கோவில் கீதங்கள்,'' "C.M.S. ஞானப் பாட்டுகள்,'' "S. P. G. ஞானகீதங்கள்,'' என்ற பெயர்களில் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில், பின்னவையிரண்டிலும் ஆங்கில திருச்சபைக் கீதங்களுடன் மற்ற மூன்றிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்ட சில கீதங்களுமுண்டு. இப்பாடல்களனைத்தும் மேல் நாட்டிசையமைப் புள்ளனவாய், மேனாட்டு இராகத்திலேயே பாடப்பட்டுவந்தன. 

திருநெல்வேலியில் ஊழியஞ்செய்த ஜெர்மன் லுத்தரன் மிஷனெரிகளாகிலும் சரி, ஆங்கில C. M. S., S. P. G. மிஷனெரிகளானாலும் சரி, மேனாட்டுப் பண்ணில் பாடப்பட்ட கீதங்களைத் தவிர, தமிழிசையில் இசைக்கப்படும் கீர்த்தனைகளெவையும் ஆலய ஆராதனைகளில் பாடப்படலாகாதென்று கண்டிப்பான தீர்மானமுடையவர்களாயிருந்தனர். நாசரேத், சாயர்புரம், முதலூர், இடையன்குடி, கிறிஸ்தியாநகரம், என்ற சில S. P. G. சேகரங்களில், வேதநாயக சாஸ்திரியாரின் சில பாடல்களை மட்டும், ஆராதனையில் ஆசீர்வாதம் கூறின பின், சபையார் பாடுவது வழக்கத்திலிருந்தது. 

 இந்தியர்களால் சரியாக விளங்கிக்கொள்ளவும், பாராட்டவும் கூடாத ஆங்கில இராகங்களில் தான் ஆராதனைகளில் பாட்டுகள் பாட வேண்டும் என்று இந்திய மக்களின் கடவுள் வழிபாட்டில் சட்டம் விதித்து, அவர்களுக்கு உரிமையானராகங்களைப் புறக்கணித்து வந்திருப்பது மிஷனெரிமார் செய்துள்ள பெருந்தவறு!. மனிதவுள்ளத்தின் மீது சங்கீதத்துக்கு எத்துணையளவு செயலாக்கம் உண்டு என்று நாமறிவோமே. பக்தியுணர்ச்சியை வளர்க்கக்கூடிய பெரிய சக்தியுள்ளது சங்கீதம் என்றுமறிவோமே; அப்படியிருந்தும், தமிழ் மக்கள் உள்ளக்கிளர்ச்சியுடன் அனுபவித்து, ரசித்துணரக்கூடிய இந்த வல்லமையுள்ள துணைக்கருவி தரும் நற்பயனை, புறக்கணித்து, அதனை ஆராதனைகளில் இது காலபரியந்தம் உபயோகித்துக் கொள்ளாதிருந்திருக்கிறோமே!. 

1861 க்கு பிறகு தென் தமிழக சபைகளில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி திருச்சபைகளில் உள்ள பாரம்பரிய சபைகளில் ஒவ்வொரு ஆராதனைகளுக்கும் அன்றைக்கு புலமைபெற்ற விளங்கிய சில உபதேசிமாரால், அல்லது சபை மக்களால் எழுதப்பட்டுப், பனை ஓலை ஏடுகளில் காக்கப்பட்டு வந்தவை. இந்த ஜெபகூட்டப் பாடல்கள் பின்னர் “கைப் பிரதிப் பாடல்களாக” வெளிவந்தன. இன்னும் பல சபைகளில் இப்படிப்பட்ட கைபிரதி அல்லது ஜெபகூட்டப் பாடல்கள் பாடப்பாடுவது சிறப்புக்குறியது ஆகும்.

எழுத்தாளர்: 
மன்னா செல்வகுமார் 

Post a Comment

0 Comments