ஞாயிறு: திரித்துவதிருநாளுக்குப் பின்வரும் 20 ஆம் ஞாயிறு
தேதி: 13/10/2024
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: எரேமியா 33. 1 -10
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
ஆரோக்கியமான வாழ்வு
எரேமியா 33:6
(பவர் திருப்புதல்) இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.
(திருவிவிலியம்) ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக் குணப்படுத்துவேன்; அம்மக்களுக்கு நலன் அளித்து நிலையான நிறைவாழ்வை வழங்குவேன்.
3. ஆசிரியர் & அவையோர்
எரேமியா, ஆசாரியராகவும் தீர்க்கதரிசியாகவும் ஊழியம் செய்தவர், இல்க்கியா என்னும் பெயருடைய ஆசாரியரின் குமாரன். எருசலேமுக்கு ஏறக்குறைய 3 கி.மீ தூரத்தில், வடகிழக்கு பகுதியில் உள்ள ஆனதோத், இன்றைய நாட்களில் அனட்டா என அழைக்கப்படும் சிறிய ஊரிலிருந்து இருந்து (1:1), பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவர். எரேமியா ”கதறிஅழும் தீர்க்கதரிசி” என்றும் அறியப்பட்டிருந்தார் (9:1; 13:17; 14:17).
எரேமியா யூதாவில் இருந்த தனது சொந்த ஜனங்களுக்கு நேராக ஏறெடுத்த ஊழியத்தையே பெரும்பாலும் செய்து வந்தார்; ஆனாலும், அது சில வேளைகளில் ஏனைய தேசங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. அவர் தேவனின் நியாயத் தீர்ப்பாக படையெடுப்பவர் வந்து சேர்வதற்கு முன் மனம்திரும்பும்படி தன் சொந்த யூதா தேசத்தாரிடம் முறையிட்டுவந்தார்.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
எரேமியா ஊழியத்தின் காலகட்டம் யூத ராஜா யோசியாவின் 13ஆம் வருடத்தில் இருந்து (1:2; கி.மு. 627) பாபிலோனியர் கரங்களில் எருசலேம் வீழ்ந்த கி.மு. 586 வரையிலான (எரேமியா 39, 40, 52) - ஐந்து தலைமுறைகள் வரைச் செல்கிறது.
எரேமியா புத்தகத்தின் முக்கிய கருப்பொருள் யூதா தேசத்தின் மீது உண்டாயிருக்கும் நியாயத்தீர்ப்பு (அதிகாரங்கள் 1-29) மற்றும் மேசியாவின் ராஜ்ஜியத்தில் அதன் மறுசீரமைப்பு (23:3-8;30-33) என்பதாகும்.
5. திருவசன விளக்கவுரை
எரேமியா 30:1 -33:26 வரையான பகுதி யூதாவை ஆறுதல்படுத்தல் – புதிய உடன்படிக்கை குறித்தது. யூதர்கள் விடுதலை பெற்ற பின்பு அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை குறித்த முன்னறிவிப்பாகும். எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில் இந்த 33 ஆம் அதிகாரத்தின் வாக்குகள் சொல்லப்படுகின்றது.
எரேமியா 33:6-9 சொல்லும் சில வாக்குகள்
• கடவுள் யூதாவையும் இஸ்ரவேலையும் சிறையிலிருந்து மீட்டு அவர்களைக் கட்டியெழுப்புவார்.
• கடவுள் அவர்களை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரித்து அவர்களை மன்னிப்பார்.
• நகரம் எல்லா நாடுகளுக்கும் முன்பாக கடவுளின் புகழையும், மகிழ்ச்சியையும், புகழையும், கனத்தையும் கொண்டுவரும்.
• கடவுள் அளிக்கும் அபரிமிதமான செழிப்பு மற்றும் அமைதியைக் கண்டு மக்கள் பிரமித்து நடுங்குவார்கள்.
எரேமியா 33:6 ல், கடவுள் அவருடைய திட்டங்கள், சில மறைக்கப்பட்டதாகவோ அல்லது தொலைவில் இருப்பதாகவோ தெரிகிறது, அவருடைய விசுவாசிகளுக்கு வெளிப்படுத்தப்படும் என்று வலியுறுத்துகிறார். இந்த வாக்குத்தத்தம் ஜெபத்தை ஊக்குவிக்கிறது, தெய்வீக வெளிப்பாடுகளை ஆர்வத்துடன் தேடுபவர்களுக்கு அடிக்கடி அணுக முடியும் என்பதைக் குறிக்கிறது. மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தையும் போராட்ட காலங்களில் கடவுளைச் சார்ந்திருப்பதையும் இந்த வசனம் நினைவுபடுத்துகிறது. கடவுள் படைப்பாளர் மட்டுமல்ல, தம் மக்களை மீட்டெடுக்கவும், அவர்களை ஏராளமாக ஆசீர்வதிக்கவும் விரும்பும் இரக்கமுள்ள குணப்படுத்துபவர் என்று விசுவாசிகளுக்கு உறுதியளிக்கிறது.
6. இறையியல் & வாழ்வியல்
இன்றைக்கு திருச்சபை "ஆரோக்கிய ஞாயிற்றை" ஆசரிக்கிறது. ஆரோக்கியமான வாழ்வு என்பது சரீர சுகம் மட்டும் அல்ல. "The World Health Organization (WHO) defines health as a state of complete physical, mental, and social well-being, and not just the absence of disease or infirmity." ஆரோக்கியம் என்பது நமது ஆவி, ஆத்துமா, சரீரம் இவற்றில் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்வில் நலமுடன் வாழ்வதாகும்.
அந்த முழுமையான ஆரோக்கியம் என்பது உலகம் தருவதல்ல. பரம வைத்தியர் இயேசு கிறிஸ்து அருளும் நல் வாழ்வு ஆகும். அந்த வாழ்வை அனுபவிக்க, நம் வாழ்வை சீர்ப்படுத்தி அவரை நம்பி வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
7. அருளுரை குறிப்புகள்
ஆரோக்கியமான வாழ்வு
1. காயங்கள் ஆறும் (33.6)
2. கோபம் நீங்கும் (33.8)
3. கண்ணீர் மாறும் (33.11)
Acknowledgement
Mr. Y. Golden Rathis
Catechist
Ramayanpatti
CSI Diocese of Tirunelveli
0 Comments