பூர்வ தாய் திருச்சபையான நல்லூர் திருச்சபை யின் தவச உற்சவ பண்டிகை என்று அழைக்கப்படும் ஸ்தோத்திர பண்டிகையின் வரலாற்றை காணும் முன்பு நம் பொதுவான தவச உற்சவ பண்டிகையின் வரலாற்றை சுருக்கமான காண்போம்.
தவச உற்சவ பண்டிகையின் வரலாறு
* 1891 இல் சாட்சியாபுரத்தில் முதல் தவச உற்சவ பண்டிகை துவக்கம்
* 1892 இல் நல்லூரில் தவச உற்சவ பண்டிகை துவக்கம்
* 1893 இல் மெய்ஞானபுரம் தவச உற்சவ பண்டிகை துவக்கம்
* 1894 இல் டோனாவூர், சுவிசேஷபுரம் தவச உற்சவ பண்டிகை துவக்கம்
* 1895 இல் பாளையங்கோட்டை தவச உற்சவ பண்டிகை துவக்கம்
* 1896 இல் பங்காளா சுரண்டை, பண்ணைவிளை தவச உற்சவ பண்டிகை துவக்கம்
* 1975 இல் சர்கிள் என்பது சேகரமாக இயங்கிய பின்பு எல்லா சேகரங்களிலும் படிப்படியாக தவச உற்சவ பண்டிகை துவங்கப்பட்டது.
நல்லூரில் தவச உற்சவ பண்டிகையின் வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கி.பி. 1820ம் ஆண்டு நெல்லை மேற்குப் பகுதிகளில் தேவதாசர்கள் வந்து வேதவசன விதைகளை விதைக்க அருட்திரு. பால் ஷாப்டர் அவர்கள், குருவன்கோட்டையை மையமாக வைத்து ஊழியம் செய்தார்கள். ஒரு திருச்சபையையும் உருவாக்கினார்கள். விபூதி சங்கத்தாரின் எதிர்ப்பால் நல்லூரை மையமாகக் கொண்டு அறுபது ஏக்கர் நிலம் வாங்கி திருச்சபையை உருவாக்கினார்கள். அந்நாட்களில் நல்லூரைச் சுற்றியுள்ள நாலாத்திசைகளிலும் சபைகள் உருவாக்கப்பட்டன.
திருநெல்வேலி திருமண்டல கதிட்ரல் பேராலயத்தில் சுமார் 243 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் மாம்பழச் சங்க விழா நடைபெறும். இப்பொழுது அங்கு 244 வது மாம்பழச் சங்கம் கொண்டாடப்படுகிறது. அதுபோல முதல் முதலாக திருநெல்வேலி மேற்பகுதியில் நல்லூரை மையமாக வைத்து நாலாபுறத்திலுள்ள திருச்சபை மக்கள் வருடம் ஒரு முறை மூன்று நாட்கள் கூடி வந்து தேவன் அந்தந்த ஆண்டில் தந்த ஆசீர்வாதங்களை நினைத்து துதிக்கவும் ஸ்தோத்திரம் செலுத்தவும் நன்றி கூறவும், தங்களுடைய நேர்ச்சை காணிக்கைகள் மூலமாக ஸ்தோத்திரக் காணிக்கைகள் மூலமாக நிலத்தில் விளைந்த காய்கறிகள், நவதானியங்கள், பழவகைகள் ஆகியவற்றை கொடுத்து தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 1892ல் அருட்திரு. ஜேம்ஸ் ஆசீர்வாதம் ஐயரவர்கள் காலத்தில் முதல் முதலாக தவச உற்சவ பண்டிகை நடைபெற்றது. அந்நாட்களில் சுமார் ஐம்பது மைல் தூரம் உள்ள சுற்று வட்டார மக்கள் ஆசரித்தார்கள். அது படிப்படியாக சர்க்கிளாகவும், கவுன்சிலாகவும், சேகரங்களாகவும் பிரிந்து, இப்போது 5 கிலோமீட்டர் சுற்றுவட்டார மக்கள் மட்டுமே பண்டிகையை ஆசரிக்க வருகிறார்கள்.
ஆனால் நல்லூர் சேகரம் நெல்லை மேல்பகுதியில் தாய்ச் சபையாக விளங்குவதால் பிற இடங்களிலிருந்தும், சேகரங்களிலுமிருந்தும், சபைகளிலுமிருந்தும், முக்கியமாக மதுரை, அம்பை, கல்லிடைக்குறிச்சி போன்ற இடங்களிலிருந்தெல்லாம் திருச்சபை மக்கள் வருவதால், கூட்டம் கூட்டமாக திருச்சபை மக்கள் வந்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
கி.பி.1991ம் ஆண்டு அருட்திரு. V. காந்தி செல்வின் ஐயரவர்கள் காலத்தில் நல்லூர் தவச உற்சவப் பண்டிகை நூற்றாண்டைக் கண்டது. 2016ல் அருட்திரு. A.B. ஜாண் கென்னடி ஐயரவர்கள் காலத்தில் நல்லூர் தவச உற்சவம் 125 -வது ஸ்தோத்திரப் பண்டிகையாக நடைபெற்றது.
நல்லூர் ஸ்தோத்திரப் பண்டிகை ஆரம்ப நாட்களில் நல்லூர் பரிசுத்த பவுலின் ஆலயத்தில் பந்தலிட்டு, மத்தியில் மேடை அமைத்து, மேடையைச் சுற்றி திருச்சபை மக்கள் இருக்க, மிஷனரிமார்கள் மேடையில் அமர்ந்து ஆராதனையை நடத்தியிருக்கிறார்கள். சுமார் 35 ஆண்டு காலமாக ஆலயத்தின் வடபுறம் ஸ்தோத்திரப் பண்டிகை நடைபெற்றது. கி.பி. 1929 முதல் ஆலயத்தின் முன்புறம் பந்தல் போட்டு ஸ்தோத்திரப் பண்டிகை இந்நாள்வரை நடைபெறுகிறது.
ஆரம்ப நாட்களில் மாட்டு வண்டிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக குடும்பம் குடும்பமாக வருவார்கள். மூன்று நாட்கள் தங்கியிருந்து பண்டிகை கொண்டாடினார்கள். மிஷனரிகள் நாட்களில் தவச உற்சவப் பண்டிகை முதல் மணி அடித்தவுடன் சபையார் வீடுகளிலிருந்து புறப்பட்டு கைகளில் நேர்ச்சிப் பொருட்களுடன் வருவார்கள். பெண்கள், போர்டிங் பாடசாலைப் பிள்ளைகள் உற்சாகமாகப் பாடிக்கொண்டு தென்புறமாய் பந்தலுக்குள் வருவார்கள். ஆண்கள், போர்டிங் பாடசாலைப் பிள்ளைகள் அதே வேளையில் பாடிக்கொண்டு ஆலயத்தின் வலதுபுறமாக பந்தலுக்குள் வருவார்கள். ஆசிரமத்து ஊழியர்கள் தம்புரு அடித்து பாடிக்கொண்டு பந்தலின் மத்தியின் வழியாய் பந்தலுக்குள் வருவார்கள். இரண்டாம் மணி அடித்தவுடன் மேற்கே பங்களாவிலிருந்து குருக்கள், மிஷனரிகள், துரைமார்கள், துரைச்சானிகள் சின்னங்கள் அணிந்து சிலுவையைப் பிடித்துக் கொண்டு பாடி வருவார்கள். பந்தலுக்கு அருகே வந்ததும் நின்று விடுவார்கள்.
மூன்றாம் மணி அடித்தவுடன் பவனியாக பாடி பந்தலுக்குள் பிரவேசித்து மத்தியில் உள்ள மேடையில் வந்து அமருவார்கள். பார்ப்பதற்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அன்றைய நாட்கள் சர்க்கிள்களாக நாலாதிசைகளிலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலிருந்து மக்கள் வந்தனர். இந்நாட்களில் சர்க்கிள் சேகரமாக மாறி ஐந்து கிலோமீட்டர் சுற்று வட்டாரத்துக்குள் மக்கள் இருப்பதாலும், மோட்டார் வாகனங்கள் பெருகி விட்டதாலும் அவ்வப்போது மூன்று நாட்களிலும் மக்கள் வாகனங்களில் வந்து விட்டு செல்கின்றனர். நல்லூர் சேகரம் நெல்லை மேற்குப் பகுதியில் தாய் சபையாக இருப்பதால் பண்டிகை ஆராதனையின் போது ஆலயத்தின் முன் வளாகப் பந்தலில் கூட்டம் இன்று வரை நிரம்பி வழிகிறது. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும், பண்டிகை நாட்களின் மூன்று நாட்களிலும் வெளியிலிருந்து வருகின்ற மக்கள் சேகர இல்லம், ஆசிரமம், கல்வி நிறுவனங்களில் தங்கியிருந்து ஆசரிக்கின்றனர். அனைத்து சபை மக்களும் தாய் சபை மக்களாக இன்றுவரை T.D.T.A. பாடசாலை, ரேனியஸ் சபா மண்டபம் ஆகியவற்றில் தங்கியிருந்து தவச உற்சவப் பண்டிகையினை மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றனர்.
காணிக்கைப் பொருட்கள் படைக்கும் போது பேராயர் அவர்கள் பந்தலின் மத்தியில் அமைந்திருக்கும் மேடையில் முன்நாட்களில் பேராயருக்குரிய நாற்காலி போடப்பட்டிருக்கும். அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்து திருச்சபை மக்கள் கொண்டு வருகிற ஸ்தோத்திரக் காணிக்கைகள், நேர்ச்சைக் காணிக்கைகள், பொருள் காணிக்கைகள், கோழிகள், ஆடுகள், கன்றுக்குட்டிகளை ஆசீர்வதிப்பார்கள். இந்நாட்களில் பேராயர் அவர்கள் மேடையின் மத்தியில் படியில் நின்று கொண்டு திருச்சபை மக்கள் கொண்டு வருகின்ற காணிக்கைகளை ஆசீர்வதிக்கிறார்கள்.
காணிக்கைகள் படைக்கும்போது முதலாவது ஆண்கள் வரிசையாக வந்து பேராயர் முன்னிலையில் காணிக்கைகளைப் படைத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வார்கள். அது போன்றே பெண்களும் வரிசையாக வந்து பேராயர் முன்னிலையில் காணிக்கை படைத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வர். காணிக்கை படைக்கும் போது ஆண்களையும் பெண்களையும் வரிசைப்படுத்த மேல் நெல்லை மேல்நிலைப் பள்ளியின் சாரணர் இயக்கத்தைச் சார்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து பிரதான பண்டிகை ஆராதனையின் போது ஒழுங்கை நிலை நாட்டுவர். அவர்களுடைய பணி பாராட்டுதற்குரியது.
தவச உற்சவப் பண்டிகையின் ஆராதனை ஒழுங்குகள் செம்மையான முறையில் கடைபிடிக்கப்படுகிறது. நல்லூர் நெல்லையின் மேற்பகுதியில் தாய்ச் சபையாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் நெல்லைத் திருமண்டல பேராயர் அவர்களை அழைத்துத்தான் ஸ்தோத்திரப் பண்டிகை நடத்தப்படுகிறது.
முதல் நாள் மாலை சேகர ஆசிரியர்கள் சபையோர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வாலிப ஆண்கள், வாலிப பெண்கள் நல்லூர் சபைக்குள் தெருக்களில் பவனியாகப் பாட்டுப்பாடி வந்து ஆலயத்தின் முன் பிரதான வாசலருகே வெளிப்புறத்தில் போடப்பட்டிருக்கும் பந்தலின் ஆர்ச்சையொட்டி திருமண்டலக் கொடி ஏற்றப்படும். பின்பு இரவு ஆயத்த ஆராதனை நடைபெற்ற பிறகு ஏதாவது நிகழ்ச்சி நடைபெறும். இரண்டாம் நாள் காலை 5.00 மணிக்கு அருணோதயப் பிரார்த்தனையும், காலை 9.00 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும் நடைபெறும். ஞானஸ்நான ஆராதனையின் போது சபையிலுள்ள சிறுகுழந்தைகளும், இயேசு கிறிஸ்துவை அறியாத பருவங்கடந்த ஆண்களும், பெண்களும் ஞானஸ்நானம் பெறுவார்கள்.
முன் நாட்களில் ஞானஸ்நான ஆராதனையின் போது பொன்னம்மாள் ஆசிரமத்தின் ஊழியர்கள் மூலம் அநேகர் பருவங்கடந்த ஞானஸ்நானம் பெறுவது நல்லூர் சுவிசேஷ ஊழியத்தின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
பிரதான பண்டிகைக்குப் பேராயர் வருகிற போது நல்லூர் எல்கையில் நிறுத்தி அங்கிருந்து மேல்நிலைப் பள்ளி இல்ல மாணவர்கள், சபையோர்கள், சேகர ஆசிரியர், ஆசிரியைகள் வரவேற்று பாடல் பாடி பவனியாக அழைத்து வருவது பண்டிகையின் கண்கொள்ளாக் காட்சியாகும். பிற்பகல் 1.30 மணியளவில் பிரதான பண்டிகைக்கு இரண்டாம் மணி அடித்தவுடன் பாடகர் வரிசையினர், சபைமன்றக் குருக்கள், இறுதியாக பேராயர் ஆகியோர் ஆலயத்தின் கீழ் புறமுள்ள பிரதான வாயிலில் இருந்து பவனியாக வந்து பந்தல் மேடையில் அமர்வது ஆராதனையின் கண்கொள்ளாக் பாட்சியாகும். அன்று மாலை நான்கு மணிக்கு பெண்கள் கூட்டம் நடைபெறும். அன்று இரவு 7.00 மணிக்கு இந்திய க்ஷஷனரி சங்கம் சார்பில் பணித்தள நிகழ்ச்சி நடைபெறும். இரவு ஒன்பது மணிக்கு பஜனைப் பிரசங்கம் நடைபெறும்.
மூன்றாம் நாள் அதிகாலையில் 5 மணிக்கு லித்தானியா ஆராதனை நடைபெறும். பிற்பகல் 1.30 மணிக்கு ட்டும் வருடாந்திரக் கூட்டம் நடைபெறும். வருடாந்திரக் கூட்டத்தில் நல்லூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்குவார்கள். வருடாந்திரக் கூட்டத்தில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற வெளியிடத்தில் இருந்து சிறந்த கிறிஸ்தவ சொற்பொழிவாளரை அழைப்பார்கள். வேதபாடத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் இரண்டு மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் C.S.I, ஜெயராஜ்- அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் அவர்கள் மேடையிலிருந்து பரிசுகள் வழங்குவார்கள். விழா மேடையில் சேகர குருவானவர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், சேகர செயலர், சேகர பொருளாளர், சொற்பொழிவாற்ற வந்திருப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
வருடாந்திரக் கூட்டத்தில் சேகர வரவு செலவுகள் வளர்ச்சி பற்றி அறிக்கை வாசிக்கப்படும். மாலை 4.00 மணிக்கு பாலர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு முடிய பந்தலில் வாய்மொழியாக வேதவசனப் போட்டி நடைபெறும்.
இரவு 9.00 மணி முதல் 12.00 மணி முடிய நடக்கின்ற பஜனைப் பிரசங்கத்துடன் பண்டிகையானது வெகு கோலாகலத்துடன் முடிவடைகிறது.
தொகுப்பு
சுஜித்
0 Comments