முகவுரை: வேதாகம மனிதர்களின் வல்லமையான ஜெபங்கள்
வேத பகுதி: 1 தீமோத்தேயு 2.8
விளக்கவுரை
உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள். தவக்காலத்தின் நாற்பது நாள்கள், வேத தியானம் மற்றும் ஜெபத்தின் வாயிலாக, கடவுளோடுள்ள நம் உறவை புதுப்பிக்கவும், பலப்படுத்தவும் கிடைத்த அரிய நாள்கள். இந்த ஆண்டு, இந்த நாள்களில், வேதாகம மனிதர்களின் வல்லமையான ஜெபங்கள் என்ற தலைப்பில் நாற்பது நாள்களும் நாம் தியானிக்க இருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். சார்லஸ் பின்னி என்பவர் சொல்வது: "ஜெப இருதயமே மிகப் பெரிய தேவை. ஆனால், அதைப் பெறுவதே மிகக் கடினம். இதுவே நான் திட்டமாய் கண்டறிந்தது."ஆம், ஜெப ஜீவியம் கிறிஸ்தவ வாழ்விற்கு இன்றியமையாதது.
அப்போஸ்தலராகிய பரிசுத்த பவுல், தீமோத்தேயுவுக்கு எழுதியது: "... ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்" (1 தீமோத்தேயு 2.8). ஆம், இந்த வசனத்திற்கு முன்னுதாரணமாக, வேதாகம பரிசுத்தவான்கள் வாழ்ந்துள்ளனர். ஜெபம் அநேக மனிதர்களின் வாழ்வை மறுரூபமாக்கியிருக்கிறது; தேசத்தை அசைத்திருக்கிறது. "ஜெபத்தை தியானிப்பது என்பது தியானத்தின் வழியாய் இறைவனோடு உரையாடுவதில் நம்மை உருவாக்கும் அணுகுமுறை எனலாம்."
திருச்சபை சீர்த்திருத்தவாதி மார்ட்டின் லூத்தர் அதிகாலை 4-6 மணி வரை ஜெபிக்கும் பழக்கமுடையவர். இதைக் குறித்து அவர் கூறும்போது, "நான் அதிகாலை ஜெபம் செய்யாவிட்டால் அந்நாளை என் வாழ்வில் இழந்து விட்டதாக உணருகிறேன்" என்றார். மேலும், யூத அறிஞர் ஒருவர் சொல்லுகிறார்: "ஜெபம் என்பது பரலோகமும் பூலோகமும் ஒன்றை ஒன்று முத்தமிடும் நிகழ்ச்சியாகும்."
இப்படி ஜெபித்த, நாற்பது வேதாகம மனிதர்களைக் குறித்தும், அவர்கள் ஜெபங்களைக் குறித்தும் தான், நாம் தொடர்ச்சியாக தியானிக்க இருக்கிறோம். இந்த தியானங்களை எழுதுகின்ற நமது வாலிப ஆண்கள் ஐக்கிய சங்க சகோதரர்களை வாழ்த்துகின்றேன். இந்த தவக் கால தியானங்கள் நமது ஜெப வாழ்வை உயிர்ப்பிக்கும் என்று நம்புகின்றேன். இந்த நாற்பது மனிதர்களின் ஜெபங்கள் நமது தியானங்களாகட்டும். அவை நம் ஆவிக்குரிய வாழ்வை வசந்தமாக்கட்டும்.
ஆண்டவரின் ஆசீர்வாதம் உங்களோடிருப்பதாக. ஆமென்.
எழுதியவர்
Rev. T.D. ஜெபக்குமார்.
தச்சநல்லூர் சேகர தலைவர் &
வடமேற்கு சபைமன்ற தலைவர்.
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments