தலைப்பு
ஆமோஸ்: மனஸ்தாபம் வேண்டி ஜெபம்
வேத பகுதி: ஆமோஸ் 7:1-5
வேதாகம நபர் குறிப்பு
பெயர் காரணம் : ஆமோஸ் என்பதற்கு “பாரம்” அல்லது “பாரம் சுமப்பவன்” என்பது பொருளாகும்
தொழில்: எருசலேமில் உள்ள தெக்கோவா என்னும் ஊரில் ஆடு மேய்த்தவன். தேசத்தின் பாவத்தை பார்த்து பாரமடைந்ததினால் தேவனால் தீர்க்கதரிசியாக அழைப்பு பெற்று ஊழியம்செய்தான்.
காலம்: யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு தீர்க்கதரிசனம் உரைத்தான்.
விளக்கவுரை:
ஆமோஸ் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் கர்த்தரின் ஆசீர்வாதம் என்றால் செல்வ செழிப்பாக வாழ்வதே என்ற எண்ணம் உடையவர்களாய் இருந்தனர். அந்த எண்ணத்தினால் நாம் கர்த்தருக்கு பிரியமாகவே வாழ்கிறோம் என்று நினைத்தனர். வாழ்ந்து சுகித்து இருக்கும்போது கர்த்தரை மறந்தனர். கர்த்தரின் எதிர்ப்பார்ப்பு அன்பு, நீதி, நியாயம் என்பதனையும் நினைக்க தவறி பாவத்தில் வாழ்ந்தனர்.
தன் ஜனத்தின் இத்தகைய நிலையை உணர்ந்த ஆமோஸ் பாரம் கொண்டான். அதுவே கர்த்தரின் பாரமாகவும் இருந்தது. எனவே, கர்த்தர் அவனிடம் இஸ்ரவேலுக்கு வரப்போகிற ஆபத்தினை தரிசனமாய் காண்பித்தார்(வ 1,4).
தன் ஜனத்தின் தன் தேசத்தின் அழிவை குறித்த தரிசனத்தை கண்ட ஆமோஸ் ஆண்டவரிடம் “மன்னித்தருளுமே” “நிறுத்துமே” என்று கதறினான். கர்த்தர் யாக்கோபுக்கு இத்தகைய தீங்கை வர பண்ணுவார் என்றால் ஒருபோதும் திரும்ப எழும்ப முடியாது என்று உணர்ந்து ஆண்டவரை நோக்கி வேண்டுதல் செய்தான்.
கர்த்தரும் அவனுடைய உண்மையான, ஊக்கமான வேண்டுதலுக்கு இறங்கி தான் செய்ய நினைத்த தீங்கிற்கு “அப்படி ஆவதில்லை” என்று மனஸ்தாபம் கொண்டார்.
கற்றுக்கொள்ளும் பாடம்:
என்னுடைய ஆடு என்னுடைய மந்தை என்று ஆமோஸ் வாழ்ந்திருந்தால் இத்தகைய பாரத்தோடு தன் ஜனத்திற்காக ஜெபத்திருக்க முடியாது. இன்று நாம் சுய நலமாக வாழ்ந்தால் நம்முடைய ஜெபமும் சுய நலமாகவே இருக்கும்.
கர்த்தருடைய பாரம் நம்முடைய பாரமாய் இருக்கும் போது நம்முடைய ஜெபமும் கர்த்தரின் இரக்கத்தை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
0 Comments