Ad Code

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு • Pope Francis Life History

💐திருத்தந்தை பிரான்சிஸ் (Pope Francis; 17 டிசம்பர் 1936 – 21 ஏப்ரல் 2025) கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். இவர் 2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர். புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.

💐 தென் அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே. மேலும், இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார். மூன்றாம் கிரகோரிக்கு பிறகு, கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. 913இல் திருத்தந்தை லாண்டோவுக்குப் பின்பு தனக்கு முன் இருந்த திருத்தந்தையரின் பெயரை தனது ஆட்சிப்பெயராகத் தெரிவு செய்யாத இரண்டாம் திருத்தந்தை இவர் ஆவார்.

💐இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம் மற்றும் இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.

💐திருத்தந்தை பிரான்சிசு தம் இளமையில் அரசு பள்ளியில் கல்வி பயின்றவர். சுமார் 20 வயதில் அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக அவர் ஒரு நுரையீரலின் செயல்பாடு இழந்தார். புவேனோஸ் ஐரேஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் தம்மைக் கடவுள், இயேசு சபைத் துறவறக் குருவாக அழைப்பதை உணர்ந்த அவர் இயேசு சபையில் 1958இல் புகுமுகத் துறவு நிலையில் சேர்ந்தார்.
💐1967இல் இறையியல் படிப்பை முடித்த அவர் 1969, திசம்பர் 13ஆம் நாள், தமது 33ஆம் வயதில் இயேசு சபையில் குருத்துவப் பட்டம் பெற்றார்.அவர் கல்விபயின்ற குருத்துவக் கல்லூரியிலேயே புகுமுகத் துறவியர் தலைவராகவும் இறையியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

💐 1992, ஜுன் 27ஆம் நாள் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் ஆயராக திருநிலை படுத்தப்பட்ட ஆயர் *பெர்கோலியோ* (திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இயற்பெயர்)
1998, பெப்ருவரி 28ஆம் நாள் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதே நேரத்தில் அவர் அர்ஜென்டீனா நாட்டில் வாழ்ந்து தனி அமைப்பு இல்லாத கீழைச் சபைக் கத்தோலிக்கர்களுக்கும் ஆயராக நியமிக்கப்பட்டார். 

💐 திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பேராயர் ஹோர்கே மாரியோ , ஆயரான தந்தை பெர்கோலியோவை, 2001, பெப்ருவரி 21ஆம் நாள் கர்தினால் பதவிக்கு உயர்த்தினார்.

💐கர்தினால் பெர்கோலியோவின் பணிக்காலத்தில் அவரிடம் துலங்கிய நற்பண்புகள் பற்றிப் பலரும் சான்றுபகர்கின்றனர். அவர் மிகவும் பணிவான, எளிமையான வாழ்க்கை நடத்தினார். ஏழைகள் மீது பரிவு காட்டுவதும், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக உழைப்பதும் அவருடைய சிறப்புப் பண்புகளாகக் குறிக்கப்படுகின்றன.

💐2007இல் நடந்த இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் கூட்டத்தில் கர்தினால் பெர்கோலியோ(திருத்தந்தை பிரான்சிஸ்) கீழ்வருமாறு பேசினார்:

“ உலகத்திலேயே மிகுதியான ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்ற ஒரு பிரதேசத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இங்கே பெரிய அளவு வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வறுமை ஒழிப்பு மிகக் குறைவாகவே நிகழ்ந்துள்ளது. உலகின் வளங்கள் இங்கே நீதியின் அடிப்படையில் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இங்கே நிலவுகின்ற சமூகத் தீவினை விண்ணகம் நோக்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த சமூகத் தீவினையானது நம் உடன்பிறப்புகளுள் எண்ணிறந்தோரின் வாழ்க்கையில் முன்னேற்றமோ வளர்ச்சியோ ஏற்படாதவண்ணம் தடுத்துக்கொண்டே இருக்கின்றது '
  அவரது சமத்துவ மற்றும் சமதர்ம சிந்தனைகளும் ,புரட்சி அணுகுமுறைகளும் சிந்தனைக்குரியவை.

💐கர்தினால் பெர்கோலியோ எளிமையான வாழ்க்கை நடத்தினார். பேராயர் என்ற முறையில் அவருக்குப் பெரியதொரு மாளிகை இல்லமாக இருந்தபோதிலும் அவர் ஒரு எளிய, சிறிய கட்டடத்தில் வாழ்ந்தார். தனி ஓட்டுநரைக் கொண்ட சொகுசு தானுந்து தமக்கு அளிக்கப்பட்டபோதும் அது வேண்டாம் என்று கர்தினால் பெர்கோலியோ பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்து மற்றும் பெருநகர் உந்துகளிலே பயணம் செய்தார். மேலும், சமையலுக்கென்று தனி ஆள் வைக்காமல், அவர் தமக்கு வேண்டிய உணவைத் தாமே சமைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

💐அநீதியான அமைப்புகளை ஒழித்துச் சமூக நீதியை நிலைநாட்டுவதை விடவும் ஒவ்வொருவரும் நீதியான, எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கை நடத்தும்போது அதுவே சமூக நீதிக்கு வழியாகும் என்பது அவருடைய அணுகுமுறையாக இருந்தது.

💐2013ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அதிர்ச்சியான ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது, தமது முதிர்ந்த வயது காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் 2013, பெப்ருவரி 28ஆம் நாள் தாம் திருத்தந்தைப் பணியைத் துறக்கப்போவதாக அவர் செய்தி வெளியிட்டார். கடந்த சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு ஒரு திருத்தந்தை பணியிலிருந்து விலகியதில்லை. மாறாக, திருத்தந்தைப் பதவி வாழ்நாள் முழுவதற்கும் நீடிப்பது என்ற வழக்கம் நிலவியது.

அந்த அதிர்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2013, மார்ச் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடிய 115 கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குகள் அளித்தார்கள். அடுத்த நாள் மார்ச் 13, புதன்கிழமையன்று கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

💐இவர் பிரான்சிஸ் என்பதை தனது ஆட்சி பெயராகத் தெரிவு செய்தார். அதே நாளில் வத்திக்கான் நகரின் துணை செய்தித் தொடர்பாளர் அருள்திரு தாமசு ரோசிக்கா, இப்பெயரை திருத்தந்தை அசிசியின் பிரான்சிஸ் நினைவாகத் தேர்வு செய்தார் எனக் கூறினார்.மேலும் அவர் திருத்தந்தையின் பெயர் பிரான்சிஸ் என்றும் முதலாம் பிரான்சிஸ் அல்ல எனவும் தெளிவுபடுத்தினார். பின்னாட்களில் வேறு ஒருவர் பிரான்சிஸ் என்னும் பெயரினைத் தேர்வு செய்தால் அப்போது இவர் முதலாம் பிரான்சிஸ் எனக் குறிக்கப்படுவார் எனவும் கூறினார்.

💐2013, டிசம்பர் 11ஆம் நாளில், உலகப் புகழ்பெற்ற "டைம் வார இதழ்" (Time Magazine) திருத்தந்தை பிரான்சிசை 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று அறிவித்துக் கவுரவப்படுத்தியுள்ளது.

💐திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இந்த விருது வழங்கியது எதற்காக என்று கேட்ட கேள்விக்கு "டைம்" இதழின் ஆசிரியர் நான்சி கிப்சு (Nancy Gibbs) என்பவர் பின்வருமாறு பதிலிறுத்தார்:

“ திருத்தந்தை பிரான்சிசு உண்மையிலேயே "மக்களின் திருத்தந்தை" (The People's Pope) என்ற சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்ற 9 மாதங்களுக்கு உள்ளேயே, கத்தோலிக்க திருச்சபையின் உயர்தலைவரான திருத்தந்தை பிரான்சிசு உலக மனச்சாட்சியின் புதிய குரலாக மாறிவிட்டார்...மிகக் குறுகிய காலத்திலேயே உலக அரங்கில் முதியோர், இளையோர், ஆதரவாளர், ஐயப்பாடுடையோர் என்ற வேறுபாடின்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்ட பெருமை அவருக்கு உண்டு. எனவே, திருத்தந்தை பிரான்சிசை "2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளோம்.

💐திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே பிரான்சிசு திருச்சபையின் ஆட்சி அமைப்பிலும் செயல்பாட்டிலும் சிந்தனைப் போக்கிலும் அடிப்படையான சில மாற்றங்களைக் கொண்டுவரப் போவதற்கான அறிகுறிகளைத் தெரிவித்தார்.

💐2013, மார்ச்சு 13, 
தேர்தல் அவையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கர்தினால் பெர்கோலியோவுக்கு தேர்தலின் இரண்டாம் நாள் ஐந்தாம் சுற்றில் கிடைத்தது. உடனேயே கூடியிருந்த கர்தினால்மார் கையொலி எழுப்பித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
கர்தினால்-வாக்காளர்களில் மூத்தவர் என்ற முறையில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா ரே, கர்தினால் பெர்கோலியோவை அணுகி, சட்டமுறைப்படியான தேர்தல் வழி உமக்கு அளிக்கப்படுகின்ற திருத்தந்தைப் பதவியை ஏற்கிறீரா? என்று கேட்டார். அதற்குக் கர்தினால் பெர்கோலியோ ஏற்கிறேன் என்று பதிலளித்தார். அந்நேரத்திலிருந்து கர்தினால் பெர்கோலியோ "திருத்தந்தை" என்னும் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் கர்தினால் ரே, புதிய திருத்தந்தையிடம் என்ன பதவிப்பெயரைத் தெரிந்துள்ளீர்? என்று கேட்டார். அக்கேள்விக்குப் பதில்மொழியாகத் திருத்தந்தை பிரான்சிசு என்று கூறினார்.

பின்னர் திருத்தந்தை பிரான்சிசு சிவப்பு நிறமான தமது கர்தினால் அங்கியைக் களைந்துவிட்டு, திருத்தந்தைக்குரிய வெள்ளை அங்கியை அணிந்துகொண்டார். அந்த அங்கியின் மேல் திருத்தந்தைக்கே உரிய கருஞ்சிவப்பு நிறத்திலான தோள்சுற்றாடை (mozzetta) அணிந்து, அதன்மேல் தங்கக் கழுத்துச் சிலுவை அணியும்படி திருத்தந்தை வழிபாட்டுமுறைத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் திருத்தந்தை பிரான்சிசு அந்த ஆடம்பரம் தமக்கு வேண்டாம் என்று கூறி, தாம் ஆயரான நாளிலிருந்தே அணிந்துவந்துள்ள இரும்பிலான கழுத்துச் சிலுவையை போதும் என்றும், தோள்சுற்றாடை வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

அதன்பிறகு, அவர் கர்தினால்-வேட்பாளர்கள் கூடியிருந்த சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு மீண்டும் சென்று, அங்கு கர்தினால்மார் அளித்த மரியாதையைப் பெற்றுக்கொண்டார். அங்கு வழக்கமாகப் புதிய திருத்தந்தைக்கென்று ஓர் உயர்ந்த மேடையில் இடப்பட்ட அரியணை இருக்கும் அதில் புதிய திருத்தந்தை அமர்ந்திருக்க, ஒவ்வொரு கர்தினாலும் அவர்முன் வந்து, முழந்தாட்படியிட்டு அவருடைய கை மோதிரத்தை முத்திசெய்தி தம் மரியாதையையும் கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்துவர். ஆனால், இங்கேயும் திருத்தந்தை தாம் எளிய முறையைக் கடைப்பிடிப்பதாகக் காட்டினார். அவர் தமக்கென்று போடப்பட்ட அரியணையில் அமராமல், பிற கர்தினால்மார்களைப் போலவே நின்றுகொண்டு அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். கர்தினால் *ஹோர்கே மாரியோ பெர்கோலியோ* என்னும் பெயருடைய அவர் *பிரான்சிசு* என்னும் பெயரைத் தெரிந்துகொண்டுள்ளார் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தை மக்கள் முன் தோன்றி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

💐மக்களுக்கு உரையாற்றியபோது திருத்தந்தை மக்களிடம் தமக்காக இறைவனிடம் அமைதியாக மன்றாடக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு கூறிய பின் சிறிது நேரம் மக்கள் முன்னிலையில் தலைதாழ்த்தி நின்றார். பின்னர் குருத்துவ அடையாளமான தோள்தொங்கல் பட்டையை அணிந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினார். ஆசி வழங்கியதும் அந்தப் பட்டையைக் கழற்றிக்கொடுத்துவிட்டார். இவ்வாறு மக்களோடு ஒருவராகத் தம்மை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தாம் பணியாளனாக இருப்பதைத் திருத்தந்தை செய்கைகள் வழியாக வெளிப்படுத்தினார்.

திருத்தந்தையின் எளிமையையும் பணிவையும் மக்கள் கண்டு வியந்தது மட்டுமல்ல, புதிய திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையில் எளிமை, கனிவு, பணிவு போன்ற பண்புகள் வளர்வதற்குத் தம் பணிக்காலத்தை அர்ப்பணிப்பார் என்று பொருள்கொண்டன.

🙏🏻🙏🏻🙏🏻கடந்த 12 ஆண்டுகளாக திருச்சபையை தூய ஆவியின் துணையோடு வழிநடத்தி உலகிற்கு இயேசுவின் இரக்கம் மிகுந்த முகத்தையும் உள்ளத்தையும் தம் செயல்களால் வெளிப்படுத்தி ஏழை எளியவரையும், அடிமைகளையும் இறையாட்சியின் அடையாளமாக காண்பித்தார். உலக அமைதிக்காக செபத்தாலும் தம் ஈடுபாட்டாலும் தொடர்ந்து பாடுபட்டவர். 

Post a Comment

0 Comments