Ad Code

மிஷனெரி பர்னபாஸ் ஷா Barnabas Shaw

மண்ணில் : 12.04.1788    
விண்ணில் : 21.06.1857
ஊர் : எல்லாக்டன்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : நமக்வாலாண்ட், தென்னாப்பிரிக்கா

 பர்னபாஸ் ஷா தென்னாப்பிரிக்காவில் பணியாற்றிய ஒரு முன்னோடி மிஷனரி. அவர் நமக்வா பழங்குடியினரிடையே செய்த ஊழியத்திற்காக அறியப்பட்டவர். அவர் தனது தந்தையின் பண்ணையில் ஆடுகளை மேய்த்துகொண்டு வளர்ந்தார். ஒரு ஞாயிறு பள்ளியில் கிறிஸ்துவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்ட அவர், இருபது வயதில் பகிரங்கமாக பிரசங்கிக்கத் தொடங்கினார். 1814ஆம் ஆண்டில் நடந்த ஒரு மெதடிஸ்ட் மாநாட்டில், மிஷனரி சேவைக்கான கர்த்தரின் திட்டவட்டமான அழைப்பிற்கு பர்னபாஸ் கீழ்ப்படிந்தார். இந்தியாவில் சேவை செய்யத் அவர் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனாலும், வெஸ்லியன் மிஷனரி சொசைட்டி அவரை தென்னாப்பிரிக்காவில் சேவை செய்ய அனுப்பியது.

மிகுந்த உற்சாகத்துடன் கேப் டவுனுக்கு வந்தார் பர்னபாஸ். ஆனால், ஆ நகர ஆளுநர் அவருக்கு அழைப்பு இல்லாவிட்டால் அங்கு ஊழியம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அவரை அனுமதிக்க மறுத்துவிட்டார். இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் பர்னாபாஸ் தற்காலிகமாக இரண்டு ஆங்கில இராணுவ தளங்களில் பணியாற்றினார். ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை. ஏனென்றால், உள்ளூர் புறஜாதி பழங்குடியினருக்கு சேவை செய்ய அவர் அழைக்கப்பட்டார் என்பதை அவர் தனது இதயத்தில் நன்கு அறிந்திருந்தார். அங்குள்ள இனப் பழங்குடியினரைச் சந்திக்க அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. அந்த சூழ்நிலையில் கர்த்தர் அவருக்கு மிகவும் சுவாரஸ்யமான வழியில் வாசலைத் திறந்தார்.

ஒரு நாள் அவர் கேப் டவுனை நோக்கி ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் அவர் சோர்வாக இருந்த ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நமக்வா என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்களின் தலைவர், "நாங்கள் 'தேவனின் வார்த்தை'யைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, அதை எங்களுக்கு விளக்கக்கூடிய நபரை நாங்கள் தேடுகிறோம்." என்று சொன்னார். ஆஹா! பர்னபாஸ் மகிழ்ச்சியுடன் வண்டியிலிருந்து குதித்து, உடனடியாக இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர்களுக்கு போதிக்க முன்வந்தார். வெவ்வேறு மக்களின் ஆசைகளை தேவன் எவ்வளவு அற்புதமாக திருப்திப்படுத்துகிறார்! -நாமக்வா பழங்குடியினர் நாகரிகமற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் அப்பாவி மக்கள். பர்னபாஸ் 'தேவனின் வார்த்தையை' அவர்களுக்கு போதிக்க மகிழ்ச்சியுடன் முயன்றார், மேலும் நாகரிகத்தையும் அவர்களுக்கு கற்பித்தார். அவர் விதைத்த அந்த நல்ல விதை ஏராளமான கனிகளைக் கொடுத்தது. அவரது வேண்டுகோளின் பேரில் இங்கிலாந்திலிருந்து அதிகமான மிஷனரிகள் அங்கு வந்தனர், மேலும் இந்த ஊழியம் தென்னாப்பிரிக்காவின் அனைத்து திசைகளிலும் பரவியது.

நாமக்வா பழங்குடியினரிடையே 10 வருட தீவிர ஊழியத்திற்குப் பிறகு, கடுமையாக சோர்வடைந்த பர்னாபாஸ், அந்த தீவிர சோர்விலிருந்து மீள இங்கிலாந்து திரும்பினார். அவர் மீண்டும் நமக்வாலாந்துக்குத் திரும்ப விரும்பினாலும், உடல்நலக்குறைவு காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. ஆனாலும், 1857ஆம் ஆண்டில் தான் மரணமடையும் வரை இங்கிலாந்தில் சேவை செய்துகொண்டு கர்த்தரின் ஊழியத்தில் தொடர்ந்து முன்சென்றார் பர்னபாஸ் ஷா.   

* பிரியமானவர்களே, கிறிஸ்துவை இன்னும் அறிய உங்கள் ஆத்துமா வாஞ்சிக்குகிறதா? புறஜாதிகளிடையே கிறிஸ்துவை அறிவிக்க உங்களுக்கு தாகம் இருக்கிறதா?  

மிஷனெரி பர்னபாஸ் ஷா போன்ற மிஷினரிகள் மேலாடை மறுக்கப்பட்டோர் , உரிமை துறந்தோர் , தெருவில் நடக்க தடைசெய்யப்பட்டோரிடம் கடவுளை அறிவித்து, அவர்களது உள்ளத்தின் அடிமை சங்கிலியிலிருது விடுதலை கொடுத்தது மட்டுமல்லாமல் சமூக விடுதலைக்கும் பாடுபட்டு அதை பெற்றுக்கொடுத்தார்கள் . 

இன்று மிஷினரிகள் அமைத்து கொடுத்த ஆலயத்தின் அருகில் போதகர்கள் விலை உசந்த நாய்களை வீட்டில் வளர்க்கிறார்கள் ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஆலய பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை , அவர்களுக்கு தன்னைப்போல அவர்கள் குடியிருப்பிற்கு சுத்தநீர் இணைப்பை கொடுப்பதில்லை , ஆலய வேலையே தவிர்த்து போதகர்கள் வாங்கிகுவித்திருக்கும் சொத்துக்களை பராமரிக்கவும் , நிலத்திற்கு வேலிபோடவும் , பயன்படுத்துகிறார்கள் . 

போதகர்களின் ஆணைக்கு அடங்கமறுத்தால் நேரடி மறைமுக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் .

போதகரின் நாய்கள் ஆலயத்தை அசிங்கப்படுத்தும்போது , சிறுநீர் கழிக்கும்போது இந்த கடைநிலை ஊழியர்கள் அதனை சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

மிஷினரிகள் செய்த விடுதலை ஊழியத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆலயத்தில் இன்று அடிமைகள் பலர் செஸ்ட்டன் வடிவில் போதகருக்கும் ,அவர் குடும்பத்திற்கும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் . 

இந்த போதகருக்கு அடிமை பட்டுக்கிடக்கும் பல்லாயிரம் செக்ஷ்டன் களின் சமூக பொருளாதார விடுதலைக்கு, குரல் கொடுக்க மீண்டும் மிஷினரிகள் வரவை தேடிநிற்கிறது ஆலயத்தில் அமைந்துள்ள அடிநிலை ஊழியர்களின் குடிசைகள் .

Post a Comment

0 Comments