கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு பின்வரும் 5-ம் ஞாயிறு (பிரசன்ன திருநாளுக்கு பின்வரும் 3-ம் ஞாயிறு)
தேதி : 25-01-2026
வண்ணம் : வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாட்டுப் பகுதி : யோசுவா 4: 1-11
நிருப வாக்கியம் : அப்போஸ்தலர் 4: 32-37
நற்செய்தி பகுதி : மாற்கு 6: 32- 44
சங்கீதம் 67
2. திருவசனம்
தலைப்பு: ஐக்கியத்தை வெளிப்படுத்தும் விசுவாசம்
இருப்பிடம் : அப்போஸ்தலர் 4:32
திருவசனம்: (பவர் திருப்புதல்)
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. அப்போஸ்தலர் 4:32
(திருவிவிலியம்)
திருத்தூதர் பணிகள் 4 : 33
திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
3. திருவசன தலைப்பு & ஞாயிறு தொடர்பு :
இந்த ஞாயிறு (Ecumenical Sunday) ஒன்றிப்பு ஞாயிறு ஆகும். விசுவாச வாழ்க்கையில் ஆண்டவருடன் ஐக்கியம் மற்றும் சக மனிதருடனான ஐக்கியம் என்பது இரண்டு விதமான கண்கள் போன்றது. ஐக்கியம் இல்லாத விசுவாசம் என்பது சாத்தியமற்றது.
4. வசனக்குறிப்புகள்:
ஆசிரியர்:
லூக்கா மருத்துவர் (கொலோசெயர் 4:14) , வரலாற்று ஆசிரியர், ஊழியத்தில் உற்ற நண்பர் 2 தீமோதீதேயு 4:11) .
அவையோர்:
லூக்கா எழுதிய புத்தகங்கள் (லூக்கா நற்செய்தி & அப்போஸ்தலர்) தெயோப்பிலு என்று சொல்லப்பட்ட ரோம அதிகாரிக்கு எழுதப்பட்டது. மேலும், *தியோப்பிலோஸ்* என்ற கிரேக்க பதம் அனைத்து விசுவாச மக்களையும் குறிக்கும்.
பின்னணி :
ஆதி திருச்சபையின் சீடர்களும் விசுவாச மக்களும் இயேசுவைப் பிரசங்கிப்பதற்கு தடை செய்யப்பட்ட காலத்தில் தங்கள் நடைமுறை வாழ்வின் செயல்பாடுகள் மூலம் இயேசுவை வெளிப்படுத்த முற்பட்ட சூழலில் இவ்வசனம் எழுதப்பட்டது. பெந்தெகோஸ்தே அனுபவத்திற்கு பின் பல்வேறு இடங்களில் இருந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில், எருசலேம் திருச்சபை கட்டாயம் விசுவாச மக்களின் தேவையைச் சந்திக்க வேண்டும் என்ற சூழலுக்குள் தள்ளப்பட்டது.
5. திருவசன விளக்கவுரை :
ஆதி திருச்சபையின் வளர்ச்சி மற்றும் பெருக்கம் என்பது விசுவாசம், ஐக்கியம் இவை இரண்டின் மீதும் ஒருங்கே கட்டப்பட்ட கூட்டமைப்பு ஆகும். நம்பிக்கை கொண்ட பெருங்கூட்டம் எனும் வார்த்தை கட்டாயத்தின்பேரிலோ, கட்டுப்பாட்டின் அடிப்படையிலோ சேர்ந்த கூட்டமல்ல. மாறாக, தூய ஆவியானவரின் தூண்டுதலால், வேறுபாடு பின்புலம் யாவற்றையும் கடந்து பின்பற்றிய மக்கள் என்பதைக் குறிக்கிறது (V.32 a). தாங்கள் உழைத்து சம்பாதித்த உடைமைகள் யாவும் ஆண்டவரால் அருளப்பட்டது என்ற சிந்தனை அவர்களுக்குள் மேலோங்கியது (V. 32 b). தங்களிடத்தில் இருந்த அனைத்தையும் ஒரே நேரத்தில் விற்றுக் கொண்டுவந்தார்கள் என்பதாக அல்லாமல் விசுவாச மக்களின் தேவைக்கேற்ப கர்த்தர் அவர்கள் உள்ளத்தில் ஏவுகிறபடி இது செய்யப்பட்டது என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.(V.32 c)
6. இறையியல் & வாழ்வியல் :
ஆண்டவரின் திருச்சபை என்பது குறிப்பிட்ட சமுதாயம், இனம், நிறம் மற்றும் மொழி பேசும் மக்கள் என எல்லைக்குட்பட்டது அல்ல. ஏற்றத்தாழ்வு இல்லாத அனைவருக்குமான சபை. எனக்கானது என சொந்தம் கொண்டாடும் இடமாக சபையைப் பாராமல் நம்மை இயேசுவின் பிள்ளைகள் என உரிமையாக்கிய அவருடைய சபையாக காணப்பட வேண்டும். உலகப் பொதுவுடைமை கொள்கை (Communism) என்பது *உன்னுடையதும் என்னுடையது ; அதை நான் எடுத்துக் கொள்வேன்* என்பதாகும். ஆனால் வேதத்தில் உள்ள கொய்னோனியா (பொதுவான பகர்வு) என்பது *என்னுடையதும் உன்னுடையது; நான் அதை உன்னுடன் பகிர்வேன்* என வாழ்வது ஆகும் (LaSor). பகிர்வு தான் கிறிஸ்தவ விசுவாச ஜீவியம்.
7. அருளுரைக் குறிப்புகள்
1. எல்லையைக் கடந்த விசுவாச ஐக்கியம்
2. எல்லாவற்றையும் வெறுத்து, இயேசுவுடனான விசுவாச ஐக்கியம்
3. எல்லாவற்றையும் பகிரும் விசுவாச ஐக்கியம்
எழுதியவர்
திரு. கிறிஸ்து ராசையா
சபை ஊழியர் ,
அடைமிதிப்பான்குளம்
ஆரைக்குளம் சேகரம்

0 Comments