ஞாயிறு: கிறி. உயி. திரு. முன்வரும் 8-ம் ஞாயிறு
தேதி: 08/02/2026
வண்ணம்: கரு நீல ஊதா நிறம்
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: ஏசா. 42:1-9
நிருப வாக்கியம்: யாக். 5:13-18
நற்செய்தி பகுதி: மத். 9:35-38
சங்கீதம்: 103:1-14
2. திருவசனம்
தலைப்பு: மனதுருக்கமும் குணமாக்குதலும் மத்தேயு 14:14
திருவசனம்: (பவர் திருப்புதல்)
இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
(திருவிவிலியம்) இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.
மத்தேயு நற்செய்தி 14:14
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
செக்சகெசிமா (SEXAGESIMA)
இலத்தீன் சொல் "Sexagesima" என்பது "அறுபதாவது" (sexagesimus - 60) என்று பொருள்படும், ஏனெனில் இது கிறிஸ்து உயிர்த்தெழுதல் திருநாளுக்கு (Easter) சுமார் 60 நாட்கள் முன் வருகிறது. இந்த நாள் லெந்து காலத்திற்கான ஆயத்தத்தை வலியுறுத்துகிறது.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்:
இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான அல்பேயுவின் குமாரனாகிய லேவி ( மத்தேயு) இந்த நூலை இயற்றினார். இயேசு கிறிஸ்துவின் சீடனாக மாறுவதற்கு முன்பதாக இவர் ரோம அரசாங்கத்துக்கு வரி வசூலிக்கும் அதிகாரியாக பணியாற்றினார்.
கி. பி 58-க்கும் 68-க்கும் இடைப்பட்ட காலத்தில் பாலஸ்தீனாவில் வைத்தோ சிரியாவின் அந்தியோகியாவில் வைத்தோ இந்நூல் எழுதப்பட்டது என வேதவல்லுநர்கள் கருதுகிறார்கள்.
அவையோர்:
மேசியாவின் வருகையை நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூதர்களுக்கு எழுதப்பட்ட நூல் மத்தேயு சுவிசேஷம் ஆகும்.
வசன பின்னணி:
மேசியாவினுடைய வருகைக்கு ஆயத்தமாக வழியை ஆயத்தப்படுத்தின யோவான் ஸ்நானகனுடைய மரணத்தைக் குறித்து யோவான் ஸ்நானகனுடைய சீஷர்கள் மூலம் கேள்விப்பட்டவுடனே இயேசு தனித்திருக்கும் படி வனாந்தரமான ஒரு இடத்திற்கு செல்லுகிறார். அதைக் கேள்விப்பட்ட ஜனங்கள் இயேசுவை தேடி வனாந்தரமான அந்த இடத்திற்குச் செல்கிறார்கள்.
5. திருவசன விளக்கவுரை
மத்தேயு சுவிசேஷ புத்தகத்தை எழுதிய ஆசிரியர், இயேசு கிறிஸ்து இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை செய்து தன்னுடைய வல்லமையையும் (Power) தனித்துவத்தையும் (Identity) வெளிப்படுத்தி அதன் மூலம் தன்னை மேசியாவாக அங்குள்ள மக்களுக்கு அடையாளப்படுத்துகிறார் என்பதை குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்து தன்னை தேடி வந்த மக்கள் மீது மனதுருக்கம் (Compassion) கொள்கிறார். மனதுருக்கம் என்பது ஒருவருடைய மிகவும் ஆழமான மன உணர்ச்சிகளை (deepest inner feeling) குறிப்பதாகும். இயேசு கிறிஸ்து தன்னுடைய மனதுருக்கத்தின் வெளிப்பாடாகத்தான் அங்குள்ள மக்களை அவர்களுடைய வியாதிகளிலிருந்து சொஸ்தமாக்குகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
கிபி 3-ம் மற்றும் 4-ம் நூற்றாண்டுகளில் ஆதி திருச்சபையை இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை (Divinity)மற்றும் மனிதத் தன்மையை (Humanity) குறித்ததான துர் உபதேசங்கள் மிகவும் களங்கப்படுத்தியது. ஆதி திருச்சபை தந்தையரில் ஒருவரான தூய. அதேனாசியஸ் என்பவர் இயேசு கிறிஸ்து 100% சதவீதம் தெய்வீகத் தன்மையுடனும் 100% மனிதத் தன்மையுடனும் வாழ்ந்தார் என்கிற விசுவாச கோட்பாட்டை வலியுறுத்தினார் அதை ஆதித் திருச்சபை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. மத்தேயு 14 :14 - ல் இயேசு கிறிஸ்து வியாதியஸ்தர்கள் மீது கொண்ட *மனதுருக்கம்* அவருடைய மனித (Humanity) தன்மையையும் வியாதியஸ்தர்களை *குணமாக்கினது* அவருடைய தெய்வீகத்தன்மையையும் (Divinity) உறுதிப்படுத்துகிறது.
7. அருளுரை குறிப்புகள்
1. காண்கின்ற இயேசு கிறிஸ்து v. 14 b
2. மனதுருகும் இயேசு கிறிஸ்து v. 14 c
3. குணமாக்கும் இயேசு கிறிஸ்து v. 14d
Written by
Mr. T. Rebin Austin
Catechist, kallidaikurich

0 Comments