மாசிலாமணி ஐயர் திருப்புவனம் என்ற சிற்றூரின் போதகராகப் பணியாற்றிய நாட்களில், இந்தக் கும்மிப்பாடலை எழுதினார். ஆண்டவரின் புகழை, அனைவரும் அறியும் வண்ணம், அவரைப் போற்றிப்பாட, திருச்சபையாகிய கன்னியரை அழைப்பதாக, இப்பாடலை மாசிலாமணி எழுதியிருக்கிறார். சிறந்த வயலின் வித்துவானாகிய மாசிலாமணி, தனது பாடல் மற்றும் இசைத் தாலந்துகளை, நற்செய்திப் பணிக்கென முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டார்.
திருவண்ணாமலையின் வாரச் சந்தை நாட்களில், மாசிலாமணி தன் நண்பர்களுடன் அங்கு சென்று இசைக்கச்சேரி நடத்துவார். அப்போது அவரின் பாடலையும் இசையையும் கேட்க, சந்தைக்கு வந்த மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள். அவர்களுக்கு நற்செய்தியைப் பக்குவமாகப் பாடல்கள் வழியாக அவர் எடுத்துக்கூறி, ஆண்டவரின் அன்பால் அவர்களைக் கவர்ந்திடுவார்.
மாசிலாமணி எழுதிய "ஆர் இவர் ஆராரோ" என்ற கிறிஸ்மஸ் பாடலும், "வந்தனம் வந்தனமே", மற்றும் "ஆனந்தமே ஜெயா ஜெயா" என்ற புத்தாண்டுப் பாடல்களும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பண்டிகைகளின் மகிழ்ச்சியைக் கூட்டித் தரும் பிரபலமான பாடல்களாக விளங்குகின்றன. கருத்துச் செறிவுடன் விளங்கும் இப்பாடல்கள், நூற்றாண்டு காலமாய், திருச்சபை மக்களனைவரும் விரும்பிப் பாடும் பாடல்களாகத் திகழ்கின்றன. இப்பாடல்கள் பிரபலமாவதற்கு, அவர் அமைத்த சிறந்த இசைப்பண்களும் காரணமாகும். இசையும் பாடலின் சொல்லடுக்கும், அருமையாக இணைந்து வருவதை, ''ஆனந்தமே ஜெயா ஜெயா'' என்ற பாடலைப் பாடி மகிழ்வோர் நன்கு அறிவர்.
பல்லவி
தந்தானைத் துதிப்போமே; திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
அனுபல்லவி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்
-தந்தானைத்
சரணங்கள்
1. ஒய்யாரத்துச் சீயோனே, - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும்
- தந்தானைத்
2. கண்ணாரக் களித்தாயே, - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து;
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன் மேற் சோனா மாரிபோற் பெய்துமே.
- தந்தானைத்
3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்.
- தந்தானைத்
4. தூரம் திரிந்த சீயோனே, - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை!
- தந்தானைத்

0 Comments