திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்தெகோஸ்தே திருநாளுக்குப் பின்வரும் 6-ம் ஞாயிறு (5-ம் திரித்துவ ஞாயிறு)
திருமண்டல ஞாயிறு
தேதி: 05/07/2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: யோசுவா 24:1-15
நிருப வாக்கியம்: 2 கொரிந்தியர் 9:1-15
நற்செய்தி பகுதி: லூக்கா 21:1-14
சங்கீதம்: 103
2. திருவசனம்
தலைப்பு: கர்த்தரை கனப்படுத்தும் திருச்சபை
இருப்பிடம்: நீதிமொழிகள் 3:9,10
திருவசனம் :
(பவர் திருப்புதல்): உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்கியங்கள் பூரணமாய் நிரம்பும்: உன் ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.
(திருவிவிலியம்): உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்: குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
திருநெல்வேலி திருமண்டலம் தோற்றுவிக்கப்பட்ட நாளினை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மாம்பழ சங்கத்திற்கு முன் வரும் ஞாயிறு திருமண்டல ஞாயிறாக ஆசரிக்கப்படும்.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: அரசர் & மகா ஞானி சாலமோன்
வசன பின்னணி:
கடவுளுக்கு பிரியமான குணநலன்களை அவருடைய திருச்சட்டத்திலிருந்து ஆய்ந்து எடுத்து சொல்லப்பட்ட பண்புகள். (நீதி 3:3-12)
5. திருவசன விளக்கவுரை
கனம்பண்ணு எனும் பதத்திற்கு எபிரேய மொழியில் மகிமை எனும் பொருளும் உண்டு. கர்த்தரை கனம்பண்ணுவது என்பது அவரை மகிமைப்படுத்துவது ஆகும். நமது உழைப்பின் பலனால் கிடைக்கும் ஊதியம், தாலந்துகள் மூலம் வரும் புகழ் இவற்றின் வாயிலாக கறையில்லாமல் கர்த்தரை கனம்பண்ண வேண்டும் (V.9 a). விளைவின் முதற்பலன் என்பது திருச்சட்டத்தில் கடவுள் சொல்லியபடி கொடுப்பது ஆகும் (யாத்திராகமம் 34:19-23, லேவியராகமம் 27:30). பிதாவாகிய கடவுள் நமக்காக முதற்பலன் இயேசுவை முழுவதும் கொடுத்து, உயிர்த்தெழுதலின் முதற்பலனாக மாற்றினார். நாமும் கர்த்தருக்கு குறைவில்லாத பழுதற்றதைக் காணிக்கையாக படைக்க வேண்டும் (V. 9 b). நாம் அவ்வாறு கடவுளை மகிமைப்படுத்த அவர் நம்மை தமது ஆசீர்வாதத்தினால் நிரப்பி சம்பூரணப்படுத்துகிறார் (V.10).
6. இறையியல் & வாழ்வியல்
கர்த்தரை நாம் நமது ஊதியத்தின் பலனினால் உண்மையாக மகிமைப்படுத்த அழைக்கப்படுகிறோம். கர்த்தருக்கு கொடுக்கும் போதும், வறியோருக்கு கொடுக்கும் போதும் குறைவானதை அல்ல, மீதமானதையும் அல்ல உயர்தரமானதைக் கொடுக்க வேண்டும். நமது பிதா தாராள குணமுள்ளவர் நாமும் அவ்வாறே இருப்பதற்கு ஆண்டவர் அழைக்கிறார்.
7. அருளுரை குறிப்புகள்
அ) கறையில்லாமல் கர்த்தரை கனம்பண்ணு - யோசுவா 24:1-15
ஆ) குறைவில்லாததைக் கொடுத்து கர்த்தரை கனம்பண்ணு - 2 கொரிந்தியர் 9:1-15
இ) கர்த்தருடைய கனத்தைப் பெற்றிடு - லூக்கா 21:1-4
எழுதியவர்
கிறிஸ்து ராசையா
சபை ஊழியர்.

0 Comments