Ad Code

டிஜிட்டல் ஆலோசனை • Boys Locker Room Cases

பாய்ஸ் லாக்கர் ரூம் விவகாரம்
சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 27 மாணவர்கள் ஒன்றிணைந்து பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கியுள்ளனர். 15 முதல் 17 வயதிற்குட்பட்ட இந்தச் சிறுவர்கள், அந்தப் பக்கத்தில் பெண்களைப் பற்றியும், சக மாணவிகளைப் பற்றியும் மிகவும் ஆபாசமான மற்றும் அசிங்கமான கருத்துக்களையும் படங்களையும் பகிர்ந்து வந்துள்ளனர்.

யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அந்தப் பக்கத்தின் ஒரு ஸ்கிரீன்ஷாட் வெளியே கசிந்தது. இது காவல்துறையின் கவனத்திற்குச் செல்ல, அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு அந்தப் பக்கத்தை உருவாக்கிய 15 வயது சிறுவன் உட்பட சம்பந்தப்பட்ட 27 மாணவர்களையும் கைது செய்தனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்குப் பிறகு, விடிவதற்குள் சுமார் 54 பெற்றோர்கள் காவல் நிலையத்தின் முன் குவிந்தனர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமே, அவர்களுக்குப் பாஸ்போர்ட் கிடைக்காது, நல்ல வேலை கிடைக்காது, திருமணம் தடைபடும் என்றெல்லாம் கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.

ஆனால், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. பிள்ளைகள் தவறு செய்த பிறகு வருந்துவதை விட, அவர்கள் வளரும் போதே அவர்கள் எதைச் செய்கிறார்கள், யாரிடம் பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிப்பது பெற்றோரின் தலையாய கடமையாகும்.

செல்போன் என்பது தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இன்று, ஒரு அவசியமான பணிக்காக போனை எடுப்பவர்கள் கூட, அதில் வரும் நோட்டிபிகேஷன்களைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் என நேரத்தை வீணடிக்கின்றனர். எதற்காக போனை எடுத்தோம் என்பதையே மறந்து சுமார் 50 நிமிடங்கள் வரை தேவையற்ற குப்பைகளில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

ஒரு போனை தொடுவதற்கு முன் எதற்காக எடுக்கிறோம் என்பதைச் சிந்தித்து, அந்த வேலையை மட்டும் முடித்துவிட்டுத் தள்ளி வைக்க வேண்டும்.
 
பிள்ளைகளின் கைகளில் போன் இருக்கும்போது, அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
நவீன வசதிகள் நம் வாழ்வை மேம்படுத்த வேண்டுமே தவிர, அவை நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிதைத்துவிடக் கூடாது. 

(முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி அவர்கள், இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்தும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும் ஆற்றிய விழிப்புணர்வு உரையின் தொகுப்பு)

நாம் தொடர்ந்து இளைய சமுதாயம் காக்கப்பட ஜெபிப்போம்.

Post a Comment

0 Comments