Ad Code

சி.எஸ்.ஐ. புலம்பெயர் பேராயத்தின் வரலாறு வட அமெரிக்காவில் தென்னிந்திய திருச்சபை

சி.எஸ்.ஐ. புலம்பெயர் பேராயத்தின் வரலாறு வட அமெரிக்காவில் தென்னிந்திய திருச்சபை 

முன்னுரை
தென்னிந்தியத் திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) வரலாற்றுப் பயணத்தில் புலம்பெயர் பேராயம் (CSI Diaspora Diocese) அமைக்கப்பட்ட நிகழ்வு ஒரு பொன்னான அத்தியாயமாகும்.வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் பரவி வாழும் சி.எஸ்.ஐ. சபைகளை ஒரே கூரையின் கீழ் இணைத்து ஆன்மீக ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பலப்படுத்தும் நோக்கில் உருவான சி.எஸ்.ஐ. புலம்பெயர் பேராயத்தின் வரலாறு இதோ.

1. தொடக்கம்
தங்கள் பிள்ளைகளை சி.எஸ்.ஐ. (CSI) பாரம்பரியத்தில் வளர்க்கும் நோக்கில், சி.எஸ்.ஐ. குடும்பங்கள் முறைசாரா சபைகளாக ஒன்றிணையத் தொடங்கின. 1970 மற்றும் 1980-க்கு இடைப்பட்ட காலத்தில், முக்கியமாக மத்திய கேரளா பேராயம் மற்றும் தெற்கு கேரளா பேராயத்தைச் சேர்ந்த ஒரு சில உறுப்பினர்கள் இணைந்து நியூயார்க், சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் டாலஸ் போன்ற முக்கிய நகரங்களில் சி.எஸ்.ஐ. சபைகளை நிறுவ முன்முயற்சி எடுத்தனர்.

2. முதல் முறைப்படுத்தப்பட்ட ஆராதனை
1978 ஆம் ஆண்டு பேராயர் மகாகனம். டி. எஸ். ஜோசப் அவர்கள் அமெரிக்காவில் சி.எஸ்.ஐ. ஆராதனை முறையின்படி வழிபாட்டை முன்னின்று நடத்தினார். இது சி.எஸ்.ஐ. குடும்பங்களின் முறைப்படுத்தப்பட்ட ஆராதனை வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
 
3.போதகர்கள் திருநிலைப்படுத்தப்படுதல்
1982 ஆம் ஆண்டு தகுதியுள்ள நபர்கள் பேராயர் மகாகனம். எம். சி. மணி அவர்களால் போதகர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். இது சபைகளின் மேய்ப்புப் பணி தலைமையை வலுப்படுத்தியது.

4. முதல் இளைஞர் மற்றும் குடும்ப மாநாடு
1987 ஆம் ஆண்டு சிகாகோ நகரம் முதல் சி.எஸ்.ஐ. இளைஞர் மற்றும் குடும்ப மாநாட்டை நடத்தியது. இம்மாநாடு ஒரு நிலையான மரபாக மாறி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

5. பேராயத் தலைவரின் (Moderator)  வருகை
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் சி.எஸ்.ஐ. பிரதம (Moderator) பேராயர் மகாகனம் விக்டர் பிரேம்சாகர் கலந்துகொண்டார். இது பரந்த சி.எஸ்.ஐ. தலைமையிடமிருந்து கிடைத்த வளர்ந்து வரும் அங்கீகாரத்தையும் ஆதரவையும் பிரதிபலித்தது.

6. நியூயார்க்கில் கூட்டுக்கூட்டம்
1990 ஆம் ஆண்டு பேராயர் மகாகனம் விக்டர் பிரேம்சாகர், வட அமெரிக்காவில் உள்ள சி.எஸ்.ஐ. குடும்பங்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தப் பயணத்தின் போது, அவர் ஆங்கிலிகன், எபிஸ்கோபல், பிரஸ்பைடீரியன் மற்றும் யுனைடெட் சர்ச் ஆஃப் க்ரைஸ்ட் (UCC) ஆகிய பாரம்பரியங்களைச் சேர்ந்த பங்களிப்புத் திருச்சபைகளையும் சந்தித்துப் பேசினார்.
 
7. தற்காலிகக் குழு (Adhoc Council) அமைப்பு
 1994 ஜூலை மாதத்தில், கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற வட அமெரிக்க குடும்ப மற்றும் இளைஞர் மாநாட்டில், அன்றைய பேராயத் பிரதம பேராயர் மகாகனம் வி. பி. தண்டி தீன் மற்றும் மத்திய கேரளா பேராயர் மகாகனம் டாக்டர் எம். சி. மணி ஆகியோரின் தலைமையில் ஒரு தற்காலிகக் குழு அமைக்கப்பட்டது. அருள்திரு தாமஸ் கே. உம்மன், திரு. கோஷி ஜார்ஜ் மற்றும் திரு. ஆலன் ஜான் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
 
8. கவுன்சில் தொடக்க விழா
டிசம்பர் 10, 1994 அன்று பிரதம பேராயர் மகாகனம் வி. பி. தண்டி தீன் தலைமையில் "வட அமெரிக்க சி.எஸ்.ஐ. சபைகளின் கவுன்சில்" தொடங்கப்பட்டதன் மூலம் ஒரு முக்கிய நிறுவன மைல்கல் எட்டப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர்களில் அருள்திரு தாமஸ் கே. உம்மன் (துணைத் தலைவர்), திரு. மேத்யூ உம்மன் (செயலாளர்) மற்றும் திரு. பாபி சாண்டி (பொருளாளர்) ஆகியோர் அடங்குவர்.

9. அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம்
 2014 ஆம் ஆண்டு, வட அமெரிக்காவில் உள்ள சி.எஸ்.ஐ. சபைகளின் வளர்ந்து வரும் தேவைகளைச் சிறந்த முறையில் பூர்த்தி செய்ய, பிரதம பேராயர் மகாகனம் கொவாடா தைவாசிர்வாதம் அவர்களின் மேற்பார்வையில் கவுன்சில் தனது அரசியல் அமைப்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து திருத்தியமைத்தது.

10. பேராயம் அமைப்பதற்கான கோரிக்கை
2017 - 2019 ஆம் ஆண்டுகளில், மகாகனம் தாமஸ் கே. உம்மன் அவர்கள் தலைமையகமாக செயல்பட ஒரு சொத்தைத் தேடவும், அதற்காக நிதி திரட்டவும் கவுன்சிலை ஊக்குவித்தார். வட அமெரிக்காவில் ஒரு பேராயத்தை நிறுவுவதற்கான முதல் அதிகாரப்பூர்வ கோரிக்கை 2018 ஆம் ஆண்டு சி.எஸ்.ஐ. சினாட் செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
 
11. நிர்வாகியை நியமிப்பதற்கான கோரிக்கை
2019 ஆம் ஆண்டு, வட அமெரிக்காவில் உள்ள சி.எஸ்.ஐ. சபைகளுக்கு ஒரு நிர்வாகியை நியமிக்குமாறு கவுன்சில் சினாட்டிடம் கோரிக்கை விடுத்தது. ஹூஸ்டனில் நடைபெற்ற குடும்ப மற்றும் இளைஞர் மாநாட்டின் போது இக்கோரிக்கையை சினாட் பெற்றுக்கொண்டது. இதில் பிரதம பேராயர் மகாகனம் கே. உம்மன் (பேராயத் தலைவர்), அருள்திரு டாக்டர் டேனியல் ரத்னாகர சதானந்தா (பொதுச்செயலாளர்) மற்றும் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் (பொருளாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
12. வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்
ஜூலை 9, 2022 அன்று ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற 33வது குடும்ப மற்றும் இளைஞர் மாநாட்டின் திறந்தவெளி அமர்வின் போது, வட அமெரிக்காவில் உள்ள சி.எஸ்.ஐ. சபைகளை வலுப்படுத்த சி.எஸ்.ஐ. புலம்பெயர் பேராயத்தை (Diaspora Diocese) அங்கீகரிக்குமாறு சி.எஸ்.ஐ. சினாட்டிடம் கோருவதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் போது சி.எஸ்.ஐ. பிரதம பேராயர், துணைப் பிரதம பேராயர், மத்திய கேரளா பேராயர் மற்றும் சி.எஸ்.ஐ. பொதுச்செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

13. பேராய உருவாக்கக் குழு
ஜூலை 6–7, 2022 இல் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் உருவாக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பேராய உருவாக்கக் குழு, அமெரிக்காவில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ. திருச்சபைகளுக்கும் கடிதங்களை அனுப்பியது. அதில் திருச்சபைகளின் எண்ணிக்கை, குடும்பங்கள், சொத்துக்கள் மற்றும் நிதிப் பின்னணி உள்ளிட்ட விரிவான தகவல்கள் கோரப்பட்டன.
 
14. சினாட்டுக்கு நினைவுக் குறிப்பு சமர்ப்பித்தல்
செப்டம்பர் 2022 இல், பேராய உருவாக்கக் குழு புலம்பெயர் பேராயம் அமைப்பது குறித்தும், வட அமெரிக்காவில் உள்ள சி.எஸ்.ஐ. சபைகளின் கணக்கெடுப்பு அறிக்கையின் சுருக்கத்தையும் உள்ளடக்கிய நினைவுக் குறிப்பை (Memorandum) சினாட்டுக்கு அனுப்பியது.

15. சினாட் கூட்டத்தில் விளக்கம்
ஜனவரி 2023 இல் ஹூப்ளியில் நடைபெற்ற சி.எஸ்.ஐ. சினாட்டின் 37வது அமர்வில், அருள்திரு சாம் என். ஜோசுவா (துணைத் தலைவர்), பேராசிரியர் டாக்டர் ஜக்கரியா உம்மன் (செயலாளர்), திரு. டேனியல் செரியன் (பொருளாளர்), திரு. மேத்யூ ஜோசுவா (பேராய உருவாக்கச் செயலாளர்), திரு. கோஷி ஜார்ஜ், டாக்டர் பீனா மேத்யூ மற்றும் திருமதி அம்மினி செரியன் ஆகியோர் அடங்கிய குழு, உத்தேசிக்கப்பட்டுள்ள புலம்பெயர் பேராயம் குறித்த கூடுதல் விவரங்களைச் சமர்ப்பித்தது.

16. பேராயம் உருவாக்கப்படுதல்
 ஜனவரி 15, 2023 அன்று, பிரதம பேராயர் மகாகனம் ஏ. தர்மராஜ் ராசாலம் அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வட அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ. சபைகளை உள்ளடக்கிய "சி.எஸ்.ஐ. புலம்பெயர் பேராயம்" (CSI Diaspora Diocese) அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டதாக அறிவித்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பேராயத்தைக் கண்காணிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது.
 
17.அரசியல் அமைப்புச் சட்ட வரைவு
ஜனவரி 11, 2024 அன்று, பார்வை மற்றும் பணி இலக்கு (Vision and Mission) கூற்றுகளின் வரைவுடன் சேர்த்து, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆரம்ப வரைவு மறுபரிசீலனைக்காக சினாட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
 
18. நிர்வாகக் குழு புனரமைக்கப்படுதல்
பேராயம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த வளர்ச்சிகளைத் தொடர்ந்து, பேராயத்தை தொடர்ந்து முன்னோக்கி வழிநடத்துவதற்காக செப்டம்பர் 18, 2025 அன்று நிர்வாகக் குழு புனரமைக்கப்பட்டது.

19. முதல் பேராயக் கவுன்சில் கூட்டம்
தென்னிந்தியத் திருச்சபை வட அமெரிக்க புலம்பெயர் பேராயத்தின் முதல் பேராயக் கவுன்சில் கூட்டம் 2026 ஜூலை 22–23 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டாலஸில் உள்ள 'லவ் ஆஃப் கிரைஸ்ட்' (Love of Christ) சி.எஸ்.ஐ. திருச்சபையில் கூட்டப்பட்டது. இது புதிதாக நிறுவப்பட்ட பேராயத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இக்கூட்டத்திற்கு தென்னிந்தியத் திருச்சபையின் பிரதம பேராயர் மற்றும் புலம்பெயர் திருமண்டல பேராயர் (Moderator) மகா கனம். முனைவர். கே. ரூபன் மார்க் தலைமை தாங்கினார். தென்னிந்தியத் திருச்சபையின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சி. ஃபெர்னாண்டஸ் ரத்தின ராஜா அவர்களின் பங்கேற்பால் இக்கூட்டம் சிறப்படைந்தது.

முடிவுரை
1970-களில் சி.எஸ்.ஐ. குடும்பங்களின் ஆரம்பகாலக் கூடுகைகள் முதல் 2023-இல் புலம்பெயர் பேராயம் உருவாக்கப்பட்டது வரையிலான இந்தப் பயணம், வட அமெரிக்காவில் சி.எஸ்.ஐ. சமூகத்தைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் அயராது உழைத்த எண்ணற்ற மனிதர்களின் தளராத நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. நாம் தொடர்ந்து வளர்ந்து சேவை செய்யும்போது, நமக்கு முன் வழிகாட்டியவர்களைக் கனம்பண்ணி, வரும் தலைமுறைகளுக்கும் சி.எஸ்.ஐ. குடும்பங்களின் ஆன்மீக வாழ்வை வளர்ப்பதில் உறுதியுடன் நிற்போம்.

Translated by Meyego 




Post a Comment

0 Comments