திருமறையில் யார் இவர் யாரோ? - 92
கல்லியோன்: கடவுள் யாரையும் பயன்படுத்துவார்
1. பெயர்:
கல்லியோன் Gallio
2. அர்த்தம்:
பால் குடிப்பவன்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 18:12-17
பவுல் கொரிந்து நகரத்தில் ஊழியம் செய்தபோது, கல்லியோ அகாயா (Achaia) நாட்டிற்கு ரோமானிய ஆளுநராக (Proconsul) இருந்தார். யூதர்கள் பவுலுக்கு எதிராக ஒன்றுதிரண்டு, அவரை நியாயாசனத்திற்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தியபோது, கல்லியோ இந்த வழக்கை விசாரிக்க மறுத்தார். இது சட்டம் அல்லது குற்றம் சார்ந்த விஷயம் அல்ல, யூதர்களின் மார்க்கம் மற்றும் வார்த்தைகள் பற்றிய தர்க்கம் என்பதால், அவர்களை நியாயாசனத்தை விட்டுத் துரத்திவிட்டார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• இயற்பெயர்: லூசியஸ் என்னேயஸ் நோவாட்டஸ் (தத்தெடுக்கப்பட்டதால் 'கல்லியோ' எனப்பட்டார்).
• குடும்பம்: புகழ்பெற்ற ரோமானிய தத்துவஞானி செனெகாவின் (Seneca) சகோதரர்.
• டெல்பி கல்வெட்டு: கி.பி. 51–52 இல் இவர் அகாயாவின் அதிபதியாக இருந்ததை உறுதிசெய்து, பவுலின் ஊழியக் காலத்தைக் கணக்கிட உதவுகிறது.
• முடிவு: கி.பி. 65 இல் நீரோ சக்கரவர்த்தியின் நெருக்குதலால் தற்கொலை செய்துகொண்டார்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
கொரிந்துவில் பவுலுக்குத் தரிசனமான ஆண்டவர், "ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யும்படி உன்மேல் கைபோடுவதில்லை" (அப்போஸ்தலர் 18:10) என்று வாக்களித்தார். கல்லியோவின் நடுநிலையான தீர்ப்பின் மூலமாகத் கடவுள் பவுலுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். சுவிசேஷ ஊழியம் தடையில்லாமல் தொடர, உலகப்பிரகாரமான ஆட்சியாளர்களையும் தலைவர்களையும் கூட கடவுள் தம்முடைய தெய்வீகச் சித்தத்தின்படி பயன்படுத்த வல்லவர் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments