Ad Code

வாலிபர்களே வசனத்தால் தீமையை வெல்லுங்கள் Youth Overcome Evils by God's Word 1 யோவான் 2: 14

திருவசன தியானம் 2026

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு:  திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் 13 ஆம் ஞாயிறு (இளைஞர் ஞாயிறு) 
தேதி: 30:08:2026 
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: 
பழைய ஏற்பாடு: எண்ணாகமம் 14: 1- 9
நிருப வாக்கியம்: 1 யோவான் 2: 12 - 17
நற்செய்தி பகுதி: மத்தேயு 4: 1-17
சங்கீதம்: 18: 1 - 24

2. திருவசனம்

2.1 தலைப்பு: 
வாலிபர்களே வசனத்தால் தீமையை வெல்லுங்கள்
Youth Overcome Evils by God's Word

2.2 இருப்பிடம்
1 யோவான் 2: 14 பின் 

2.3 திருவசனம்:
(பவர் திருப்புதல்) வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

(திருவிவிலியம்) இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது; தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். 

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
திருநெல்வேலி திருமண்டல இளைஞர் ஞாயிறு

4. வசன குறிப்புகள்

4.1 நூலாசிரியர்:
அப்போஸ்தலனாகிய யோவான் கி.பி. 1ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (சுமார் கி.பி. 85–95) எபேசு நகரத்தில் இருந்து இந்த நிருபத்தை எழுதினார். 

4.2 அவையோர்:
இந்த நிருபத்தை எபேசுவைச் சுற்றியிருந்த ஆசியா மைனர் (இன்றைய துருக்கி) பகுதித் திருச்சபைகளுக்கும், அங்குள்ள கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் எழுதினார்.

4.3 வசன பின்னணி:
1 யோவான் 2 ஆம் அதிகாரம், அக்காலகட்டத்தில் திருச்சபைக்குள் நுழைந்த தவறான போதனைகளையும், விசுவாசிகளின் வாழ்க்கையில் நிலவிய குழப்பங்களையும் சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளது. 1 யோவான் நிருபம் எழுதப்பட்ட காலத்தில் எபேசு மற்றும் ஆசியா மைனர் சபைகளில் ஞானக் கொள்கை (Gnosticism) மற்றும் தோற்றக் கொள்கை (Docetism) போன்ற போலி உபதேசங்கள் ஊடுருவியிருந்தன.

ஞானக் கொள்கை: "சரீரம் தீமையானது, அதனால் உடலால் செய்யும் பாவங்கள் ஆத்துமாவைப் பாதிக்காது" என்று கூறி, தீவிரமான பாலியல் அக்கிரமங்களுக்கும் இச்சை வழிகளுக்கும் வழிகோலினார்கள்.
அல்லது, உடலை முற்றிலும் ஒடுக்கும் தீவிர துறவற முறையைப் பின்பற்றினார்கள்.

தோற்றக் கொள்கை: இயேசுவுக்கு உண்மையான மனித உடல் இல்லை என்றால், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்திற்கும் மரணத்திற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்.
இயேசு மெய்யாகவே சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதையும் இது முற்றிலும் மறுத்தது.

இவற்றை எதிர்த்து நிற்கவே யோவான் "தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்க வேண்டும்" என்று கற்பித்தார்.

5. திருவசன விளக்கவுரை

5.1 முக்கிய வார்த்தைகள் விளக்கம்

A. வாலிபர் - சுமார் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களைக் குறிக்கும். νεανίσκοι - Neaniskoi என்ற சொல் கிரேக்க கலாச்சாரத்தில் 20 முதல் 40 வயதுள்ள, இராணுவப் போருக்குச் செல்லும் தகுதியுடைய வீரர்களைக் குறிக்க பயன்பட்டது. ஆன்மீக கண்ணோட்டத்தில் தீவிரமாகச் செயல்படும் முதிர்ச்சியடைந்து வரும் விசுவாசிகளைக் குறிக்கும். அதாவது ஆன்மீக ரீதியில் இவர்கள் "பிள்ளைகள்" (ஆரம்ப நிலை) போலத் கடவுளை அறிந்தவர்கள் மட்டுமல்ல; ஆவிக்குரிய போர்க்களத்தில் நின்று சாத்தான எதிர்த்துப் போராடும் சுறுசுறுப்பும் ஆற்றலும் கொண்டவர்கள். 

B. பலவான் - சொந்த பலம் அல்ல; கடவுளால் கொடுக்கப்பட்ட உள்ளார்ந்த ஆன்மீக சக்தி, சகிப்புத்தன்மை மற்றும் உறுதியைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில் 'Dynamis' என்பது வெளிப்படையான வல்லமையைக் குறிக்கும்; ஆனால் 'Ischyros' என்பது உடலுக்குள் இருக்கும் உள்ளார்ந்த தசை பலம் மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிக்கும்..

C. தேவவசனம் - கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தை மற்றும் சத்தியம் (Logos). 'Logos' என்பது வெறுமனே பேசப்படும் வார்த்தை (Rhema) மட்டுமல்ல; அது கடவுளுடைய யோசனை, சித்தம் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் முழு வடிவம்.

D. நிலைத்திருக்கிறதினாலும் - தற்காலிகமாகத் தங்குவது அல்ல; நிரந்தரமாகக் குடியிருப்பது, தொடர்ச்சியாக நிலைத்து வாழ்வது (To abide / remain). 'Meno' என்ற கிரேக்க வினைச்சொல், ஒரு வீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பதைக் குறிக்கும்.

E. பொல்லாங்கனை - தீமையின் உருவமாகிய சாத்தானைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில் 'Kakos' என்றால் கெட்ட காரியம்; ஆனால் இந்த வசனத்தில் வரும் கிரேக்க வார்த்தை 'Ponēros' என்றால் மற்றவர்களைக் கெடுப்பதற்காகத் தீவிரமாக உழைக்கும் தீமை. பொல்லாங்கன் என்பது ஒரு தீய சக்தியை மட்டுமல்ல, அதின் தன்மைகளான பாவ சிந்தனைகள் மற்றும் செயல்களையும் குறிக்கிறது.

F. ஜெயித்ததினாலும் - கிறிஸ்து ஏற்கனவே அடைந்த வெற்றியில் பங்குபெற்று, சாத்தானை முழுமையாக வென்று, அந்த வெற்றியில் தொடர்ச்சியாக நிலைத்திருப்பதைக் குறிக்கிறது (Perfect Tense in Greek). கிரேக்க மொழியில் 'Perfect Tense' என்பது "கடந்த காலத்தில் ஒரு செயல் முடிந்துவிட்டது, அதன் வெற்றி அல்லது தாக்கம் நிகழ்காலத்திலும் தொடர்கிறது" என்பதைக் குறிக்கும். 

5.2 வசன விளக்கம்
இவ்வசனம் ஆன்மீக வளர்ச்சியில் உள்ள ஒவ்வொரு நிலைக்கும் தகுந்த வழிகாட்டுதலைத் தருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் வாழ்வில் காணப்பட வேண்டியவை: 

A. இறைவனை ஆழமாக அறிந்துகொள்வதும், 
B. அவரது சத்திய வார்த்தையை உள்ளத்தில் தாங்கி நிலைத்து வாழ்வதும், 
C. தீமையை மேற்கொள்ளும் ஆன்மீக ஆற்றலைத் பெறுவதுமாகும்.

வாலிபர்கள் உடற்பயிற்சி மூலம் உடலைப் பலப்படுத்துவது போல, தினமும் ஜெபம், வேத வாசிப்பு மற்றும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியம் மூலம் உங்கள் உள்ளான மனிதனைப் பலப்படுத்த வேண்டும்.

சோதனைகள் வரும் தருணத்தில் மட்டும் ஜெபிக்காமல், தினமும் ஆவிக்குரிய பலத்தோடு இருக்கும்போது, பொல்லாங்கனின் திடீர் தாக்குதல்களை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

சங்கீதம் 127:4 சொல்லுகிறது: "வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்." 

6. இறையியல் & வாழ்வியல்
6.1 வாழ்வியல் சவால்:
சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்குப் படிக்கவும் வேலைக்கும் செல்லும் திருச்சபை இளைஞர்கள் தவறான உபதேசங்கள் மற்றும் போலி ஆன்மீகக் குழுக்களில் சிக்குவது இன்று பெருமளவில் அதிகரித்து வரும் ஒரு முக்கிய சவாலாகும்.

யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் கவர்ச்சியாகப் பேசப்படும் தவறான போதனைகள் மற்றும் ஆவிக்குரிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இளைஞர்களை எளிதாக ஈர்க்கின்றன.

பாரம்பரிய சபைகளில் வளரும் பல இளைஞர்களுக்கு வேதாகமத்தின் அடிப்படை சத்தியங்கள் மற்றும் உபதேசங்கள் குறித்த தெளிவான அறிவு இல்லாததால், போலி உபதேசங்களின் தந்திரமான போதனைகளைப் பகுத்தறிய முடிவதில்லை.

சொந்த ஊரில் உள்ள தாய் சபைகளோ பெற்றோர்களோ இளைஞர்கள் வெளியே செல்லும்போது அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதோ, தொடர்பில் இருப்பதோ இல்லை.

6.2 சவாலை எதிர்கொள்ளுதல்
சவாலை எதிர்கொள்ள பெற்றோர் பங்கு:
பிள்ளைகள் செல்லும் நகரத்தில் உள்ள சரியான, உபதேச ரீதியாகப் பலமுள்ள சபையைக் கண்டறிந்து அவர்களை அங்கே இணைக்க வேண்டும். தினமும் அவர்களுடன் பேசி ஆவிக்குரிய நிலையைக் கண்காணிக்க வேண்டும்.

சவாலை எதிர்கொள்ள உள்ளூர் சபை பங்கு:
சொந்த ஊரில் உள்ள தாய் சபைகள் முன்விழிப்புணர்வோடு, இளைஞர் கூடுகைகளில் "தவறான உபதேசங்களைக் கண்டறிவது எப்படி?" என்ற தெளிவை ஏற்படுத்த வேண்டும். மேலும், தொடர்ந்து வாலிபர்களோடு நல்ல நட்பு மற்றும் தொடர்பில் இருக்க வேண்டும். 

சவாலை எதிர்கொள்ள இளைஞர்கள் பங்கு:
இளைஞர்கள் தினமும் வேதம் வாசித்து, தேவ வசனத்தில் தங்களின் ஆவிக்குரிய அடித்தளத்தை அமைத்துக் கொள்வதோடு, எந்தவொரு புதிய போதனையையும் வேதாகம வசனங்களோடும் தங்கள் சொந்த ஊர் போதகரின் ஆலோசனையோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்; மேலும் உணர்ச்சிவசப்பட்ட கூட்டங்களைத் தவிர்த்து, தெளிவான சத்தியத்தைப் போதிக்கும் ஐக்கியங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமே தவறான உபதேசங்களின் வலையிலிருந்தும், பாவ காரியங்களிலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

7. அருளுரை குறிப்புகள்
வாலிபர்களே வசனத்தால் தீமையை வெல்லுங்கள்
Youth Overcome Evils by God's Word
1 யோவான் 2.:714 (1 John)

1. இறைவார்த்தையால் நிலைத்திருத்தல்
Abiding by the Word of God
2. இறைவார்த்தையால் பலனடைதல்
Strengthened by the Word of God
3. இறைவார்த்தையால் ஜெயித்தல் 
Overcoming through the Word of God

எழுதியவர்
மேயேகோ+
9486810915

Post a Comment

0 Comments