இன்றைய திருச்சபையின் சவால்: ஓய்வும் வாய்ப்பும்
முகவுரை
“திருமறையில் ஓய்வுபெறுதலைப் (Retirement) பற்றி எதுவுமே கூறப்படவில்லை. கிறிஸ்தவர்கள் தங்கள் மரணம் வரை வேலை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும்,” என்று அந்தப் பேச்சாளர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். ஐயோ! ஓய்வின் வயது பற்றி எண்ணாகமம் 8:25-இல் கூறப்பட்டுள்ளதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் போலிருக்கிறது: “ஐம்பது வயதுக்கும் மேலானோர் வேலையின் பணிகளிலிருந்து விலகிக் கொள்வார்; அதன் பின் பணிகள் ஏதும் கிடையாது."
இவர்கள் யாரென்றால், இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களில் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்கள். இவர்கள் கடவுளின் வழிபாட்டுக் கூடமான ஆசரிப்புக் கூடத்தை (Tabernacle) பராமரிக்கும் சிறப்புப் பணிக்காகப் பிரித்தெடுக்கப்பட்டனர்.
லேவியர்களின் வரலாற்றுப் பின்னணி இன்றைய திருச்சபைக்குத் தருபவை என்ன?
பழைய ஏற்பாடு பார்வை: லேவியர்களின் பணிகள் மற்றும் ஓய்வு குறித்த விவரங்கள்
பணி தொடக்கம் (வயது 25-30): ஆசரிப்புக் கூடத்தின் கனமான பாகங்களைச் சுமப்பது, பிரித்து அமைப்பது மற்றும் வழிபாட்டு உபகரணங்களைப் பராமரிப்பது போன்ற கடினமான உடலுழைப்புப் பணிகளைச் செய்தனர். பயிற்சிப் பணி 25 வயதிலும், முழுமையான பொறுப்பு 30 வயதிலும் தொடங்கியது (எண்ணாகமம் 4:3).
தாவீது அரசர் காலத்தில் பணி தொடக்கம்: (வயது 20)
தாவீது தனது கடைசி நாட்களின் கட்டளையின்படி, லேவியர் பணி தொடங்கும் வயதை 20 ஆகக் குறைத்தார். (1 நாளாகமம் 23)
ஓய்வுபெறுதல் (வயது 50): எண்ணிக்கை (Numbers) 8:25-இன் படி, 50 வயதை அடையும் போது அவர்கள் பாரமான உடலுழைப்புப் பணிகளிலிருந்து விலகி ஓய்வுபெற வேண்டும்.
ஓய்வுக்குப் பின் பங்கு (ஆலோசகர்கள்): 50 வயதுக்கு மேல் அவர்கள் கடின உழைப்பில் ஈடுபடாவிட்டாலும், ஆசரிப்புக் கூடத்தில் இளைய லேவியர்களுக்கு உதவியாகவும், காவலாகவும், வழிகாட்டும் ஆலோசகர்களாகவும் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர் (எண்ணாகமம் 8:26).
பிரதான ஆசாரியர் விதிவிலக்கு:
பிரதான ஆசாரியருக்கு ஓய்வுபெறும் வயதில்லை. வாழ்நாள் முழுவதும் தேவாலயப் பணிவிடை செய்ய வேண்டும். (இவர்கள் பிஷப்/ போப் போன்றவர்கள் அல்ல). மேலும், இயேசுவில் பிரதான ஆசாரியத்துவம் நிறைவேறியதால், புதிய ஏற்பாட்டு சபையில் இந்த அந்தஸ்து இல்லை.
தாவீது அரசர் கொண்டுவந்த பணி மாற்றம்
எருசலேமில் நிரந்தர அமைதலைத் தந்ததால், ஆசரிப்புக் கூடத்தையோ அல்லது அதன் புனிதப் பொருட்களையோ லேவியர்கள் இனி சுமந்து திரிய வேண்டிய அவசியமில்லை. லேவியர்களின் பணிகள் சுமக்கும் வேலையிலிருந்து, ஆசாரியர்களுக்கு உதவியாக ஆலயத்தைப் பராமரிக்கும் பணிகளாக மாறின.
ரோம பேரரசு கால மாற்றங்கள்
வாழ்நாள் பதவியாக இருந்த சில பதவிகளின் நிலை மாறி, சீசர், தேசாதிபதி போன்ற அரசியல் தலைவர்களின் தயவில் இயங்கும் பதவியாக இது மாறியது.
ரோம பேரரசு காலத்தில், தாவீதின் அமைப்பான 24 பிரிவுகளின்படி (24 Courses) சுழற்சி முறையில் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப் பணிக்கு எருசலேம் வந்தனர்.
கி.பி. 70-இல் ரோம தளபதி தீத்து (Titus) எருசலேம் ஆலயத்தைத் தரையுமட்டமாக அழித்ததன் விளைவாக லேவியர்களின் ஆலயச் சேவைகள், பலியிடுதல் மற்றும் ஆசாரியத்துவ முறைகள் அனைத்தும் முழுமையாக முடிவுக்கு வந்தன.
புதிய ஏற்பாட்டுப் பார்வை:
புதிய ஏற்பாட்டுச் சபையில் "நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விலகல்" இருக்கலாமே தவிர, "தேவ ஊழியத்திலிருந்தும் சுவிசேஷப் பணியிலிருந்தும் முழுமையான ஓய்வு" என்பது இல்லை.
புதிய ஏற்பாட்டுச் சபையில் இளைஞர்களின் பங்கு வெறும் பார்வையாளர்களாகவோ அல்லது உதவி செய்பவர்களாகவோ மட்டும் இருக்கவில்லை; அவர்கள் சபையின் தலைவர்களாகவும், நற்செய்தியாளர்களாகவும், முன்மாதிரிகளாகவும் செயல்பட அழைக்கப்பட்டனர். உதாரணமாக, ஸ்தேவான் டீக்கன் ஆகும்போது வயது 30 குள் இருக்கும். தீமோத்தேயு மிகவும் வாலிப வயதிலேயே எபேசு சபையைக் கண்காணிக்கும் பெரிய பொறுப்பை பெற்றார்.
நிறைவாக
ஒரு கிறிஸ்தவர் தனது நிர்வாக அல்லது பணிசார் ஊழிய பொறுப்புகளிலிருந்து (Parish management, Financial oversight, and Daily administrative meetings) ஓய்வு பெறலாமே தவிர, கிறிஸ்துவுக்குச் செய்யும் சேவையில் இருந்து ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை. வாழ்நாள் முழுவதும் சாட்சியாக வாழ வேண்டும்.
Written by
Meyego+
9486810915

0 Comments