இயேசு வாழ்ந்த 1400 ஆண்டுகளுக்குப் பின்பு, இயேசுவின் கடைசி விருந்து (The Last Supper)குறித்த ஓவியத்தை, சிறந்த ஓவியர் டா வின்சி 4 ஆண்டுகளாக (1495 - 1498) 15 அடி உயரம் மற்றும் 29 அடி அகலத்தில் வரைந்தார்.
ஓவியத்தின் பின்னணி
இந்த ஓவியம் இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் உணவருந்திய 'கடைசி விருந்தை' சித்தரிக்கிறது.
டா வின்சியின் கலைத்திறன்
ஓவியத்தில் மனித உணர்ச்சிகள், ஜியோமெட்ரி (Geometry) மற்றும் ஒளி அமைப்பைப் பயன்படுத்திய விதம் மற்ற ஓவியங்களிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது.
இயல்பான தன்மை
முந்தைய காலங்களில் வரையப்பட்ட கடைசி விருந்து' ஓவியங்கள் பெரும்பாலும் மத ரீதியான பயபக்தியுடன் மட்டுமே இருந்தன. ஆனால், டா வின்சி இந்த ஓவியத்தில் உள்ளவர்களை வெறும் மனிதர்களாகவும், அவர்களின் இயல்பான மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்தும் வரைந்ததே அதன் தனித்துவமான 'உயிரோட்டம்' என்று கூறப்படுகிறது.
குழுக்களாகப் பிரித்தல்
13 பேரையும் கூட்ட நெரிசலாகக் காட்டாமல், தலா மூன்று பேர் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் உள்ளவர்களின் உடல் மொழியையும் (body language), முகபாவனைகளையும் வெவ்வேறாக வரைந்துள்ளார். இது ஒட்டுமொத்த ஓவியத்திற்கும் ஒரு நேர்த்தியான வடிவத்தைக் கொடுக்கிறது.
தனிமை
ஓவியத்தில் 13 பேர் இருந்தாலும், இயேசு கிறிஸ்துவைச் சுற்றி அதிக இடம் விடப்பட்டுள்ளது. இது எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் இருந்தாலும், மனிதனுக்குள் இருக்கும் தனிமையை (loneliness) டா வின்சி சித்தரித்ததாகக் கருதப்படுகிறது.
உணர்ச்சிகளின் வெளிப்பாடு
இயேசு தனது சீடர்களில் ஒருவன் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போவதாக அறிவித்தபோது, அங்கிருந்த 12 சீடர்களும் அடைந்த அதிர்ச்சி, பயம், குழப்பம் மற்றும் குற்ற உணர்ச்சியை டா வின்சி மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார்.
முன்கூட்டியே உணர்த்தும் குறியீடு: இயேசு தனது பாதங்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பது போல வரைந்திருப்பார். இது அடுத்த நாள் அவர் சிலுவையில் அறையப்படும்போது, அவருடைய பாதங்களில் ஆணி அடிக்கப்படும் அந்தத் துயரமான நிகழ்வை முன்கூட்டியே குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
யூதாஸ் தோற்றம்
முந்தைய கால ஓவியங்களில் யூதாஸ் மற்றவர்களிடமிருந்து தனியாக அமர்ந்திருப்பார். ஆனால், டா வின்சி அவரை மற்ற சீடர்களுடன் ஒரே வரிசையில் அமர வைத்தார். இது மனிதர்களுக்குள் இருக்கும் நன்மை மற்றும் தீமை இரண்டையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. மற்ற சீடர்கள் வெளிச்சத்தில் இருப்பது போலவும், யூதாஸ் மட்டும் இருண்ட நிழலில் இருப்பது போலவும் வரையப்பட்டுள்ளார். இது அவர் தேர்ந்தெடுத்த இருண்ட பாதையை அல்லது பாதாளத்தை நோக்கிச் செல்வதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது யூதாஸின் கையில் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக அவர் பெற்ற 30 வெள்ளி காசுகள் கொண்ட பணப்பையை (money pouch) ஓவியத்தில் தெளிவாகக் காண முடியும் .
புனிதர் பேதுருவின் கத்தி
புனிதர் பேதுரு (St. Peter) கையில் கத்தியுடன் வரையப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய பதற்றத்தையும், அதன் பின்னர் நடக்கப்போகும் நிகழ்வுகளையும் முன்கூட்டியே குறிக்கும் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
புனிதர் யோவான் தோற்றம்
ஓவியத்தில் இயேசுவுக்கு அருகில் அமர்ந்திருக்கும் யோவான் (St. John) பெண் போன்ற தோற்றத்துடன் இருக்கிறார். இது மகதலேனா மரியாள் (Mary Magdalene) பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இது தவறான கருத்தாகும்.
'M' குறியீடு
இயேசு மற்றும் அவருக்கு அருகில் இருப்பவர்களை மையமாகக் கொண்டு பார்த்தால், அங்கு 'M' என்ற வடிவம் உருவாவதாகக் கூறப்படுகிறது. இது மகதலேனா மரியாள் தான் குறிக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இது சரியான முடிவு இல்லை.
உப்பின் குறியீடு
மேஜையில் சிதறி இருக்கும் உப்பு, விசுவாசப் பாதிப்பிற்கான (Symbol of broken loyalty/faith) குறியீடாகச் சொல்லப்படுகிறது.
இசைக்குறிப்புகள்
ஓவியத்தில் உள்ள சீடர்களின் கை அசைவுகள் மற்றும் மேஜையில் இருக்கும் உணவுப் பொருட்களை முறைப்படி மேப் (map) செய்தால், 40 வினாடி ஓடக்கூடிய ஒரு மியூசிக்கல் நோட் (musical note) கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
பரிசோதனை முயற்சி (Experimentation)
அந்த காலத்தில் சுவரோவியங்களை 'ஃப்ரெஸ்கோ' (Fresco) முறையில் வரைவது வழக்கம். ஆனால், டா வின்சி தனது ஓவியத்திற்கு ஆயில் மற்றும் டெம்பெரா (oil and tempera) கலவையைப் பயன்படுத்தி ஒரு புதிய முறையை பரிசோதனை செய்தார். இந்த முறை சுவரில் நீண்ட காலத்திற்கு ஓவியத்தைத் தக்கவைக்க உதவவில்லை.
சேதங்கள்
பல நூற்றாண்டுகளாக இயற்கை மற்றும் மனிதர்களால் இந்த ஓவியம் பாதிக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த அறையில் கதவு அமைக்க சுவரைத் துளைத்தது, பிரெஞ்சுப் புரட்சியின் போது வீரர்கள் அந்த இடத்தைப் பயன்படுத்தியது மற்றும் போர்க்கால குண்டுவீச்சுகள் ஓவியத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
மீட்டெடுப்பு & பாதுகாப்பு
அசலான ஓவியத்தைப் பாதுகாக்க, அதன் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் டா வின்சியின் சீடர்களால் வரையப்பட்ட மிக நெருக்கமான பிரதிகள் (Copies) உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களில் பராமரிக்கப்படுகின்றன. இந்த ஓவியம் தற்போது இத்தாலியின் மிலன் நகரில் உள்ள சாண்டா மரியா டெல் கிராசியா (Santa Maria delle Grazie) தேவாலயத்தில் பாதுகாக்கப்படுகிறது.

0 Comments