Ad Code

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தை Pope Election Conclave

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் உச்ச தலைவரான திருத்தந்தை (Pope) தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை "கான்கிளேவ்" (Conclave) என்று அழைக்கப்படுகிறது. லத்தீன் மொழியில் 'கான் க்ளேவ்' என்றால் "பூட்டப்பட்ட அறையில்" என்று பொருள். இந்தத் தேர்தல் முறை மிகவும் பழமையானதும், மிகவும் ரகசியமானதுமாகும்.

1. வேட்பாளர் தகுதி
எந்தவொரு ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்க ஆணும் திருத்தந்தையாகத் தேர்வாக முடியும் என்றாலும், நடைமுறையில் இந்தக் கர்தினால்களில் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுகிறார். (Canon Law 332).

ஆயராக இல்லாத ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் நடைமுறைகள் உடனடியாகப் பின்பற்றப்படும்: 

அருள்பணியாளராக (Priest) இல்லாவிட்டால்: அவர் உடனடியாகக் குருப்பட்டமும் (Ordination as Priest), அதைத் தொடர்ந்து உடனடியாக ஆயர் பட்டமும் (Ordination as Bishop) பெற வேண்டும்.

அருள்பணியாளராக (Priest) இருந்தால்: அவர் உடனடியாக ஆயராகத் (Bishop) திருப்பொழிவு செய்யப்படுவார்.ஏனெனில், 

திருத்தந்தை என்பவர் "ரோமின் ஆயர்" (Bishop of Rome) ஆவார். எனவே அவர் முறைப்படி ஆயர் பட்டம் பெற்ற பிறகே திருத்தந்தைக்குரிய முழு அதிகாரங்களையும் ஏற்றுச் செயல்பட முடியும்.

2. வாக்களிக்கும் தகுதி (Who Can Vote?)
 உலகெங்கிலும் உள்ள 80 வயதிற்கு உட்பட்ட கர்தினால்கள் (Cardinals) மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். வழக்கமாக அதிகபட்சமாக 120 கர்தினால்கள் வரை இந்தத் தேர்தலில் பங்கேற்பார்கள்.
 
3. ரகசியக் கூட்டம் மற்றும் தனிமைப்படுத்தல்
திருத்தந்தையின் பதவி காலியானவுடன் (இறப்பு அல்லது பணித்துறப்புக்குப் பின்), 15 முதல் 20 நாட்களுக்குள் இக்கூட்டம் கூட்டப்படும்.
 
கர்தினால்கள் அனைவரும் வாடிகனில் உள்ள சீஸ்டைன் சிற்றாலயத்தில் (Sistine Chapel) ஒன்று கூடுவர்.
 
வெளி உலகத் தொடர்புகள் (செல்போன், இணையம் நாளிதழ்கள்) எதுவும் இன்றி முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள். கூட்டத்தின் தகவல்களை வெளியே கசியவிட்டால் திருச்சபையிலிருந்து நீக்கப்படுவார்கள் (Excommunication).

4. வாக்கெடுக்கும் முறை (Voting Process)
வாக்கெடுப்பு ரகசிய முறையில் காகிதச் சீட்டுகள் மூலம் நடைபெறும்.
 
ஒவ்வொரு கர்தினாலும் "Eligo in Summum Pontificem" (நான் உயர்ந்த ஆயராகத் தேர்ந்தெடுக்கிறேன்...) என்ற வாக்கியத்திற்குக் கீழ் தான் விரும்பும் நபரின் பெயரை எழுதுவார்.
 
ஒரு வேட்பாளர் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு (2/3 majority) வாக்குகள் பெற வேண்டும்.
 
முடிவு எட்டப்படும் வரை தினமும் காலை 2 சுற்றுகள், மாலை 2 சுற்றுகள் என வாக்கெடுப்புத் தொடரும்.

5. புகையின் சிக்னல் (Smoke Signals)
வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்குச் சீட்டுகள் அங்குள்ள சிறப்பு அடுப்பில் வைத்து எரிக்கப்படும். இதிலிருந்து வரும் புகை மூலம் வெளியே காத்திருக்கும் மக்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும்:
 
கருப்புப் புகை (Black Smoke): எவருக்கும் தேவையான 2/3 பங்கு வாக்குகள் கிடைக்கவில்லை; தேர்தல் தொடரும்.
 
வெள்ளைப் புகை (White Smoke): புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்!

6. சம்மதமும் புதிய பெயரும் (Acceptance & New Name)
தேவையான வாக்குகள் பெற்ற கர்தினாலிடம், "நீர் இத்தேர்வை ஏற்றுக்கொள்கிறீரா?" என்று கேட்கப்படும். அவர் சம்மதித்தவுடன், தான் பணியாற்ற விரும்பும் புதிய ஆன்மீகப் பெயரை (எ.கா. பிரான்சிஸ், இரண்டாம் ஜான் பால்) தேர்வு செய்வார்.

7. அதிகாரப் பூர்வ அறிவிப்பு
அதன்பின், புனித பேதுரு பெருங்கோவிலின் பால்கனியில் இருந்து "ஹபேமுஸ் பாபம்" (Habemus Papam - நமக்கு ஒரு திருத்தந்தை இருக்கிறார்!) என்று உலகிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய திருத்தந்தை மக்களுக்கு ஆசி வழங்குவார்.

Post a Comment

0 Comments