Ad Code

முதியோர்களின் நோக்கமுள்ள வாழ்வு முதியோர் ஞாயிறு செய்தி 2026 Senior Citizens Sunday

திருவசன தியானம் – 2026

1. ஞாயிறு குறிப்புகள்

ஞாயிறு: திரித்துவ திருநாள் பின்வரும் 17ஆம் ஞாயிறு
தேதி: 27.09.2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்: 
பழைய ஏற்பாடு: யோசுவா 14:6-13
நிருப வாக்கியம்: பிலிப்பியர் 3:12-16
நற்செய்தி பகுதி: யோவான் 21:18-23
சங்கீதம்: 16

2. திருவசனம்

 கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
பிலிப்பியர் 3:12

2.1 தலைப்பு
“முதியோர்களின் நோக்கமுள்ள வாழ்வு”

2.2 இருப்பிடம்

பிலிப்பியர் 3:12

2.3 திருவசனம்

பவர் திருப்புதல்:
“கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.” பிலிப்பியர் 3:12

திருவிவிலியம்:
“கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.” பிலிப்பியர் 3:12

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
முதியோர் ஞாயிறு

4. வசன குறிப்புகள்

4.1 நூலாசிரியர்
அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் நிருபத்தின் ஆசிரியர் ஆவார்
இந்த நிருபத்தை அவர் சிறைச் சாலையின் சூழ்நிலையில் எழுதினார். 

4.2 அவையோர்
இந்த நிருபம் பிலிப்பி சபையில் இருந்த கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது.
அவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும், கிறிஸ்துவைப் போல வாழவும், ஒற்றுமையுடன் முன்னேறவும் பவுல் அறிவுறுத்துகிறார்.

4.3 வசன பின்னணி
பிலிப்பியர் 3:7–14 வரை உள்ள பகுதி பவுல் தனது கடந்தகால சாதனைகளைப் பற்றி கூறிய பிறகு, அவற்றையெல்லாம் கிறிஸ்துவோடு ஒப்பிடும்போது தனது கடந்தகால சாதனைகளை நஷ்டமாக கருதுகிறார்.
அவர் கிறிஸ்துவை அறிந்துகொள்ள விரும்புகிறார். ஆனால் முக்கியமாக அவர் கூறுவது நான் பல ஊழியங்களைச் செய்துவிட்டேன்; “நான் கிறிஸ்துவை அறிந்துவிட்டேன் எனவே இது போதும், இனி வளர்ச்சி தேவையில்லை” என்று சொல்லவில்லை. மாறாக, v.12b “நான் ஆசையாய்த் தொடர்ந்து செல்கிறேன்.” என்று கூறுகிறார்.

5. திருவசன விளக்கவுரை
A. கிறிஸ்து என்னைப் பற்றிக்கொண்டார்
பவுலின் முயற்சி தன்னுடைய சுயமுயற்சியிலிருந்து ஆரம்பிக்கவில்லை.
முதலில் கிறிஸ்து பவுலைப் பற்றிக்கொண்டார்; அதன் காரணமாக பவுல் கிறிஸ்துவின் நோக்கத்தைப் பற்றிக்கொள்ளத் தொடர்ந்து செல்கிறார்
B. அதை நான் பிடித்துக்கொள்ளும்படி
“பிடித்துக்கொள்ள” என்பதற்கு பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல் καταλαμβάνω (katalambanō). இதில் விரைந்து சென்று பற்றிக்கொள்ளுதல், இலக்கை அடைந்து தன்னுடையதாக்கிக் கொள்ளுதல் என்ற வலிமையான கருத்து உள்ளது. “கிறிஸ்து என்னைப் பற்றிக்கொண்ட நோக்கத்தை முழுமையாக என் வாழ்க்கையில் அடைய வேண்டும்” என்பதை வலியுறுத்துகிறார்.
C. ஆசையாய்த் தொடருகிறேன்
இங்கே பவுல் பயன்படுத்தும் கிரேக்கச் சொல் διώκω (diōkō). இதன் அடிப்படை பொருள் தொடர்ந்து துரத்துதல், தீவிரமாக நாடுதல், இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் செல்வது என்பதாகும். இது ஒரு செயலில் தொடர்ந்து ஈடுபடுவதைக் குறிக்கிறது. “நான் கிறிஸ்தவனாகிவிட்டேன்; இனி ஒன்றும் தேவையில்லை” என்பது பவுலின் எண்ணம் அல்ல.
மாறாக, நான் இன்னும் இலக்கை அடையவில்லை எனவே தொடர்ந்து கிறிஸ்துவை நோக்கிச் செல்கிறேன்.”என்பதே அவருடைய நோக்கம்.

5.2 வசன விளக்கம்
பவுல் தன்னுடய ஊழியப்பயனத்தில் திருப்தி அடைந்த மனநிலைக்கு பதிலாக
கிறிஸ்து ஏற்கனவே என்னைப் பற்றிக்கொண்டு ஒரு நோக்கத்திற்காக அழைத்திருக்கிறார்; அந்த நோக்கம் என் வாழ்க்கையில் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக, நான் சோர்ந்து நிற்காமல் கிறிஸ்துவை நோக்கி தொடர்ந்து முன்னேறுகிறேன் என்று கிறிஸ்துவின் நோக்கத்தை நோக்கி செல்கிறார்.

6. இறையியல் & வாழ்வியல்
கிறிஸ்து என்னைப் பிடித்துக்கொண்டார்” என்பது வெறும் “நான் இரட்சிக்கப்பட்டேன்” என்பதோடு முடிவதில்லை. “கிறிஸ்து என்னை எதற்காகப் பிடித்துக்கொண்டார்?” என்ற கேள்வி அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நோக்கங்கள் பல கோணங்களில் விளங்குகிறது: புதிய மனிதனாக மாறுதல், கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக்குதல், சாட்சியாக்குதல், பிறரை கிறிஸ்துவிடம் கொண்டுவருதல், பாடுகளிலும் கிறிஸ்துவை அறிதல், உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நோக்கிச் செல்லுதல். 
அதனால் இரட்சிப்பு என்பது இலக்கு அல்ல; தேவனுடைய நோக்கத்தில் வாழ்வதற்கான புதிய வாழ்க்கையின் தொடக்கம் ஆகும்.

வாழ்வியல் 
பவுல் தன்னை திருப்தியடைந்த மனிதனாகப் பார்க்கவில்லை. நாமும்
நான் பல வருடமாக கிறிஸ்தவன்,நான் ஊழியம் செய்கிறேன்,நான் வேதாகமம் படிக்கிறேன் என்று ஆண்டவரோடுகூடிய வளர்ச்சியில் நின்றுவிடக்கூடாது. ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் நோக்கம் அறிந்து அவரில் வளர வேண்டும்.

7. அருளுரை குறிப்புகள்
A. கிறிஸ்து என்னைப் பற்றிக்கொண்டார்
B. கிறிஸ்துவின் நோக்கத்தை நான் பற்றிக்கொள்கிறேன்
C. கிறிஸ்துவை தொடர்கிறேன்


எழுதியவர்:
சகோ. இம்மானுவேல்
சபை ஊழியர்.

Post a Comment

0 Comments