இளமைப் பருவம்
கால்டுவெல் அவர்கள் 07.05.1814 அன்று ஐக்கிய இராஜ்ஜியத்தின் உறுப்பு நாடான அயர்லாந்து தேசத்தில் உள்ள கிளாடி என்னும் சிற்றூரில் ஸ்காட் இன பெற்றோருக்கு பிறந்த 7வது மகனாக பிறந்தார். இவர் பிறந்த பிறகு குடும்பத்தினர் தங்கள் சொந்த நாடான ஸ்காட்லாந்திற்கு திரும்பியதால், அங்கு வாழ்ந்து வந்தார். சிறுவயதில் தானாக முன்வந்து அநேக காரியங்களை கற்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும், அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. பின்னாட்களில் அவருக்கு இறையியல் மீது ஈடுபாடு வந்தது.
Bishop Caldwell |
இறைப்பணிக்கான நாட்டம்
கால்டுவெல் அவர்கள் தம் இருபதாம் வயதில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார். இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அவர்கள் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படி பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.
இந்தியாவில் இறைப்பணி
கால்டுவெல் அவர்கள் தமது 24 ஆம் வயதில் இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் (London Mission) சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் 'அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். கடவுளின் அருளால் தப்பிய இவர் தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டியிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது, சி.பி. பிரெளன் என்னும் ஆந்திராவில் பணி புரிந்திருந்த குடிமைப்பணி அதிகாரியுடனான நட்பால் தெலுங்கு, வடமொழிகளைக் கற்றார். சென்னைக்கு வந்த பின்பு துருவர்' (Mr. Drew) என்பவரிடம் தமிழ் கற்றார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு சென்று ஊழியம் செய்ய தீர்மானித்தார். இலண்டன் ஊழியத்தூதன் அமைப்பில் இருந்து வந்தவர் காலப்போக்கில் SPG என்னும் சுவிசேஷ அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.
திருநெல்வேலியில் கால்டுவெல்
1841 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார். நவம்பர் 28 அன்று நாசரேத்தில் தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையை அன்று நிகழ்த்தினார். டிசம்பர் மாதம் அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரை மையமாகக் கொண்டு ஊழியத்தை ஆரம்பித்தார். அவர் அடிக்கடி சொல்லக்கூடியது: "திருநெல்வேலிக்காக நான் வாழ்கிறேன், திருநெல்வேலிக்காக நான் சாகவும் தயாராக உள்ளேன்."
இல்லற வாழ்வில் கால்டுவெல்
பேராயர் பயன்படுத்திய சிற்றாலயம் & கட்டில் |
இடையன்குடியில் இறைப்பணி
1841 முதல் 1844 வரை தனியாகவும் பின்பு குடும்பமாகவும் இடையன்குடி மக்கள் மத்தியில் நற்செய்தி பணி செய்து சபைகளை ஸ்தாபித்தார். இடையன்குடி பகுதியை விலைக்கு வாங்கி அங்கு அழகான, நேர்த்தியான ஒரு மாதிரி கிராமத்தை பல எதிர்ப்புகளின் மத்தியில் உருவாக்கினார். விக்கிரக வழிபாடு, மூடநம்பிக்கை ஆகியவற்றை விட்டு விலகச்செய்து மக்களை நல்வழிபடுத்தினார். 1858 ஆம் ஆண்டு கால்டுவெல் இடையன்குடி சுதேசி சுவிசேஷ பிரபல்ய சங்கம் ஒன்றை நிறுவினார். இச்சங்கத்தின் நோக்கம், "இலவசமாக பெற்றீர்கள்; இலவசமாக கொடுங்கள் (மத்தேயு 10.08). 1880 ஆம் ஆண்டு இடையன்குடியில் மிகப் பெரிய ஆலயம் கட்டப்பட்டது. பாடல்களின் ராகத்தை இசைக்ககூடிய நான்கு பெரிய மணிகள் ஆலயத்தின் கோபுரத்தில் உள்ளன.
Holy Trinity Church |
கால்டுவெலின் சமூகப்பணி
கால்டுவெல் ஜாதிய வேறுபாடுகளை களைந்து அனைவருக்கும் சமத்துவ கல்வியினை வழங்கினார். பெண்களுக்கு சுகாதாரம், கல்வி ஆகியவற்றை ஊக்குவித்தார். சத்துணவு திட்டத்திற்கு முன்னோடியாக, பிள்ளைகளை பள்ளிக்கு வர வைக்கும் வண்ணம், கருப்பட்டியும் பொரிக்கடலையும் கொடுத்து பசியாற்றினார். 8 மானவிகளோடு 1844 ஆம் ஆண்டு மே மாதம் எலைசா அம்மையார் கண்காணிப்பில் பெண்கள் விடுதி தொடங்கப்பட்டு, கல்வி கற்க வாய்ப்பு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது. எலைசா அம்மையார் பின்னல் கலையினை (lace-making) பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார். 1870 ஆம் ஆண்டு சென்னை மாநில ஆளுநர் நேப்பியரின் உதவியோடு இம்மானுவேல் மருத்துவமனையை இடையன்குடியில் நிறுவினார்.
கால்டுவெலின் கோர்ட் & எலைசாவின் கைவேலை பொருட்கள் |
மொழித்தொண்டாற்றிய கால்டுவெல்
கால்டுவெல் ஐயா இயல்பிலேயே நன்றாக எழுதும் பண்பு உடையவர். அதிகமாக வாசிப்பவரும் கூட. அவர் தமிழ் வரலாற்றில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். 608 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1856 ஆம் ஆண்டு வெளயிடப்பட்டது. 1881 ஆம் ஆண்டு திருநல்வேலி சரித்திரம் என்ற 300 பக்கங்கள் கொண்ட நூலை வெளியட்டார். அதே ஆண்டு திருநெல்வேலி திருச்சபையின் தொடக்கக் கால வரலாறு என்ற 356 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதினார். பரிசுத்த வேதாகமத்திற்கு தேவையான திராவிட மொழி வார்த்தைகளை மொழிபெயர்த்து உருவாக்கினார். ஹென்றி பவர் வேதாகம மொழிபெயர்ப்பிலும், ஜெப புத்தக தமிழாக்கத்திலும் இவருக்கு பெரும்பங்கு உண்டு. 1866 ஆம் ஆண்டு கிளாஸ்கோ பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியக் கலையில் பேரறிஞர் (LLD) பட்டமளித்தது. 1875 ஆம் ஆண்டு கான்றர்பரி பிரதம பேராயர் மூலம் கால்டுவெல் இறையியல் கலையில் DD பட்டம் பெற்றார்.
அத்தியட்சராக கால்டுவெல்
11.03.1877 அன்று திருநெல்வேலி SPG சபைகளுக்கு அத்தியட்சராக அபிஷேகம் செய்யப்பட்டார். அதாவது சென்னைப் பேராயத்தின் கீழ் உதவிப் பேராயர் ஆவார். தனக்கு கீழுள்ள சபைகளை நேர்த்தியாக கவனிக்கும் வண்ணம் தூத்துக்குடியில் தங்கி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் பகுதிகளில் தன் கண்காணிப்பு பணியினை செய்தார்.
மரணம்வரை திருநெல்வேலி மூச்சு
"என்னால் (சொந்த நாட்டிற்கு) வர முடியாது, இவர்களை (தமிழர்கள்) நான் நேசிக்கிறேன்" என்று சொன்ன கால்டுவெல் அவர்கள் தாம் சொன்னபடியே தமிழ் மண்ணிலுள்ள கொடைக்கானலில் 28.08.1891 அன்று இன்னுயிர் நீத்தார். அவர் விருப்பப்படி அவரது உடல் இடையன்குடி கொண்டு வரப்பட்டது. ஆலயத்தின் ஆல்டர் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆல்டரிலுள்ள பேராயரின் கல்லறை |
தமிழ்நாடு அரசு சார்பாக சென்னையில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இவரை கௌரவிக்கும் விதமாக பேராயர் கால்டுவெல் நினைவிடம் இடையன்குடியில் கட்டபட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மரியாதை |
5 Comments
Thank u bro...
ReplyDeleteGod is Good
Delete👌👌👌👌🏽
ReplyDelete👌🏻👌🏻👌🏻👌🏻👏
ReplyDeleteபேருந்துகள் இயங்காத ஜூன் 2020ல் இங்கே சென்றிருக்கிறேன்.
ReplyDeleteரிதமிக் பெல் எனப்படும் ராட்சத மணிகளை, படியேறி பார்த்தேன். ஒரு கட்டுக்கோப்பான கிராமம்