Ad Code

திருமறையில் திடப்படுவோம் -1 திருமறையின் அமைப்பு

திருமறையில் திடப்படுவோம் என்ற தொடர் பதிவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. திருமறை குறித்து ஆழமாக அறிந்து கொள்ள இந்த பதிவுகள் அமையுமென்று நம்புகின்றோம்.
                 திருமறையின் அமைப்பு 

நமக்கு கடவுள் தம் பணிவிடையாளர்கள் வாயிலாக அருளிய வேதாகமம் சிறப்புமிக்க பின்னணியோடு ஒழுங்காக அமையப் பெற்ற புத்தகம் ஆகும்.

1. திருமறையின் பகுப்பு எப்படியுள்ளது?

பழைய ஏற்பாடு & புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளன. பரிசுத்த வேதத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் ,1189 அதிகாரங்கள், 31,173 வசனங்கள் உள்ளன.

பழைய ஏற்பாடு Old Testament
      புத்தகங்கள் - 39
      ஆசிரியர்கள் - 30
      அதிகாரங்கள் - 929
      வசனங்கள் - 23,214

புதிய ஏற்பாடு New Testament
         புத்தகங்கள் - 27
         ஆசிரியர்கள் - 10
         அதிகாரங்கள் - 260
         வசனங்கள் 7,959

2. ஏற்பாடு என்றால் என்ன?

        ஏற்பாடு என்ற வார்த்தைக்கு உடன்படிக்கை (Covenant) அல்லது ஒப்பந்தம் என்று பொருள். கடவுள் தம் மக்களோடு செய்த உடன்படிக்கையின் எழுத்து வடிவ வெளிப்பாடே வேதாகமம். பழைய ஏற்பாடு என்பது குறிப்பாக கடவுளாகிய யெகோவா நியாயப்பிரமாணத்தின் மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு உடன்படிக்கையை ஸ்தாபித்து, மேசுயாவின் வருகைக்கான ஆயத்தததை விளக்குகிறது. புதிய ஏற்பாடு என்பது கடவுள் தம்  குமாரனை மேசியாவாக இப்பூமிக்கு அனுப்பி, மீட்ட கிறிஸ்துவின் பிரமாணத்தை கற்பிக்கிறது.

3. எந்த மொழியில் எழுதப்பட்டது?

       பழைய ஏற்பாடு பண்டைய எபிரேய (Hebrew) மொழியில் எழுதப்பட்டது. ஆனால் தானியேல் 2 -7 மற்றும் எஸ்றா 4 - 7 இந்த அத்தியாங்கள் அரமேயு (Aramaic)மொழியில் எழுதப்பட்டுலுள்ளன. 
       புதிய ஏற்பாடு பண்டைய கோயினே பாஷையான கிரேக்க (Greek) மொழியில் எழுதப்பட்டது.

4. எப்படி எழுதப்பட்டது?

         அப்போஸ்தலராகிய பரிசுத்த பேதுரு அடிகளார் தெளிவாக பதில் கூறுகிறார்:  வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள் (2 பேதுரு 1.20-21).
         ஆக, தூய ஆவியாராம் கடவுளே திருமறையின் ஆசிரியர். ஏவப்படுதல் என்பது மனிதனின் அறிவு, தெளிவு, வெளிப்பாடு ஆகியவற்றுக்கும் அப்பாற்பட்டது. அது தெய்வீக செயல். 


5. திருமறை எழுதப்பட்ட நோக்கம் என்ன?

        பரிசுத்த பவுலடிகளார் பரிசுத்த நோக்கத்தின் தன்மையை அழகாக எழுதியுள்ளார். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோத்தேயு 3.16-17).

6. வேத வசனத்தின் மகத்துவம் என்ன?
          எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இறைவார்த்தை வெறும் வார்த்தை அல்ல. அவை உயிருள்ள இறைவாக்கு. ஒழிந்து போகாது; நிலை நிற்கும்.
          ஏசாயா 55.11 சொல்லுகிறது, என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
          எபிரேயர் 4.12 சொல்லுகிறது, கடவுளின் வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
                               ...... தொடரும் ......

அடுத்த பதிவில் புத்தகத்தின் வகைகள்....

Post a Comment

0 Comments