இறைஇயேசுவில் பிரியமானவர்களே,
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் புதிய மாதத்தின் துவக்க நாள் அன்பின் வாழ்த்துக்கள்.
இந்த உலகத்திலே ஆறுதலை தேடி அலையும் மக்கள் கூட்டத்தை கண்ணார நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிலையில்லா இவ்வுலகில் நிலையற்ற வாழ்வை வாழ்ந்து, நிரந்தர நிம்மதியை தேடும் நமக்கு நிறைவான ஆறுதலை தருவது இறை நம்பிக்கை. வாசிப்போம், எபிரேயர் 6.18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத கடவுள் அப்படிச் செய்தார். இன்றைய தியானம் என்னவென்றால்,
இறைநம்பிக்கையில் ஆறுதல்
Comfort in the Faith in God
இந்த வசனத்தில் நாம் பார்க்கும் போது, இரண்டு மாறாத விசேஷங்கள் என்பவை உடன்படிக்கையும், வக்குத்தத்தமும் ஆகும். அவற்றின் வாயிலாக, இறை நம்பிக்கை கொண்ட தம் மக்களுக்கு கடவுள் நிறைவான ஆறுதலை கொடுக்கிறார். தூய பவுலடிகளார் கடவுளை ஆறுதலின் இறைவன் என்று சொல்லி (2 கொரி 1.3; 2 தெச 2.16)
கடவுள் எப்படியெல்லாம் ஆறுதலை கொடுக்கிறார் என்று 3 காரியங்களை தியானிப்போம்.
1. இறைவனே தரும் ஆறுதல்
Comfort - Given by God
ஏசாயா 51.12 சொல்லுகிறது, நான் நானே என்ற பதம் வெளிப்படுத்துவது என்னவென்றால், கடவுள் ஒருவர் மட்டுமே நிறைவான ஆறுதலை கொடுக்க முடியும்.
மத்தேயு 11.28 இல் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
அப்போஸ்தலர் 9.31 இல் வாசிக்கிறோம், ....பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
ஆம் நாம் வழிபடுகின்ற திரித்துவ கடவுள் தம் மக்களுக்கு தாமே ஆறுதல் கொடுகிறவர் என்பதை இந்த மூன்று வசனங்கள் நமக்கு கற்பிக்கின்றன. இன்றைக்கு மனநல மருத்துவம் பெருகினாலும், அவர்களால் முழு மன அமைதியை கொடுக்க முடியாது என்று அவர்களே சொல்லுகிறார்கள். ஆம் இறை நம்பிக்கை கொண்டிருக்கும் போது, இறைவனே ஆறுதல் தருவார்.
2. இறைவார்த்தை தரும் ஆறுதல்
Comfort - by God's Word
அடுத்ததாக கடவுளின் திருவார்த்தை நமக்கு ஆறுதலை தருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ரோமர் 15.4 சொல்லுகிறது, தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
சங்கீதம் 119.49& 50 ஐ நாம் பார்க்கும் போது, சங்கீதக்காரன் சொல்லுகிறார், நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.
அப்போஸ்தலர் 15.31 ஐ நாம் வாசிக்கும் ஆதி அப்போஸ்தலர்கள் கூடி எடுத்த தீர்மான நகலை வாசிக்கும் போது, சபையில் ஆறுதல் உண்டானது என்று வாசிக்கிறோம்.
ஆம் நாம் ஆண்டவருடைய வேதத்தை தியானிக்கும் போது, அது நம்முடன் பேசும். நம்மோடு உறவாடும். அந்த நம்பிக்கையில் துன்பம் வரும்போது மட்டுமல்ல எப்போதும், வேதத்தில் நேரம் செலவிட்டு, இறை ஆறுதல் பெறுவோம்.
3. இறைப்பணியாளர்கள் மூலம் ஆறுதல்
Comfort - through God's Servant
மூன்றாவதாக கடவுள் தம் பணிவிடைக்காரர்கள் மூலம் ஆறுதலை அருளுகிறார். வாசிப்போம்.
2 கொரிந்தியர் 1.4 & 6 ".... எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி,..... நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்...." மேற்கண்ட வசனங்களை வாசித்து பார்க்கும் போது, கடவுள் தமது ஊழியர்கள் வாயிலாக ஆறுதலை கொடுப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
எபேசியர் 6.22 இல் எபேசு சபைக்கு ஆறுதலாக தீகிக்கு இருந்தாக தூய பவுல் எழுதியுள்ளார். 2 கொரிந்தியர் 7.13 இல் தீத்து கொரிந்து சபைக்கு ஆறுதலின் கருவியாக செயல்பட்டதை பார்க்க முடிகிறது.
ஆண்டவர் நமக்கு கொடுத்துள்ள ஊழியர்களிடம் ஆலோசனை கேட்கலாம், இணைந்து ஜெபிக்கலாம்; ஏனென்றால் அவர்கள் கடவுளின் தூதுவர்கள். கடவுள் அவர்களின் செயல்பாடுகள், வார்த்தைகள் வாயிலாக நம்மோடு இடைபடுகிறார்.
நிறைவாக,
அப்போஸ்தலர் பவுல் ரோமாபுரியாருக்கு எழுதுகிறார், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும்... (ரோமர் 1:11). ஆம் இறைநம்பிக்கையில் ஆறுதல் என்பது சாத்தியம். ஆகவே நாம் இறைநம்பிக்கையோடு இந்த ஆகஸ்ட் மாதத்தை துவங்குவோம், நிறைவான ஆறுதலை எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருளிச் செய்து, உங்கள் வாழ்நாள்பரியந்தம் நடத்துவாராக.
0 Comments