Ad Code

புனிதர் மத்தேயு திருநாள் | The Feast of the St. Matthew the Apostle

புனிதர் மத்தேயு திருநாள்

யார் இந்த மத்தேயு?

திருத்தூதர் புனிதர் மத்தேயு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான மத்தேயு மாற்கு (2.14), லூக்கா (5.27) நற்செய்தி நூல்களில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். மத்தேயு என்ற பெயருக்கு "யெகோவாவின் பரிசு" (கர்த்தரின் தானம்) என்றுபொருள். இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர். 

அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.

இவரது அழைப்பு எப்படி?

கப்பர்நாகூமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிக் கொண்டிருந்த மத்தேயுவை, இயேசு கிறிஸ்து அழைத்து, தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார். இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர். அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். இயேசு கிறிஸ்து மத்தேயுவின்  வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
மாற்கு (3.18), (மத்தேயு 10.3), லூக்கா (6.15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1.13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன. புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும், தூய ஆவியின் அருட்கொடைக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. 

எங்கு பணி செய்தார்?

சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.

கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.

மத்தேயு நற்செய்தி இவர் எழுதியதா?

இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு அரமேய மொழியில் எழுதினார் என்று திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை.

கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் இருந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண மத்தேயு எழுதியதாக தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த இறைமகனாகிய மேசியா இயேசுதாம் என யூத கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது.  திருச்சட்டம் பெறாத பிற இனத்தார் அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றியும், கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.

மத்தேயுவின் வாழ்வு கற்பிப்பது என்ன?

ஹியேராபொலிஸ் அருகே அல்லது எத்தியோப்பியாவில் (Hierapolis or Ethiopia) கல்லெறியப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். இவரது திருப்பண்டங்கள் இத்தாலியின் சலெர்னோ கதீட்ரலில் பாதுகாக்கப்படுகின்றன. மற்ற நற்செய்தியாளர்களைப் போன்றே, கிறிஸ்தவ கலையில் திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்படும் நான்கு உயிர்களில் ஒன்றான சிறகுள்ள மனிதனோடு சித்தரிக்கப்படுகிறார்.

திருத்தூதர், நற்செய்தியாளர், மறைசாட்சி (Apostle, Evangelist, Martyr) மத்தேயுவின் வாழ்வின் வாயிலாக இயேசு கிறிஸ்து கற்றுத்தருவது, (மாற்கு 2:16-17). "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.

Post a Comment

1 Comments

Anonymous said…
Good Information