வேதம் சொல்லுகிறது, “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான புனிதர்கள் இருக்கிறார்கள் (திவெ 7: 9). எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து பார்ப்பதற்குத்தான் திருச்சபை ஒருநாளை ஒதுக்கி, அவர்களைச் சிறப்பு செய்கிறது.
முதலில் அனைத்துப் புனிதர்களின் விழா தோன்றியதன் வரலாற்றுப் பின்னணியை சிந்தித்துப் பார்த்து, அதன்பின் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இவ்விழா கொண்டாடப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது நான்காம் நூற்றாண்டில் ‘கிறிஸ்த மதத்தைப் பின்பற்றியதற்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாப்பட்டதற்கான ஒரு சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனாலும் அது சிறிய அளவில்தான் நடந்திருக்கின்றது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை நான்காம் போனிபெஸ்தான் (608 -615) ரோம் நகரில் இருந்த ‘பந்தேயோன்’ என்று அழைக்கப்படுகின்ற அனைத்துக் கடவுள்களின் கோவிலை இடித்துத் தள்ளி, அந்த இடத்தில் கிறிஸ்துவுக்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களின் நினைவாக ஆலயம் ஒன்று எழுப்பினார். அன்றிலிருந்துதான் அனைத்துப் புனிதர்களின் விழா படிப்படியாக வளர்ந்தது.
கி.பி 993 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. இப்படிதான் அனைத்துப் புனிதர்களின் விழா நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடும் நிலை ஏற்பட்டது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 13:7 ல் வாசிக்கின்றோம், உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்” என்று. ஆம், இன்றைய நாளில் நாம் அவர்களை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்.
0 Comments