✠ பரிசுத்த பவுலடிகளார் வரலாறு ✠ A History of the St. Paul ✠
பிறப்பு: கிபி 4 அல்லது 9
டார்சஸ், சிசிலியா, ரோமப் பேரரசு
(Tarsus, Cilicia, Roman Empire)
இறப்பு: கி.பி. 64 அல்லது 67
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)
குணப்பட்ட திருநாள் - ஜனவரி 25.
புனித பவுல் என்றழைக்கப்படும் சவுல் இயேசுவின் நேரடி சீடரல்லாத அப்போஸ்தலர் ஆவார். இவரது எபிரேய பெயர் சவுல் என்பதாகும். சவுல் சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ரோம குடிமகனாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாகும். இஸ்ரவேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பரிசேயராவார். இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார். அவர் ரோமானிய குடிமகனாக இருந்த போதிலும், யூத பாரம்பரியத்தின்படி, இளமையில் எபிரேய மொழி கற்று, யூத கல்வியறிவில் நன்கு தேர்ச்சி பெற்றார். கூடாரம் அமைக்கும் தொழிலையும் கற்றார்.
அப்போது கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாகக் கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடங்கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரைத் துன்புறுத்தினார். கிறிஸ்தவர் இவரது பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள்.
தமஸ்கு (Syrian Damascus) நகரில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு செல்லும் வழியில், திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசிக்க, தரையிலே விழுந்தார். அப்பொழுது, "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்" என்று கேட்க, "ஆண்டவரே, நீர் யார்?", என்றார். அதற்குக் கர்த்தர், "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்." என்றார். சவுல் நடுங்கித் திகைத்து, "ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்" என்றார். பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார்.
இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் நற்செய்தி அறிவித்து வந்த காலத்தில் ஆசிய மைனர், கிரீஸ், பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் பரவலாகப் பயணம் செய்து வந்தார். பிற முற்காலக் கிறிஸ்துவர்கள் சிலரைப் போல் பவுல் கிறிஸ்துவத்தை யூதர்களுக்குப் போதிப்பதிலும் வெற்றி பெறவில்லை. அவர் போதித்த முறை எதிர்ப்பைக் கிளறி, அவரது உயிருக்கே இடர் ஏற்பட்டது. ஆயினும் யூதரல்லாத பிறருக்குப் போதிப்பதில் பவுல் மாபெரும் வெற்றி பெற்றார். கிறிஸ்து எல்லோருக்கும் பொதுவானவர் - யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் (வேற்று இனத்தவரின் திருத்தூதர் -
(Apostle of the Gentiles) என அழைக்கப்படுகிறார்.
பவுல் ஆரம்ப கிறிஸ்தவ மறை பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்து மறையைப் பரப்புவதில் அவரைப் போல் பெரும் பங்கு யாரும் பெற்றதே இல்லை. ரோமானியப் பேரரசின் கிழக்குப் பகுதியில் சமயம் பரப்புவதற்காக மூன்று முறை பயணம் செய்த பின் பவுல் ஜெரூசலம் திரும்பினார். அங்கு அவர் சிறைப்பட்டார். ஆயினும் நீதி விசாரணைக்காக ரோமிற்கு அனுப்பப்பட்டார். அவ்விசாரணை எவ்வாறு முடிந்ததென்பதோ, அவர் ரோமை விட்டு வெளியேறினாரா என்பதோ தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் பிறகு (ஏறக்குறைய கி.பி. 64 இல்) ரோம் அருகில் தலை வெட்டப்பட்டார்.
புதிய ஏற்பாட்டிலுள்ள 27 பகுதிகளில் 13 பவுல் எழுதியதாகக் கருதப்படுகின்றன. கிறிஸ்துவ இறையியலுக்குப் பவுல் ஆற்றிய பணி அளவிடற்கரியது. பவுல் மணமாகாதவரெனத் தெரிகின்றது. கிறிஸ்துவ திருமறை ஒரு யூத சமயப் பிரிவினின்று உலக மறையாக மாறியதற்கு பவுலே முக்கியக் காரணமாவார் என்றால் மிகையாகாது.
⚡⚡⚡⚡⚡
0 Comments