தியானம் : 5 / 19.02.2022
தலைப்பு : எந்தமட்டும் குந்திக்குந்தி நடப்பீர்கள்?
திருவசனம் : 1 இராஜாக்கள் 18.21 " அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை."
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். "ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால்" என்ற அவலநிலை பெரும்பாலான மக்களுடைய வாழ்விலிருப்பதை காணலாம். அவ்வாறே, ஆகாப் அரசரின் காலத்தில் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையிலும் இருமனதோடு குந்திக்குந்தி நடப்பதை (How long will you falter?) இறைவாக்கினர் எலியா சுட்டிக்காட்டுகிறார். இந்த நிலைக்கு வேறு யாரையும் காரணம் கூறமுடியாது. அவரவர் தான் காரணம். ஏன் இஸ்ரவேல் மக்கள் இப்படி தத்தளிக்கும் நிலையில் காணப்பட்டார்கள்?
1. மனதிலே இரண்டு நினைவுகள்
இருமனமுள்ளவன் தன் வழிகளில் நிலையற்று திரிகிறான். இரட்டை வேடம் போட்டாற் போல், யாவே மற்றும் பாகாலை வணங்கிய இஸ்ரவேல் மக்கள் இறைபக்தி அற்றவர்கள் போல் வாழ்ந்தனர். கடவுளின் துணையில்லாததால் ஒழுங்காக வாழ்வும் துணிந்து பயணிக்கவும் அவர்களால் முடியவில்லை. ஒரே சிந்தையில்லாததால், இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லை.
2. மற்றவர்கள் மீதான வீணான பயம்
இங்கே இறைவாக்கினர்களைக் கொன்று, இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிற ஆகாப் அரசருக்கு பயந்து, இஸ்ரவேலர் கடவுளை விட்டு பின்வாங்கிப்போன நிலை. கடவுள் மீதுள்ள பயம் மற்றும் நம்பிக்கை குறைந்ததால், மனிதருக்குப் (ஆகாப்புக்கு) பயப்பட்டு முடிவு எடுக்க நிலையில் இஸ்ரவேலர் வாழ்ந்தனர். இதனால் தலைநிமிர்ந்து நடக்க இயலாமல் குந்திக்குந்தி நடக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
3. மற்றவர்களைப் பிரியப்படுத்துதல்
ஆளுங்கட்சி அரசர் ஆகாப்பை பிரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இஸ்ரவேலர் வாழ்ந்திருப்பார்கள். ஏனென்றால் எலியா வருவதற்கு முன்வரை ஏன், பாகாலின் தீர்க்கர்கள் பின்வாங்கும் வரை, யாரும் ஆண்டவருக்காக வைராக்கியம் கொண்டு ஆகாப்பை எதிர்க்கவில்லை. மனிதர்களைப் பிரியப்படுத்த ஆரம்பித்து விட்டாலே, கடவுளின் விருப்பப்படி நடக்க முடியாமல் குந்திக்குந்தி தான் நடக்க இயலும்.
நிறைவுரை
இந்த உலகத்திலே, பெரும்பாலான மக்கள், வெளியிலே வீரநடை போட்டாலும், தங்கள் மனதிலே குழப்பத்தோடு, இரு நினைவுகளோடு குந்திக்குந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்ரவேல் மக்களில் எலியா மாத்திரம் குந்திக்குந்தி நடக்கவில்லை. காரணம் அவர் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக ஒரே மனதோடு தைரியமாக வாழ்ந்தார். நீங்கள் எப்படி??? இறையாசி உங்களோடிருப்பதாக.
1 Comments
Super bro
ReplyDelete