Ad Code

1. மலைப்பிரசங்கத்திற்கு ஓர் முகவுரை | யே. கோல்டன் ரதிஸ் | Preface for the Sermon on the Mount | மத்தேயு 5. 1-2 Matthew


மலைப்பிரசங்கத்திற்கு ஓர் முகவுரை:

இறையரசிற்கான இறைமைந்தனின் உரை

 


    யே. கோல்டன் ரதிஸ் B.A, B.Sc., B.Th.,                    மேலமெஞ்ஞானபுரம் சேகரம்

       CSI திருநெல்வேலி திருமண்டலம்           

      BD - 3, செராம்பூர் கல்லூரி, செராம்பூர். 

 

முகவுரை

 

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். அருளும் அமைதியும் உங்களோடிருப்பதாக.

 

இயேசுகிறிஸ்துவின் சொற்பொழிவு என்றாலே, அனைவருடைய ஞாபகத்திற்கும் வருவது, மிகவும் பிரபலமான மலைப்பிரசங்கம் தான் (Sermon on the Mount). உலக இலக்கியத்தில் மிக உன்னதமான உரை என்றழைக்கப்படுகிற இந்த அருளுரை, திருமறையின் புதிய ஏற்பாட்டில் காணப்படக்கூடிய மிக நீண்ட போதனையாகும். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அகஸ்டின் (St. Augustine) என்ற இறையியலாளரால் பயன்படுத்தப்பட்ட மலைப்பிரசங்கம் (De Sermone Domini in Monte), என்ற சொற்றொடர் இன்று வரை அநேகருடைய மனதில் இடம்பிடித்துள்ளது.

 

ஆசிரியர்

 

அப்போஸ்தலராகிய புனிதர் மத்தேயு மட்டுமே, தனது நற்செய்தி நூலில், ஐந்து போதனைகளில் (Five Discourses) முதலாவதாக இந்தப் போதனையை எழுதியுள்ளார். மத்தேயு நற்செய்தி நூலில், 5, 6 மற்றும் 7 ஆம் அதிகாரங்களில் 111 வசனங்களில் வருகிறது. நற்செய்தியாளராகிய புனிதர் லூக்கா, இதற்கு ஒத்த, ஆனால் சமவெளிப் பகுதியில் இயேசுகிறிஸ்து பேசின சொற்பொழிவை தன் நற்செய்தி நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

இடம்

 

இயேசுகிறிஸ்துவின் திருமுழுக்குக்குப் பிறகு, கலிலேயா ஊழியத்தின் தொடக்கத்தில், இந்தப் பிரசங்கத்தை செய்திருக்க அதிக வாய்ப்புண்டு. எந்த மலையில் வைத்து இயேசுகிறிஸ்து இந்தப் பிரசங்கத்தை செய்தார் என்று திருமறையில் கூறப்படவில்லை. ஆனால் கலிலேயாக் கடலின் மேற்குப் பகுதியில் கூர்மையாக உயர்ந்த முரடான இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது திருவருட்பேறு ஆலயம் (The Church of Beatitudes) வடக்கில் ஒரு குன்றின் மீது கலிலேயா கடற்கரையை நோக்கிய வண்ணம், காணப்படுகிறது.

 

பிரிவுகள்

 

1. முகவுரை (5.1-2)

2. திருவருட்பேறுகள்: இறையரசில் குடிமக்களின் குணங்கள் (5.1-12)

3. சீடத்துவத்தின் வெளிப்பாடு (5.13-16)

4. நியாயப்பிரமாணத்திற்கான இயேசுவின் விளக்கவுரை (5.17-48)

4. கிறிஸ்தவ வாழ்விற்கான நெறிமுறைகள் (6.1- 7.12)

5 இறையரசிற்கான வழிமுறைகள் (7.13-27)

6. நிறைவுரை (7.28-29)

 

தியானப் பகுதி

 

மத்தேயு 5.1-2 “அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்…”

 

பின்னணி

 

கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் இறையரசின் நற்செய்தியை உபதேசித்து நன்மைகள் செய்த இயேசுகிறிஸ்து இந்த இடத்திற்கு வருகிறார். கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள் (மத்தேயு 4.23-25). அப்போது தான் இந்த போதனையை இயேசுகிறிஸ்து கொடுக்கிறார். “இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை” (மத்தேயு 5.1-2).


முக்கியமான சொற்களின் விளக்கம்


தமிழ்

கிரேக்கம்

ஆங்கிலம்

விளக்கம்

அவர் ஏறினார்

ἀνέβη

 (anebē

He went up / ascended

இயேசுகிறிஸ்து ஏறி சென்றார்

திரளான ஜனங்கள்

ὄχλους

 (ochlous)

Crowds /

Multitude

அதிகமான மக்கள் கூட்டம்

மலையின் மேல்

ὄρος

(oros)

Mount  / Hill

மலை குன்று

உட்கார்ந்த பொழுது

καθίσαντος (kathisantos)

Having sat down

இயேசு அமர்ந்திருந்து, (யூத வழக்கம் – லூக்கா 4.20-21) 

சீஷர்கள்

μαθηταὶ (mathētai)

Disciples /

Leaners

இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிருவர்

வாயை

στόμα (stoma

Mouth

தெளிவாக, நேர்த்தியாக பேசுவதற்கு அடையாளம்

உபதேசித்து

ἐδίδασκεν (edidasken)

He was teaching

கற்றுக்கொடுத்தல் அல்லது வழிகாட்டுதல்.



1. இறையரசின் துவக்கவுரை (Inaugurated Speech of God’s Kingdom)


இயேசுகிறிஸ்துவின் மலைப்பிரசங்கம் இறையரசை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணமுடியும். பரலோகராஜ்யம் மற்றும் தேவனுடைய ராஜ்யம் என்ற வார்த்தைகள் இதைக் குறிக்கும்வண்ணம் இங்கே வருகின்றன. இயேசுகிறிஸ்து தனது நற்செய்தி பணியின் துவக்கத்தில், சொன்னது; "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" (மத்தேயு 4.17). இதுவே அவரது இறைபணியின் மைய நோக்கமாக இருந்ததை அவரது வாழ்விலிருந்து அறிந்து கொள்ள முடியும். இந்த மலைப்பிரசங்கத்திலும், முதல் பகுதியான பாக்கியவான்கள் வசனங்களில், பரலோகராஜ்யத்தின் குடிமக்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று கற்றுக்கொடுக்கிறார்.

 

2. இறைமைந்தனின் அருளுரை (Gracoius Speech of God’s Son)

 

இயேசுகிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தில், அவரது கிருபை பொருந்திய சத்தியங்கள் பொதிந்துள்ளன. அவை ஒரு மனிதனுடைய வாழ்வை மாற்றக்கூடியவை. அருளும் உண்மையும் நிறைந்தவராய், வார்த்தையின்று மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணின கிறிஸ்துவைக் கண்டோம் என்று அப்போஸ்தலர் யோவான் சொன்ன வாக்கு உண்மையே (யோவான் 1.14). தம்மை நாடி வந்த மக்கள்மீது கரிசனையுள்ளவராக இயேசுகிறிஸ்து பேசினதை அவருடைய வார்த்தைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

 

3. இறைமக்களுக்கான அறிவுரை (Instructional Speech for God’s People)

 

இயேசுகிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தில், இறையரசின் குடிமக்களுடைய வாழ்க்கையானது, இந்த பூமியில் எவ்வாறு இருக்க வேண்டுமென்று, அவர் திருவாய் மலர்ந்து கொடுத்த அறிவுரைகள் பசுமரத்தாணி போன்றவை. நாம் அவருடைய நுகத்தை (இயேசுவின் போதனையைக் கடைபிடிப்பது) ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் கற்றுக்கொள்ள (மத்தேயு 11.29) இயேசுகிறிஸ்து அழைப்பு கொடுக்கிறார்.

 

இன்றைய சூழலில்…

 

நாம் வாழ்கின்ற இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் பிரதிபலிக்கின்ற ஒரு போதனையாக கிறிஸ்துஇயேசுவின் மலை சொற்பொழிவு இருக்கறது என்றால் அது மிகையாகாது. ஏனென்றால், இதில், கிறிஸ்தவ இறையியல் (Theology), கோட்பாடுகள் (Doctrine), போதகரியல் (Pastoral Theology), நீதிநெறிகள் (Ethics), சமூகவியல் (Social), உளவியல் ஆலோசனை (Counselling), இறுதிக்காலவியல் (Eschatology), சாட்சியுள்ள வாழ்வு (Witnessing Life), திருத்தொண்டு மற்றும் ஊழியத்திற்கான வழிகாட்டல்கள் (Guidelines for the Mission and Ministry) ஆகியவை குறித்து சொல்லப்பட்டுள்ளன.

 

நம்முடைய அஸ்திபாரம் எப்படியுள்ளது?  நம்முடைய சிந்தனைகள் எப்டியுள்ளது? மற்றும் நம்முடைய அணுகுமுறைகள் எப்படியுள்ளது? என்ற கேள்விகளை நம் மனதில் எழுப்பி, இந்த மலைப்பிரசங்க தியானம் இறையரசின் வாரிசுதாரர்களாக நம்மை உருவாக்கிட, நம்மை அர்ப்பணித்து, இயேசுவோடு மலையில் தியானிப்போம்; கற்றுக்கொள்வோம்; கடைபிடிப்போம்.

 

தந்தையாம் கடவுள் சீனாய் மலையில் மோசேக்கு திருவுளம்பற்றினது போல, இறைமைந்தனாகிய இயேசுகிறிஸ்து கலிலேயா மலையில் மக்களுக்கு உபதேசித்தது போல, தூய ஆவியானவர் கல்வாரி மலையடிவாரத்தில் நிற்கும் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்திச் செல்வாராக.

Post a Comment

0 Comments