அதிகமான நீதி
செ. சிமியோன் MA அண்ணா நகர், ஆலங்குளம் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 1, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.
click here to download pdf of Meditation 16
தியான வசனம்: மத்தேயு 5:20
வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
தியானம்
பரலோகம் என்பது அனைவரும் எதிர்பார்க்கின்ற ஒரு உன்னதமான அனுபவம்; அந்த இறையரசிற்குள் பிரவேசிக்க வேண்டுமென்பதே விருப்பம். இந்த வேத பகுதியில் இயேசுவானவர் இறையரசில் பங்குபெறுவதற்கான தகுதியை எதிமறை தொனியில் குறிப்பிடுகிறார். வேதபாரகர் (Scribes), பரிசேயர் (Pharisees) என்பவர்களுடைய நீதியிலும் நம்முடைய நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று தெளிவாய் சுட்டிக்காட்டுகிறார்.
இயேசுவானவர் வாழ்ந்த நாட்களில் வேதபாரகர், பரிசேயர் என்பவர்கள் மோசேயின் ஆகமங்களில் சிறந்து விளங்கியதாக எண்ணியவர்கள். அவர்கள் சடங்காச்சாரமாக மோசேயின் ஆகமத்தை பின்பற்றியதால், இயேசுவானவர் அவர்களை பலமுறை கடிந்து கொண்டிருக்கிறார். எதையும் அவர்கள் மனப்பூர்வமாக, அதாவது உள்ளத்திலிருந்து செய்யவில்லை. ஆகவே இயேசுவானவர் தெளிவாய் சொல்லுகிறார். நம்முடைய நீதி அவர்களுடைய நீதியிலும் அதிகமாய் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நம்மை நாமே தற்பரிசோதனை செய்து பார்ப்போம். நம்முடைய நீதி எப்படிப்பட்டதாக இருக்கிறது? வேதபாரகர் பரிசேயர் பார்க்கிலும் மிகுதியாய் இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
வேதபாரகர்கள் என்பவர்கள் மோசேயின் ஆகமங்களைக் கற்றுத்தேர்ந்து, கற்றுக்கொடுப்பவர்கள். திருச்சட்டத்தை நன்கு படித்து அதனை விளக்குவதில் கை தேர்ந்த, மறைநூல் அறிஞர்கள். பரிசேயத்துவம் என்பது யூத மதத்தில் உள்ள ஒரு குழு அமைப்பு. பரிசேயர் என்றால் பிரித்தெடுக்கப்பட்டவன் எனப் பொருள்.. ரோம அரசோடு நேரடி தொடர்புடைய இவர்கள் நியாயபிரமாணத்தின் சமய சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பரிசேயர்கள் திருச்சட்டங்களை சரியாய் நூல் பிடித்தாற்போல் நடப்பவர்கள். சதுசேயர் யூத மத்தின் மற்றொருப் பிரிவு. இவ்வார்த்தையின் பொருள் பழமைப் பற்றாளர் என்பதாகும். யூத பிரதான ஆசாரியர்கள் சதுசேயர்களாயிருந்தனர். உயிர்த்தெழுதலையும், நித்திய ஜீவனையும் நம்பாத இவர்கள் அதிகாரத்திலும் ஆட்சியிலும் இருப்பவர்கள். தங்களுக்கேற்றாற் போல் திருச்சட்டத்தை மாற்றுபவர்கள். எல்லாரையும் விட நாங்கள் நீதிமான்கள் என இவர்கள் எப்போதும் பெருமை கொள்பவர்கள்.
இந்த வசனத்தில் வரும் கிரேக்க வார்த்தையான περισσευση (perisseuse) என்பதின் அர்த்தம் மிஞ்சிய அல்லது பொங்கி வழிகிற (shall abound more) என்பதாகும். அதாவது, நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும் அதுதான் நாம் பரலோகத்தின் நித்திய வாழ்க்கைக்கு நம்மை தகுதிப் படுத்துகிறது. வேதபாரகர், பரிசேயர் மற்றும் சதுசேயர் என்பவர்கள் தங்கள் சுயநீதியை நம்பி வாழ்ந்தவர்கள். தங்கள் வெளிப்புற நன்னடக்கையினால் இறையரசை பெற முடியும் என்று எண்ணினவர்கள். பவுலடிகளார் இவ்விதமாக சொல்லுகிறார் (ரோமர் 10.3): “எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் இறைநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.” மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் நீதியானது மனிதர்களைக் கவர்ந்தாலும், அது கடவுளுக்கு முன்பாக வெற்றிபெற முடியவில்லை.
ஆனால், அதைக் காட்ட்லும் அதிக நீதியென்பது, கடவுளைச் சார்ந்து நாம் பெறும் நீதியாகும். இன்று அநேகர் வெளிப்புற தோற்றமான, ஞானஸ்நானம், திடப்படுத்தல், ஊழியம், அந்நிய பாஷை மற்றும் நற்கிரியை போன்ற பலவிதமான காரியங்களை தகுதிகளாக சொல்லுகிறார்கள். இவையெல்லாம் தேவையில்லை என்று சொல்லவில்லை; மாறாக இவற்றைக் காட்டிலும் மேலாக இயேசுவானவர் நேரடியாக சொல்லுகிற தகுதியென்னவென்றால், நம்முடைய நீதி, உள்ளான ரீதியாக கடவுளைச் சார்ந்து அதிகமாய் இருக்க வேண்டும். ரோமர் 1.17 சொல்லுகிறது, “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் இறைநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” உண்மையில் இயேசு நமக்கு வித்தியாசமான நீதியை வழங்குவதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
சிந்தனைக்கு…
உலகப் பிரகாரமாக பல காரியங்களை பெறுவதற்கு நாம் சிபாரிசு பெறுகிறோம். ஆனால் பரலோகத்திற்கு நம்மை யாராலும் சிபாரிசு செய்ய முடியாது. அதே நேரத்தில், நாமும் யாரையும் சிபாரிசு செய்ய முடியாது. நம்முடைய பிள்ளைகளை கூட சிபாரிசு செய்ய முடியாது. ஆகவே ஒவ்வொரு நாட்களையும் கிருபையின் நாட்களாக எண்ணி, நாம் நம்முடைய நீதியை அதிகப்படுத்துவதற்கு முறையாக பயன்படுத்துவோம். மேலும், அநேக முறை நாம் மற்றவர்களை பார்த்து நான் அவர்களைவிட பரவாயில்லை என்று சொல்லி நம்மை நாமே தேற்றிக் கொள்கிறோம். மற்ற நபர்களை பார்க்காமல் ஆண்டவராகிய இயேசுவானவரையே பார்த்து நீதியை பெருகச் செய்வோம்.
நீதியில் பெருகி அவரைப்போல மாறுவோம்
நித்தமும் அவரைப்போல வாழ்வோம்
நித்தியமாய் அவரோடு கூட வாழ்வோம்
நீதியின் ராஜா நம்மனைவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
|
0 Comments