Ad Code

17. எல்லைகளைக் கடந்த விசுவாசம் | Faith Beyond Boundaries | அப்போஸ்தலர் 10.35 Acts | திருவசன தெளிவுரை

  Prepared by, Meyego 

தியானம் : 17 / 20.03.2022
தலைப்பு : எல்லைகளைக் கடந்த விசுவாசம்
திருவசனம் : அப்போஸ்தலர் 10:35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். 

முகவுரை

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். திருச்சபையின் வரலாற்றில் நடைபெற்ற மிக முக்கியமான சம்பவங்களில் அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரத்தின் நிகழ்வும் ஒன்றென்றால் மிகையாகாது. திருச்சபையின் விரிவாக்கம் எல்லைகளைக் கடக்க, ஒரு மனிதனுடைய எல்லைகளை கடந்த இறைநம்பிக்கை காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்க உண்மை. ஆம். அந்த மனிதர் கொர்நேலியுவின் பக்தி, விசுவாசம் மற்றும் செயல்பாடுகளைக் குறித்து தான் இந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம். கிறிஸ்தவை ஏற்றுக் கொண்டவர்கள் உபத்திரவங்களை சந்தித்த காலக்கட்டம். இந்த சம்பவம் கிபி 39 - 42 க்கு இடையில் நடைபெற்றிருக்கும். இந்த மனிதரின் விசுவாச வாழ்வின் மகத்துவங்களை இப்போது தியானிப்போம்.

தெளிவுரை

1. இறைவனை எட்டிய விசுவாசம்

அப்போஸ்தலர் 10.1 சொல்லுகிறது, செசரியா நகரில் வாழ்ந்த கொர்நேலியு இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர். இவர் வழக்கமாக ஜெபிப்பது போல், ஜெபித்த போது, இறைத்தூதர் இவர்டைய ஜெபங்களும், தருமங்களும், கடவுளின் திருமுன் சென்றடைந்ததாக (10.4) சொல்லுகிறார். ஆம் இவர் எப்படி முதன் முதலில் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டார் என்று வேதத்தில் இல்லை. தன் இராணுவ பணியினிமித்தம், யார் மூலமாவது அறிந்திருக்க வாய்ப்புண்டு. இறை பயமும் விசுவாசமும் மிக்க இந்த மனிதரின் விசுவாச விண்ணப்பத்திற்கு பதில் கிடைந்தத. இன்று நம்முடைய விசுவாசம் இறைவனை எட்டுகிறதா?

2. இடத்தைக் கடந்த விசுவாசம்

இறைப்பற்று மிக்க கொர்நேலியுவின் விசுவாசம் ஒரு மிகப்பெரிய அசைவை இவர் வாழ்ந்த இடத்தில் கொண்டு வருகிறது. கடவுள் கொடுத்த பதில் (10.5): இப்போது யோப்பா நகருக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும். ஆம் எங்கோ, யாரிமறியாத நிலையில் கடவுளைத் தேடிய இந்த மனிதர் வாழ்ந்த இடத்திற்கு பிரதான அப்போஸ்தலர்களில் ஒருவரான பேதுருவையே கடவுள் வரவைக்கிறார். வசனங்கள் 7 முதல் 24 வரை வாசித்துப் பார்க்கும் போது, ஒரு மனிதனுடைய இறை நம்பிக்கை எவ்வாறு இடத்தைக் கடந்து செயல்படும் என்பதை புரிந்து கொள்ள முடியும். நம் ஆண்டவர் சமீபத்திற்கு மாத்திரமல்ல, தூரத்திற்கும் கூட என்பதை மறந்துவிடக் கூடாது.

3. இனத்தைக் கடந்த விசுவாசம்

நூற்றுக்கதிபதியாகிய கொர்நேலியு ஒரு யூதன் அல்ல; பிற இனத்தவன். ஆகவே தான், பேதுருவின் தரிசனத்தில் (10-15), மிருகங்கள், பறவைகள் நிறைந்த ஒரு கூடு காட்டப்பட்டது. இதன் மூலம், புற இனத்தவரை தீட்டாக கருதக் கூடாது என்பதைக் கடவுள் கற்றுக்கொடுத்தார். அப்போது அங்கு பேதுரு பேசியது (10.34): "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை." ஆம் யூதரென்றுமில்லை; கிரேக்கரென்றுமில்லை. கிறிஸ்துவுக்குள் எல்லாரும் ஒன்றே (கலா 3.28). விருத்தசேதனமில்லாத மனுஷர் திருமுழுக்கு மற்றும் தூயாவி பெற்ற வரலாறு இங்கு ஆரம்பமாகிறது. இறைநம்பிக்கைக்கு எந்தப்பாகுபாடும் இல்லை.

நிறைவுரை

எல்லா இனத்தவரிலும் ஆண்டவருக்கு, அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர் (10.35) என்பதற்கு.கொர்நேலியுவின் வாழ்வு நல்ல சான்று. ஆகவே நாம் எப்படிபட்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும், நமது பின்னணி எப்படியிருந்தாலும், நிலையான இறைநம்பிக்கை இருக்குமென்றால் நிச்சயமா ஒருநாள் அது எல்லைகளைக் கடந்த விசுவாசமாக உருவெடுக்கும். அநேகருடைய வாழ்க்கைக்கு முன் மாதியாக இருக்கும். இறையாசி உங்களோடிருப்பதாக.

Prepared by
Meyego

Post a Comment

1 Comments