தியானம் : 21 / 17.04.2022
தலைப்பு : அதிசயமான உயிர்த்தெழுதல்
திருவசனம் : யோவான் 20:14
இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள், ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் கொண்டு வந்த நாள் தான் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவே. முதலாம் நூற்றாண்டில் தான் ஆரம்பமான கிறிஸ்தவம் இன்று உலகத்தின் பெரிய மார்க்கம் என்றால், அதற்கு மூல காரணம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே. முதன் முதல் உயிர்த்தெழுந்த அதிசயமானவர் இயேசுவே. லாசரு, வாலிபன், யவீரு மகள் ஆகியோர் இயேசுவால் மீண்டும் வாழ்வு பெற்றனர். ஆனால் இயேசுவின் உயிர்ப்போ மரணத்தை இனி என்றும் காணாத அதிசயமாகும். இப்போது, மகதலேனா மரியாள் இயேசுவை முதன் முதலில் கண்ட அதிசய காட்சியைத் தியானிப்போம்.
1. பிரசன்னமான அதிசயம்
இயேசுவின் உடலுக்கு சுகந்தவர்க்கமிட வந்த மகதலேனா மரியாள் மற்றும் அவரது தோழிகள் எதிர்பாராத நிகழ்வு அங்கு நடைபெற்றிருந்தது. ஆம், கல்லறையில் இயேசுவின் உடல் இல்லை. "அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார்" என்று இறைத் தூதர் சொன்னார். ஆனால் மகதலேனா மரியாள் இயேசுவின் உடலைத் தேடும் முயற்சியில் இருந்தார் (யோவான் 20). அப்போது தான் இயேசு அவளுக்கு பிரசன்னமானார். இது மகதலேனா மரியாளால் புரிந்து கொள்ள முடியாத அதிசயம் (20.14).
2. பயத்தை நீக்கிய அதிசயம்
பயத்தோடு அழுது கொண்டிருந்த மகதலேனா மரியாள் அருகே இயேசு சென்று "மரியாளே" என்றதும் அவள் "ரபூனி" என்றாள் (20.15). மரியாள் இயேசுவைக் கண்டதும் அவள் பயம் நீங்கிற்று. பயந்து கொண்டிருந்த தம் சீடருக்கு இயேசு காட்சியளித்த போது சொன்னதும், "பயப்படாதிருங்கள்." ஆம் இது பயத்தை நீக்கிடும் இயேசுவின் உயிர்ப்பின் அதிசயம்.
3. பலப்படுத்திய அதிசயம்
தம் குருவின் மரணத்தால் தவித்துக் கொண்டிருந்த மகதலேனா மரியாள் உட்பட அனைவருக்கும் இயேசுவின் உயிர்ப்பு ஒரு தைரியத்தை கொடுத்தது. மகதலேனா மரியாள் தான் ஆண்டவரைக் கண்டதையும், அவர் சொன்னவற்றையும் சீடர்களுக்கு அறிவித்தாள் (20.18). இந்த பெலப்படுத்துதல் இயேசுவின் உயிர்ப்பின் காட்சியால் நடந்த அதிசயமே.
நிறைவுரை
அதிசயமாக உயிர்த்தெழுந்த அதிசயமானவர் நம்மையும் உயிர்ப்பித்து, நித்திய வாழ்வை அருளிச் செய்வெனென்று நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று சொன்ன இயேசு அதின் முதற்பலனாக தமது உயிர்ப்பை சாட்சியாக்கினார். அந்த அதிசயம் அவரை நம்புவோரின் வாழ்வில் நிச்சயம் உண்டு. நித்திய நித்திய காலமாக அவரோடு வாழும் பாக்கியம் உண்டு. இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments