மலைப் பிரசங்கத்திற்கு ஓர் நிறைவுரை:
இதயந்தோறும் இறையாட்சி
யே. கோல்டன் ரதிஸ் B.A, B.Sc.,B.Th.,
மேலமெஞ்ஞானபுரம் சேகரம்,
CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 3, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.
தியான வசனம் மத்தேயு 7.28 - 29
28இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், 29ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
முகவுரை
“யாரிடம் செல்வோம் இயேசுவே, வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடமன்றோ உள்ளன” என்றாற் போல், இயேசு கிறிஸ்து சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் ஆழமான கருப்பொருளும், உள்ளான மறைபொருளும் இருக்கும். அப்போஸ்தலராகிய தூய மத்தேயு தொகுத்து கொடுத்திருக்கின்ற மலைப் பிரசங்கம் என்பது ஏதோ வெறும் சொற்பொழிவல்ல; மாறாக கிறிஸ்தவ வாழ்வின் கையேடு போல், வழிகாட்டும் உயிருள்ள அருளுரை. கற்பித்தலின் வெற்றி கற்பித்தவரின் கற்பிக்கும் ஆற்றலிலும், கற்றவரின் பின்னூட்டத்திலும் இருந்து அறிந்து கொள்ள முடியும். இயேசுவின் மலைப் போதனையின் முடிவில், அவர் மூலமாக பரம தந்தையின் திருப்பெயர் மாட்சி பெற்றதும் மக்களின் இதயங்களில் இறையாட்சியின் சொல்லாட்சி மலர்ந்ததும் மெய்யே.
தியானம்
அநேக காரியங்களை இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்தப் பிறகு, அதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களின் மனநிலையையும், பின்னூட்டத்தையும் மத்தேயு நற்செய்தியாளர் மத்தேயு 7. 28 & 29 வசனங்களில் குறிப்பிட்டுள்ளார்.
1. இறைமைந்தனின் தனித்துவம்
“…அவர் வேதபாரகாரைப் போல் போதியாமல்…” (மத் 7.28) என்பது இயேசு கிறிஸ்துவின் தனித்துவத்தை மிக தெளிவாக வெளிப்ப்டுத்துகின்றது. வேதபாரகர் என்பவர்கள் யூதர்களில் நியாயப்பிரமாணத்தை நன்றாக கற்று, பிறருக்கு கற்றுக்கொடுப்பவர்களான மறைநூல் அறிஞர்கள் அல்லது மதபோதனை நூலில் ஆசிரியர்கள் ஆவர். அவர்களைக் காட்டிலும் இயேசு சிறந்து விளங்கியதற்குக் காரணம் என்னவென்றால், இயேசுவின் சொற்களும் செயல்களும் ஒன்றுபட்டிருந்தன.
2. இறையரசரரின் அதிகாரம்
“ அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்…” (மத் 7.28) என்பது இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. இது மாம்சீகரீதியான சக்தியல்ல; மாறாக இறையாற்றல் அவர் மீது இருந்தது என்றால் மிகையாகாது. இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? என்று சொல்லி தான், கேள்வியின் நாளில் இயேசுவிடம் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மற்றும் மூப்பரும் கேட்டத்தை நாம் அறிந்திருக்கிறோம் (மாற்கு 11.27-28). ஏனெனில் அவர் தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு தூயாவியாரின் ஆற்றலில் எல்லாவற்றையும் தைரியமாக செய்தார்.
3. இறைமக்களின் ஆச்சரியம்
“ஜனங்கள் அவருடைய போதனையைக் குறித்து ஆச்சரியப்பட்டனர்” (மத் 7.29) என்பதை, இந்த உன்னதமான மலைப் போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர் என்று விளங்கிக்கொள்ளக் கூடும். மக்களின் அதிர்ச்சியையும், வியந்து போன மனநிலையையும் குறிக்கிறது. திரளான மக்களின் இதயங்களை ஆட்கொண்டிருக்கும் இந்த மலைப் பிரசங்கம்.
நிறைவாக…
நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் எத்தனையோ பேர் வாழ்ந்து மறைந்து விட்டனர்; எத்தனையோ பேர் வாழ்ந்தும் கொண்டிருக்கின்றனர்; ஆனால், தமது வாழ்வையே இறையரசின் நற்செய்தியாக்கி, இறை-மாதிரியை முழு மனுக்குலத்திற்கும் வாழ்ந்து காட்டியவர் யாரென்றால், விண்ணின் மாட்சியை விட்டு, மண்ணிற்கு வந்த இயேசு பெருமான் ஒருவரேயென்றால் மிகையாகாது. இறையரசின் நிறுவனராகிய அவரின் தனித்துவமும், அதிகாரமும் அவருடைய போதனையிலும், செயல்பாட்டிலும் ஒருங்கே காணப்பட்டன. இறைமக்களின் இதயங்கள்தோறும் இடம்பிடித்த உலக மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மலைப் பொழிவும் அநேகரது இதயங்களைத் தெளிவாக்கி ஒளிரச் செய்தது என்பது மெய்யே.
இந்த 2022 ஆம் ஆண்டின் தவக்காலத்தில், நாற்பது நாட்களாய், நம்முடைய போதகரின் மலைப்பிரசங்கத்தை தியானித்த நம்முடைய இருதயங்கள் எப்படியிருக்கிறது என்று சோதித்துப் பார்ப்போம். நம் இதயங்களில் இறையாட்சி மலர்ந்தால் மட்டுமே, பிறரது வாழ்விலும் இறையரசை பறைசாற்ற முடியும். இறையரசரின் உரையில் வியப்போடு நிற்காமல் இதயப் பூர்வமாக வாழ்வாக்குவோம். மகாத்மா காந்தியடிகள் சொன்னது: “இயேசுவின் மலைப்போதகம் எனக்குப் பிடிக்கும்; அவரது கொள்கையைப் பின்பற்றுவேன்; ஆனால், கிறிஸ்தவர்களிடத்தில் இயேசுவைக் காண முடியவில்லை.” ஆம், இன்றைய சூழலிலும், இறையரசின் குடிமக்களாகிய நாமும், இறையரசின் நற்செய்தியை வாழ்வாக்காமல், உலகத்தார் போல வாழ்வது வருந்தத்தக்கது.
இறைமைந்தன் சொன்ன விதைக்கிறவன் உவமையில் வரும், வழியருகே விதைக்கப்பட்டவர்கள் (மத்தேயு 13.09) இறையரசின் வசனத்தைக் கேட்டும், உணராதிருக்கும் போது, பொல்லாங்கன் வந்து, அவர்கள் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக் கொண்டது போலிராமல், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்களாய் திருவசனத்தைக் கேட்கிறவர்களாயும், உணருகிறவர்களாயுமிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தர நம் அருள்நாதர் நம்முடைய இதயங்களில் இறையாட்சியை மலரச் செய்வாராக. இறையாசி உங்களோடிருப்பதாக, எல்லாம் வல்ல இறைவன் போற்றி!!! ஆமென்.
0 Comments